
அன்புள்ள ஜெ
பறவை பார்த்தல், தாவரங்களை அறிதல் போன்ற வகுப்புகளை நீங்கள் ஒருங்கிணைப்பது எனக்கு சற்று விந்தையாக உள்ளது. இந்த வகையான பயிற்சிகள் அறிவியல் சார்ந்தவை. நீங்கள் இங்கே கற்பிக்க நினைப்பவை இலக்கியம், கலை, தத்துவம் ஆகியவை இல்லையா? அறிவியலை அறிவியல் முறைப்படி கற்பதுதானே சரியான விஷயம்?
சாருலதா கிருஷ்ணா
அன்புள்ள சாருலதா,
நாங்கள் கற்பிக்கும் பறவைபார்த்தல், தாவரங்களை அறிதல் ஆகியவை அறிவியல் அல்ல. அறிவியல் என்பது தனக்கான கொள்கைகள், வழிமுறைகள் கொண்டது. பறவைகள் மற்றும் தாவரங்களின் அறிவியல் பெயர்கள், பயன்பாடுகள், வகைப்பாடுகள், இயல்புகள் ஆகியவற்றை அறிவியல் கற்பிக்கிறது
நாங்கள் அவற்றைக் கற்பிப்பதில்லை. நாங்கள் பறவைபார்த்தல், தாவரங்களை பார்த்தல் ஆகியவற்றைக் கற்பிப்பது ஒரு பொழுதுபோக்காகவும், ஒருவகை கலையாகவும்தான்.
ஏன் இவை தத்துவம் – இலக்கியம் – கலையுடன் இணைக்கப்படுகின்றன? ஏனென்றால் இவை இயற்கையை கூர்ந்து அறிய பயன்படுகின்றன. தத்துவமும் கலையும் இலக்கியமும் இயற்கையுடன் நெருக்கமாகத் தொடர்புகொண்டவை. நம்மைச்சுற்றியுள்ள உயிர்க்குலத்தை அறிவதே நம்மை அறிவதன் முதல்படி. இயற்கையே இலக்கியம், கலை, தத்துவம் ஆகியவற்றுக்கான படிமங்களை அளிக்கிறது
அத்துடன் இவை ஒரு வகையான தியானப் பயிற்சிகளும்கூட. இன்று எதைக் கற்கவேண்டும் என்றாலும் முதன்மையாகத் தேவைப்படுவது உளக்குவிப்பு. தன் அகத்தை தானே கவனிக்கும் தன்மை. அவை பறவைபார்த்தல், தாவரங்களைப் பார்த்தல் ஆகியவற்றினூடாக மிக இயல்பாகக் கைகூடும்.
ஜெ