ஆலயக்கலைப் பயிற்சிமுகாம் மீண்டும்….

ஜெயக்குமார் அளித்துவரும் ஆலயக்கலைப் பயிற்சி பற்றி பெரும் பரவசத்துடன் பங்கேற்றவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை வியப்புடனும் மகிழ்வுடனும் பார்க்கிறேன்.

ஜெயக்குமார் அவரிடம் பயின்றவர்களுடன் ஹம்பிக்கு ஒரு கலைப்பயணம் மேற்கொண்டார். அடுத்து உடனே அஜந்தாவுக்கு ஒரு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். மெல்ல மெல்ல அது ஒரு கலைச்சமூகமாக உருத்திரண்டுகொண்டிருக்கிறது.

உண்மையில் நம் வாழ்க்கையில் நம் பெற்றோரால், கல்விநிலையங்களால் வஞ்சமிழைக்கப் பட்டிருக்கிறோம். எந்தக் கலையும், எந்த இலக்கியமும், எந்த மரபும் நமக்குச் சொல்லித் தரப்படவில்லை. ஆகவே பிழைப்பு தவிர எதுவுமறியாத கும்பலாக நாம் ஆகிவிட்டிருக்கிறோம். பிழைப்பு ஒருவகையில் உறுதியாயிற்று என்றால் அதன் பின் வாழ்நாளெல்லாம் காத்திருப்பது பெரும் வெறுமை.

நம்மைச்சூழ்ந்து மாபெரும் கலைப்ப்பொக்கிஷங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஒரு மாபெரும் கலைக்கூடம். உலகமெங்குமிருந்து அவற்றை வந்து பார்த்துச் செல்கிறார்கள். நம்மால் அவற்றை பார்க்கமுடிவதில்லை. ஏனென்றால் நம் விழிகள் கலைப் பார்வையற்றவை. நமக்கு எந்த அறிமுகமும் இல்லாத ஒரு பொன்னுலகம் நம்மருகே இருந்துகொண்டே இருக்கிறது.

ஓர் எளிய அறிமுகம், ஒரு முறையான பயிற்சி போதும் நம் கண்கள் திறந்துகொள்வதைக் காணலாம். ஏனென்றால் நாம் ஏற்கனவே நம் ஆழ்மனதில், நம் கனவில் இவற்றை அடைந்துள்ளோம். நம் மொழியினூடாக, நம் பண்பாட்டினூடாக. மேலே இருக்கும் சாம்பலைச் சற்று விலக்குவதுதான் இப்பயிற்சி. ஒரு புதிய உலகம் தெரியலாகிறது. சிற்பங்கள் சடென்று பொருள்கொள்கின்றன.

அத்தகைய கலைக்கல்வி இப்பயிற்சி. இத்துறையில் இன்று தமிழகத்திலிருக்கும் முதன்மை நிபுணர் ஒருவரால் அளிக்கப்படுவது. சற்று நம்மை கல்விக்கு ஒப்புக்கொடுத்தாலே போதுமானது அதை அடைய.

மீண்டும் ஒரு மூன்றுநாள் பயிற்சி. பிப்ரவரி 2, 3, 4 தேதிகளில். (வெள்ளி சனி ஞாயிறு )

ஆர்வமுள்ளவர்கள் எழுதலாம் [email protected] 

முந்தைய கட்டுரைஆலயக்கலை, கடிதம்
அடுத்த கட்டுரைஆலயக்கலை கடிதம்