பூன் தத்துவ முகாம், குருப்பிரசாத்

ஆசிரியருக்கு வணக்கம்

கூன் தத்துவ முகாம் 2025-க்கு வர வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய அபூர்வம். சியாட்டில் நண்பர்கள் பிரதாப், ஸ்ரீனிசங்கர், மதன் மற்றும் சௌந்தர் ஆகியோருக்கு இதற்காக நன்றி சொல்ல வேண்டும். முகாம் மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது.

நான்கு நாட்களும் பெரும் தவம் போல இருந்தது. “தத்துவம் என்றால் என்னஎன்ற அடிப்படையில் தொடங்கிய இந்தப் பயணம், உங்கள் கரம் பிடித்து ஒவ்வொரு அடியாக சென்றது சுவாரஸ்யமாகவும் அகத்திறப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு கருத்துக்கும் நீங்கள் அளித்த விளக்கங்கள், சமகால உதாரணங்கள் தத்துவக் கருத்துகளை எளிமையாக உள்வாங்க உதவின. இந்திய ஞான மரபின் பெரும் சித்திரம் மனத்தில் பதிந்ததுஅது ஒரு பெரும் வரமாக உணர்ந்தேன். கையில் வரைபடம் கிடைத்தது போல் ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது.

தத்துவத்தின் வரலாற்றைப் கற்காலம் தொடங்கி நவீன காலம் வரை எடுத்துச் சென்ற உங்களின் பயணம் பிரம்மாண்டமும் வியப்பும் நிறைந்தது. அதே நேரத்தில் உள்ளதை உள்ளபடி உணர்ந்திட உள்ளம் பழகியது.  உங்களின் உணர்வு பூர்வமான சொற்களில் கற்கால மனிதனாய் சில நொடிகள் உணர்ந்தேன்; ஆதி மனிதனைப் போல ஆகாயத்தை வியந்து பார்த்தேன். அரசும் பேரரசும் அமைகையில் கிடைக்கும் பாதுகாப்பில் செவ்வியல் உருவாகியதையும், முகலாய மற்றும் ஆங்கிலேய ஆக்கிரமிப்பின் இருளிலும் ஒளிர்ந்த வளர்ச்சிகளையும் காண முடிந்தது. உங்களின் உணர்ச்சி மிகு உரைகளாலும் தெளிவான விளக்கங்களாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் வாழ்ந்ததுபோல் உணர்ந்தேன். ஆதிமனிதன் எழுப்பிய அதே ஒலியை நானும் எழுப்பியதுபோல் தோன்றியது. பனியூழிக் காலங்களைத் தாண்டி, பித்தநிலை நினைவுகளைத் தொட்டு, பரமனைபிரமத்தைத் தேடிக் கண்ட பயணத்தை உணர முடிந்தது.

இந்தியாவின் ஞானப் பயணத்தில் சங்கரரும் விவேகானந்தரும் அளித்த பங்களிப்பை நீங்கள் விவரித்ததை நேரில் கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அது மிகுந்த உணர்ச்சிப் பெருக்கான தருணமாக இருந்தது. சிந்தனையின் வளர்ச்சி மற்றும் வரலாற்றில் ஒரு தெளிவு கிடைத்தது. Blueprint, high-level design என்பதுபோல ஒரு பெரிய சித்திரம் மனதில் வடிவம் பெற்றது.

உலகத்தைச் சுற்றி அதன் தொன்மையும் வேதங்களின் தன்மைகளையும் அறிந்தது பார்வையை விரிவாக்கியது. நான்கு நாட்களில் எடுத்த குறிப்புகள் முதற்கட்டமாகவே 40 பக்கங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன; அதை இன்னும் ஆழ்ந்து விரிவாக்க எண்ணம் உள்ளது.

இந்த நான்கு நாட்களும் தாங்கள் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் வகுப்பில் பேசினீர்கள். அதுமட்டுமின்றி தேநீர் இடைவேளை உரையாடல்கள், உணவு நேர உரையாடல்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் அமைந்தன. உங்களின் அர்ப்பணிப்பும் தீவிரமும் வியக்கவைக்கிறது; எங்களை ஊக்குவிக்கிறது. நிச்சயமாக இது தத்துவ வகுப்பு மட்டுமல்ல செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி தீவிரமாக அனுகுவது, முழு கவனத்துடன் எப்படி பணிகளை செய்வது என்ற பயிற்சியும் தான்.  அதிலும் இவை போதனையாக அன்றி உங்களின் செயல் விளக்கமாக அமைந்தது.

வகுப்பில் வந்திருந்தவர்களின் வாசிப்பு அனுபவங்கள் மலைக்க வைத்தன. சமகாலத்தில் இதனைப்போன்ற வாசிப்பும், இலக்கியப் படைப்பும் கொண்ட பலரை சந்தித்ததும் பெரும் மகிழ்ச்சி. என் வாசிப்பையும் எழுத்தையும் மேலும் வளர்த்துக்கொள்ள அது பெரும் ஊக்கமாக அமைந்தது.

எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். மனமகிழ்ந்த நன்றிகள்.

நீங்கள் சியாட்டிலுக்கு வந்தபோது இருமுறை சந்தித்தது நினைவில் உள்ளது. உங்கள் கதைகள், கட்டுரைகள் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தத்துவம் மீதான ஆர்வத்துடன் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் இந்திய ஞானம், இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற இரு புத்தகங்களையும் படித்திருக்கிறேன்சியாட்டில் இலக்கிய நண்பர்களுடன் தொடர்ந்து பயணிக்கிறோம், உங்களின் சியாட்டில் வருகையும், இந்த பயிற்சி முகாமும் எங்களுக்கு பெரும் உற்சாகத்தை வழங்கியுள்ளது.

குருப்பிரசாத்

சியாட்டில் இலக்கிய மாலை

முந்தைய கட்டுரைஇசைநாட்கள்