ஜெபமோகன்?

பைபிள் அறிமுக வகுப்புகள்- அறிவிப்பு

சில முகநூல் காழ்ப்புகளை என் பார்வைக்குக் கொண்டுவந்தனர். என்னை ஜெபமோகன் என்று வசைபாடி, பணம் வாங்கிவிட்டதாக அவதூறு செய்திருந்தனர். ஜெபமோகன் என்று சொல்வதில் இழிவெல்லாம் ஒன்றுமில்லை. ஜெபம் செய்யக்கூடியவன்தான்.

என் ஆச்சரியம் என்னவென்றால் தமிழில், கிறிஸ்தவ எழுத்தாளர்களை கணக்கிலெடுத்துக் கொண்டாலும்கூட ஏசுவைப் பற்றி நிறைய எழுதியவன் நான்தான். கதைகள், கட்டுரைகள். அதன்பிறகும் இவர்களுக்கு இந்த கலாச்சார அதிர்ச்சி உருவாகிறதென்றால் என்ன அர்த்தம்? பெயர் தெரிந்துவைத்திருக்கிறார்கள், வசைபாட தருணம் வரும்போது தவறவிடுவதில்லை- அவ்வளவுதான்.

மானுட ஞானத்தை, உலக இலக்கியப் பரப்பை, ஓவியம் சிற்பம் உள்ளிட்ட கலைகளை அறிவதற்கு மதங்களின் மீதான பயிற்சி இன்றியமையாதது என்று எப்போதுமே சொல்லிவருகிறேன். ஏனென்றால் சென்றகால ஞானம் முழுக்க மதங்களாகவே தொகுக்கப்பட்டுள்ளது. மதங்களை வரலாறாக, இலக்கியமாக, கலையாக, தத்துவமாக, ஆன்மிகமாக அறிந்துகொள்ளவேண்டும்.

நித்ய சைதன்ய யதியின் பயிற்றியலில் என்றும் பைபிள் இருந்தது. அவர் பைபிள் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். பைபிளை அறியாமல் மேலையிலக்கியத்தை, மேலைக் கலையை, மேல்நாட்டு சினிமாவைக்கூட அறிந்துகொள்ள முடியாது. பைபிளின் மாபெரும் குறியீட்டு- ஆன்மிக வெளியிலிருந்தே அவை உருவாயின. பைபிளை மறுக்கும் தரப்புகள்கூட.

ஓர் அறிவியக்கவாதி பைபிளை அறிந்தாகவேண்டும். அதன்பொருட்டே இவ்வகுப்புகள். பைபிளை அறியாத ஒருவரால் தல்ஸ்தோய் அல்லது தஸ்தயேவ்ஸ்கி அல்லது தாமஸ் மன் அல்லது நிகாஸ் கஸண்ட் ஸகீஸ் அல்லது செக்காவை எப்படி புரிந்துகொள்ள முடியும்? நம்மில் பலருக்கு உண்மையிலேயே எந்த புரிதலும் இல்லை, சும்மா ஒரு குத்துமதிப்பான ஞானம்தான்.

இதேபோல இஸ்லாம் பற்றியும் வகுப்புகள் உருவாக்க ஆர்வமுண்டு. நான் உத்தேசிப்பது ஓர் ஒருங்கிணைந்த அறிதலை. அதை உரிய ஆசிரியர்களிடமிருந்து கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி அளிக்கிறேன். பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு நல்லது. அப்படி ஒரு வாய்ப்பே இல்லை என்னும் நிலை அமையக்கூடாது, அவ்வளவுதான்.

ஒரு நண்பர் சாமானிய இந்து வாசகரான அவருக்கு இதனால் என்ன பயன் என கேட்டிருந்தார். நீங்கள் நம் பொதுச்சூழலில் புழங்குபவர் என்றாலும்கூட பைபிள் பற்றிய ஓர் அறிதல் ஒரு நல்ல உரையாடல் தொடர்புக்கு என்றும் உதவுவது. ஐரோப்பியர், கொரியர் போல கிறிஸ்தவர்களை நாம் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். அவர்களின் மதம் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாமலிருப்பதென்பது பெரிய இழிவு.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஏசுவை கும்பிடுபவர்கள் என்பதற்கு அப்பால் கிறிஸ்தவர்கள் பற்றி ஒன்றுமே தெரியாது. ஒருவர் பிற தரப்பினரைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார் என்பதே  அவர் நாகரீகமானவரா என்பதை முடிவுசெய்கிறது. அதை அவருக்குச் சொன்னேன்.

முந்தைய கட்டுரைஆலயக்கலை, கடிதம்
அடுத்த கட்டுரைபைபிளை அறிதல், கடிதம்