நாவல் பயிற்சி- பாலாஜி ராஜு

ஆசிரியருக்கு,

அமெரிக்காவில் மற்றுமொரு அழகிய இலையுதிர் காலம் உங்கள் வருகையால் அர்த்தத்துடன் கடந்திருக்கிறது. தத்துவ வகுப்புகள் முடிந்து கொலம்பஸ் திரும்பிய இரண்டு நாட்களிலேயே நாவல் பயிற்சி வகுப்புக்காக மீண்டும் மலைகளினூடாக ஏழுமணிநேர சாலைப் பயணம். இடம்ஹெர்ன்டன், விர்ஜீனியா மாகாணம்

கற்றல் மட்டுமே வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும் என்று நீங்கள் பலமுறை எழுதியிருக்கிறீர்கள், பேசியிருக்கிறீர்கள். இதை தத்துவம், நாவல் வகுப்புகளில் கலந்துகொண்ட அனுபவங்களின் வாயிலாக தொகுத்துப் பார்க்கையில் இன்னும் ஆழமாக உணர்கிறேன்.

நாவல் பயிற்சி வகுப்பின் உச்ச அனுபவமாக என்னில் எஞ்சுவது, ‘The Master Christian’ நாவலின் தரிசனத்தை, தருணங்களை எங்கள் முன் பகிர்ந்த உங்களில் எழுந்த உணர்ச்சிகரமான உடல்மொழியும், முகபாவமும்தான். இதே உணர்வெழுச்சியை தத்துவ வகுப்பில் விவேகானந்தர் குறித்தும், வேதத்தை இன்று வரை நம்மிடம் சேர்க்கும் அன்றாட மனிதர்களின் பங்கை விவரிக்கையிலும் உங்களிடம் கண்டேன்.

நாவல் பயிற்சி வகுப்பை இப்படிச் சொல்லி முடித்தீர்கள், “நீங்கள் எழுதுவது, தொடங்குவது குறு நாவலாக இருக்கலாம். ஆனால், உங்கள் முயற்சி ஒரு பெரும் நாவலின் தரிசனத்தை நோக்கியே இருக்கட்டும்”.

நாவல் பயிற்சி வகுப்பில் முப்பது பேர் கலந்துகொண்டனர். அதில் ஒலிபெருக்கியைப் பராமரிக்கும் இரண்டுபேர் கூடுதலாக வகுப்பில் இணைந்துகொண்டனர். அவர்கள் இருவருமே நீங்கள் அளித்த இருபது நிமிட சுய பரிட்சையில் எழுதியதையும் கண்டேன்

நிகழ்ந்த இரு நாவல் பயிற்சி வகுப்புகளிலும் பங்குபெற்றவர்களில் சிலரேனும் நாவல்களை எழுதக்கூடும். அது யாராக இருக்கும் என ஊகிப்பது கடினம், ஆனால் அவர்களுடைய நாவல்களில் நீங்கள் பயிற்றுவித்த நாவலுக்கான வரையறைகளின் தொடுகை இருக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

அன்பும் நன்றிகளும்,

பாலாஜி ராஜூ

முந்தைய கட்டுரைபூன் தத்துவ முகாம், குருப்பிரசாத்