கூடியிருந்து கற்றல்…

அன்புள்ள ஜெ,

என்னுடைய பிரச்சினை என்பது என்னால் புதிய மக்களுடன் பழக முடியாது என்பதுதான். எனக்கு தத்துவம் பயில ஆர்வமுண்டு. இந்திய தத்துவ நூல்கள் பலவற்றை படித்ததும் உண்டு. ஆனால் தத்துவ வகுப்புகளுக்கு வருவதற்காக மனத்தடை உள்ளது. நான் என்ன செய்யவேண்டும்?

எம்.

அன்புள்ள எம்

நீங்கள் யார் என்பதே கேள்வி. நீங்கள் ஒரு துறவியாக வேண்டுமா? அந்த மனநிலையில் இருக்கிறீர்களா? அது உங்கள் அறுதி முடிவா?

அல்லது நீங்கள் உலகியலில் இருக்கவே விழைகிறீர்களா?

முதல் கேள்விக்கு ஆம் என்றால் நீங்கள் ஒரு குருவுடன் சென்று சேர்ந்துகொள்ளவேண்டும். அக்குருகுலத்தில் தங்கி, குருவிடம் நாள்முழுக்க உடனிருந்து தத்துவம் கற்கவேண்டும். குருவின் பிற மாணவர்களுடன் தேவையான அளவு தொடர்பு கொண்டால் போதும். தனிமை அந்த அளவு ஏற்கப்படுகிறது

உலகியலில் இருப்பவர் என்றால் இணையுள்ளம் கொண்ட பிறருடன் இணையாமல் தத்துவத்தை கற்க முடியாது. பிறரை ஏற்கவே முடியாதென்றால் தத்துவத்தை மறந்துவிடுவதே மேல். ஏனென்றால் தொடக்க நிலையில் இணையுள்ளம் கொண்டவர்களுடன் உடனமர்ந்தே கற்க முடியும். அக்கல்விக்கு அச்சூழலில் கூட்டாக உருவாகும் தீவிரமனநிலைகள் இன்றியமையாதவை. தொடக்கநிலை கடந்தால் பிறருடன் விவாதிக்காமல் தத்துவத்தை புரிந்துகொள்ள முடியாது.

தனியாக, நூல்கள் வழி ஒருவர் கற்பது தத்துவம் அல்ல. தத்துவம் பற்றிய செய்திகளை அறிவது தத்துவக் கல்வி அல்ல. தத்துவம் என்பது ஒரு மனநிலை. அதை அடைவதே தத்துவக்கல்வி. அதற்கு இவ்விரு வழிகள் மட்டுமே உள்ளன

ஜெ

முந்தைய கட்டுரைஆயுர்வேதமும் அறிவியக்கமும்
அடுத்த கட்டுரைஆலயங்களில், கடிதம்