கல்வியும் சோலையும்

அன்புள்ள ஜெ,

நேர்க்கல்வி பற்றிய கடிதத்திற்கு நன்றி.

ஆனால் இக்கல்வியையே ஏன் நகரங்களில், எளிதாக வந்துசெல்லும்படி அமைக்கக்கூடாது? நான் இதை தெளிவுபடுத்திக்கொள்ளவே கேட்கிறேன். சீண்டுவதற்காக அல்ல

ஆனந்த்ராஜ்

அன்புள்ள ஆனந்த்ராஜ்,

முதலில் மெய்யான கல்வி என்பது ‘டோர் டெலிவரி’ செய்யப்படும் நுகர்பொருள் அல்ல. அதற்கு நீங்கள் என்ன பதிலுக்குக் கொடுக்கிறீர்கள் என்பதும் முக்கியம். நீங்கள் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் பொருளுக்கும் பத்து ரூபாய் கொடுத்து வாங்கும் பொருளுக்கும் வேறுபாடுண்டு இல்லையா? உங்கள் வசதிக்காக நடத்தப்படும் இடங்களில் அந்த மதிப்பை உங்கள் மனம் அக்கல்விக்கு அளிக்காது. நீங்கள் தேடிச்சென்றால் உருவாகும் மதிப்பு வேறுவகையானது.

நகரங்களில் வகுப்புகள் நடத்தலாம், ஆனால் நகரங்களுக்குள் அதற்கு வசதியான இடம் அமைவது கடினம். மிகப்பெரிய அமைப்புகளுக்கே அது இயல்வதாகும். ஒரு நல்ல கல்விச்சூழல் மரங்கள் சூழ, அமைதியான இடத்தில் இருக்கவேண்டும்.

ஏன் மெய்யான ஒரு கல்வி அதற்கான சூழலில் அமையவேண்டும்? மரங்களும் இயற்கையும் சூழ்ந்த இடம் அளிக்கும் அமைதியும் கூர்நிலையும் பிற இடங்களில் அமையாது. கல்வி நிகழும் இடம் அதற்கென்றே அமைந்த இடமாக இருக்கவேண்டும். பிற செயல்களுடன் அது தொடர்புற்றிருக்கக் கூடாது. மனம் அதைக் கல்வியுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

இயற்கை, குறிப்பாக தன்னிச்சையாக வளர்ந்தெழுந்த காடு, கல்விக்கு மிக அவசியமானது. இது இங்கு பல ஆயிரமாண்டுகளாக இருந்துவரும் மரபு. எல்லா தத்துவ, மெய்ஞானக் கல்வியும் காடுகளிலேயே நிகழ்ந்துள்ளன. ஆரண்யகங்கள் (காடுகள்) என்றுதான் இந்து தத்துவஞானத்தின் தொடக்கநூல்களுக்குப் பெயர். உலகமெங்கும் அப்படித்தான். மேலைநாடுகளில் மிக அற்புதமான வனத்தங்குமிடங்களில்தான் நவீனக்கல்விமுகாம்களே நிகழ்கின்றன.

அத்துடன், ஒரே மனநிலைகொண்டவர்கள் வந்துகூடுமிடமாகவும் அது அமையவேண்டும். நட்புச்சூழல் கல்வியில் அளிக்கும் ஊக்கமும் ஒருங்கிணைவும் மிகமிக அரிதானவை.

ஜெ

முந்தைய கட்டுரைதியானத்தின் தேவையைப் பற்றி…
அடுத்த கட்டுரைமுழுமைக் கல்வியின் அவசியம் என்ன ?