
கொன்றை மரத்தடியில் அழகுடன் கொலு வீற்றிருக்கும் கலைவாணியை வணங்கி ஆசிரியர் ஜெயகுமாரின் அருகமர்ந்து நாங்கள் கர்நாடக இசை கேட்கும் பயிற்சி வகுப்பைத் தொடங்கினோம்.
எந்தவிதமான மரபிசைப் பயிற்சியும் இல்லாத ஒரு பெரும் கூட்டத்திற்குக் கர்நாடக இசை கேட்கும் பயிற்சி அளிப்பதென்பது தண்ணீரை அறியாதவர்களுக்கு, கடலை விளக்குவது போன்றதொரு கடின முயற்சியாகும். ஆயினும் ஆசிரியர் ஜெயகுமார் இந்த முயற்சியில் முழுவெற்றி அடைந்தார் என்பதே எங்கள் அனைவரின் எண்ணம்.
“தேவ தேவ கலயாமிதே…………” என்ற சுவாதி திருநாள் கிருதியுடன் ஆரம்பித்து, இசை கற்கும் மாணவர்கள் அனைவருக்கும் பலபாடமாக சொல்லித் தரும் மாயாமாளவகௌளை ராகத்தை ஆசிரியர் அறிமுகப்படுத்தினார். பின்னர் அதே ராகத்தில் அமைந்த “ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ” என்ற முத்துத் தாண்டவர் கீர்த்தனையைக் கேட்கச் செய்தார். நாங்கள் கொஞ்சம் விழி பிதுங்கிய நேரத்தில் “பூங்கதவே தாள் திறவாய் ……” என்று எங்கள் காதுகளின் தாழ்ப்பாள்களைக் கொஞ்சம் திறந்து விட்டார். கீர்த்தனையிலும், சினிமா பாடலிலும் ராகத்தின் ஸ்வரங்கள் எப்படி ஒரே மாதிரி ஒழுகிச் செல்கின்றன என்பதை விளக்கினார். பின்னர் பல கீர்த்தனைகளையும்,, சினிமா பாடல்களையும் கேட்க வைத்து , மாயாமாளவகௌளை எங்களுக்கு முன்னரே அறிமுகமான ராகம் போன்று உணர வைத்தார்.
இரண்டாம்நாள் காலையில் கேட்ட பௌளி ராக நாகஸ்வர இசை ஒரு கோவிலுக்கு சென்ற அனுபவத்தைத் தந்தது.
ஆசிரியர் மாயாமாளவகௌளை ராகத்தின் சரளி வரிசையைப் (ஸ்வர ஆவளி) பாடி, எங்களையும் பாட வைத்தார். ஆரம்பத்தில் கொஞ்சம் அபஸ்வரமாகக் கேட்டாலும் ( அட….. நான்கூட ஸ்வரம், அபஸ்வரம் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டேன்……), ஆசிரியரின் மட்டுருத்தலுக்குக் பிறகு அது சுநாதமாக ஒலிக்கத் துவங்கியது. இந்த வகையில் கரஹரப்ரியா ( இது ராமனுக்கு பிடித்த ராகமாம்….), மோஹனம், ரீதிகௌளை, வர்ண ரூபிணி, சங்கராபரணம், கல்யாணி ஆகிய ராகங்களை கேட்டு அறிய வைத்தார். முத்தாய்ப்பாக சங்கராபரண ராகத்தில் அமைந்த , முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய நோட்டுஸ்வர பாடலான “ ஸ்யாமளே மீனாக்ஷி சுந்தரேஸ்வர சாக்ஷி……..” யை எங்கள் அனைவரையும் கூட்டாக பாட வைத்தது இந்த வகுப்பின் உச்சமாக அமைந்தது.
இந்த கேள்விச் செல்வ விருந்தின் நடுவே கர்நாடக இசையில் வரலாறு, ஸ்வரம், ராகம், தாளம், கிருதி, கீர்த்தனை, கச்சேரி பாடும் முறை ஆகியவற்றின் விளக்கம், சங்கீத மும்மூர்த்திகள், தமிழ் மூவர், கர்நாடக இசையின் சிறந்த பாடகர்கள், இளையராஜா இசைக் கோப்பில் செய்யும் அற்புதங்கள் பற்றிய பல தகவல்களையும் கலந்து தந்து உவட்டாமல் இனிக்கச் செய்தார்..
இயல்பாகவே வெள்ளிமலை வகுப்புகளில் மாலை நேர பாட்டுக் கச்சேரி களை கட்டும். இந்தமுறை கேட்கவே வேண்டாம். இசை அறிய வந்தவர்கள், பாடல் மழை பொழிந்தார்கள். முக்கியமாக கனிஅமுதன் என்ற சிறுவன் பாடிய விதமும். அவனது குரலும், இசை ஞானமும், பாடல் வரிகளை பலருக்கும் நினைவூட்டிய விதமும் அசர வைத்தது. இந்திய ஆட்சிப் பணியில் இருப்பவர்கள் நல்ல பாடகர்களாகவும் இருக்க முடியும் என்பதை வந்திருந்த முல்லை முகிலன் மற்றும் மரிய கிருஸ்து தாஸ் நிரூபித்தார்கள்.
இன்று காலையில் காய்கறி வாங்கக் கடைக்குச் சென்ற போது, அருகேயுள்ள அனுமார் கோவிலில் இருந்து ஏம்.எஸ் பாடிய “ ஶ்ரீமந் நாராயண …. ஶ்ரீமந் நாராயண …..” பாடல் ஒலித்தது. அட, ……… சனியன்று காலையில் கேட்ட நாகஸ்வர இசையை போலவே இருக்கிறதே ….. இது பெளளி ராகம் அல்லவா என்று மனம் சிந்திக்கத் தொடங்கி விட்டது. இதை சாத்தியப் படுத்திய ஆசிரியர் ஜெயகுமாருக்கும், ஜெயமோகன் அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
ஶ்ரீவத்ஸன்











