ஆயுர்வேதமும் அறிவியக்கமும்

ஆயுர்வேதப் பயிற்சிகள் எதற்காக?

அன்புள்ள ஜெ

ஆயுர்வேதத்தை ஏன் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் என்னும் குறிப்பு உதவியானது. ஆனால் ஓர் இலக்கியவாதி அல்லது மெய்யியலில் ஆர்வம் கொண்டவர் ஏன் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும்?

எம்.ரகு

அன்புள்ள ரகு

எல்லா மருத்துவமுறைகளுக்கும் உலகை, வாழ்க்கையை அணுகுவதற்கான தத்துவநோக்கு ஒன்று இருக்கும். அது அறிவியக்கத்தில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது.

ஆயுர்வேதத்திற்கு அப்படி முழுமையான ஒரு வாழ்க்கை அணுகுமுறை உண்டு. திரிதோஷங்கள் (மூன்று குறைபாடுகள்) கொள்ளும் சமநிலை என அதைச் சுருக்கமாகச் சொல்லலாம். அது உடல் சார்ந்த கொள்கை மட்டும் அல்ல. பிரபஞ்சம் சார்ந்த கொள்கை, இயற்கை சார்ந்த கொள்கை, உணவு சார்ந்த கொள்கை, உறவுகள் சார்ந்த கொள்கை. அதை அறிவது ஒரு பெரும் திறப்பு. எந்த நவீனச் சிந்தனையாளனும் அதைத் தவறவிட முடியாது. இன்றைய உலகின் புதிய சிந்தனையாளர்களுக்கு இது தெரியும்.

ஆயுர்வேதம் இந்திய மெய்யியலுடன் ஆழமான தொடர்பு கொண்டது. உண்மையில் இந்திய யோகமுறைகளின் இரண்டு பெரும் பிரிவுகளான பதஞ்சலி யோகம், தாந்த்ரீக யோகம் (குண்டலினி முறை) போன்றவை ஆயுர்வேதத்தை சார்ந்தே தங்கள் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. ஆயுர்வேதக் கலைச்சொற்களையே அவை கையாள்கின்றன. (உதாரணம் பிராணன், வாசி போன்றவை). ஆயுர்வேதத்தை அறியாமல் இந்திய யோகமுறையை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது.

ஆனால் ஆயுர்வேத அடிப்படைகளை ஒரு பொதுவான மனிதருக்கோ ஒரு சிந்தனையாளருக்கோ ஒரு சாதாரண ஆயுர்வேத மருத்துவர் கற்பிக்க முடியாது. ஆயுர்வேத மருத்துவரும் இலக்கியவாதியுமான ஒருவரே கற்பிக்க முடியும். சுனில் கிருஷ்ணன் இன்று அப்படிச் சொல்லத்தக்க ஒரே ஆளுமை. இலக்கியவாதியான ஆயுர்வேத அறிஞர். இந்திய மெய்யியல் அறிமுகம் கொண்டவர்.

அப்படி எனக்குத் தெரிந்து இருந்த முன்னோடி டாக்டர் மகாதேவன், தெரிசனங்கோப்பு. பலரை அவர் நோக்கி அனுப்பியிருக்கிறேன். பலருக்கு அவர் அற்புதமான மீட்பை அளித்திருக்கிறார். நண்பர்களுக்குத் தெரியும். அண்மையில் மறைந்த மகாதேவன் பற்றி காலச்சுவடு இதழ் ஒரு தனி அஞ்சலிப்பகுதி வெளியிட்டுள்ளது. அது மருத்துவ இதழ் அல்ல, அறிவியக்க இதழ். அவரை ஒரு அறிவியக்கவாதியாகவே அணுகவேண்டும். மகாதேவனின் தந்தையை சுந்தர ராமசாமி அப்படித்தான் எனக்கு அறிமுகம் செய்தார்.

டாக்டர் மகாதேவன் எனக்களித்த அகப்புரிதல் மிகமிகப்பெரிது. தத்துவம்- யோகம் சார்ந்த புரிதல். எனக்கு எந்த நோயும் இதுவரை இல்லை, நான் நோயாளியாக அவரை அணுகவுமில்லை. நான் அவரிடம் பேசியதெல்லாம் ஆயுர்வேதம் என்னும் மெய்யியல் பற்றி. அதைச்சார்ந்து மிகப்பெரிய நூல்களை எழுதியுள்ளார். இன்று அவரைப்போலவே ஒரு முழுமையான பார்வையுடன் செயல்படுபவர் சுனில் கிருஷ்ணன். ஆயுர்வேதம் பற்றிய நூல் ஒன்றின் தயாரிப்பில் உள்ளார்

ஜெ

சுனில் கிருஷ்ணன் நடத்தும் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள்

மே 31 ஜூன் 1, 2 தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]


 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

 

முந்தைய கட்டுரைநாத்திகன் கோயிலுக்குச் செல்லலாமா?
அடுத்த கட்டுரைகூடியிருந்து கற்றல்…