அன்புள்ள ஜெ,
நான் வெளிநாடு செல்லும்போதெல்லாம் நினைப்பது உங்கள் காணொளியில் இருந்தது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? நமக்கு ஏன் இயற்கை மேல் மதிப்பே இல்லை? லௌகீக வாழ்க்கைக்கு அப்பால் ஏன் நமக்கு எந்த அக்கறையும் இல்லை? ஏன் இன்னொரு மனிதரின் அசௌகரியம் பற்றிய அக்கறையே இல்லை?
இன்னொன்றும் சொல்லவேண்டும். இந்தியாவில் வளர்ந்து வெளிநாடு வந்து பல ஆண்டுகள் ஆகியும்கூட இவர்கள் இப்படியேதான் இருக்கிறார்கள். வெளிநாடுகளிலுள்ள எந்த பாஸிட்டிவான விஷயங்களிலும் ஈடுபடுவதில்லை. எந்தக் கொண்டாட்டங்களும் தெரியாது. ஜனநாயகம் பற்றி தெரியாது. இங்கே ஒவ்வொருவருக்கும் இயற்கையுடன் உறவுண்டு. அதற்காக பொழுதைச் செலவழிப்பார்கள். சேவைகள் செய்வார்கள். எதையுமே நம்மவர்கள் செய்வதில்லை. சாப்பாடு, வேலை, சம்பாத்தியம், சாமிகும்பிடுதல், வம்பு— அவ்வளவுதான்.
நீங்கள் செய்துகொண்டிருப்பது இந்த மனநோய் உலகை விட்டு வெளியேற விரும்புபவர்களுக்கு ஒரு வழியைக் காட்டுவது மட்டுமே. ஆனால் அவர்களே மிகமிகச் சிலர்தான் . நீங்கள் சொல்வதுபோல பல கோடி பேரில் ஒரு ஐம்பதுபேர்
கணேஷ் எம்.