
அன்புள்ள ஜெ,
மே 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் வெள்ளிமலையில் நடைபெற்ற “ஓவிய அறிமுகம் மற்றும் வடிவமைப்புப் பயிற்சி” நடைபெற்ற ஓவியப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன். ஓவியத்தைப் பற்றிய எந்த முன் அனுபவமும் இல்லாத நிலையிலிருந்து, புள்ளி, கோடு, வளைவு போன்ற அடிப்படைகளில் தொடங்கி, இலை, பூ, வீடு, கோயில் என ஒவ்வொன்றையும் வரையப் பழகச் செய்தார் ஓவியர் லலிதா ராகவன். வயதும், தொழிலும் வேறுபட்டிருந்தாலும், அந்த வகுப்பில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் இருந்த ஓவிய ஆர்வம் மெல்ல வெளிப்பட்டு, அனைவரும் ஓவியர்களாக மாறிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. அவர்களில் ஒருவராக நானும் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அங்கிருந்துதான் நான் நீர்வண்ண ஓவியங்களை வரையத் தொடங்கினேன். பின்னர் ஓவியர் லலிதாவின் இணையவழி வகுப்பில் தொடர்ந்து பயின்று, Shadows, Highlights, வண்ணங்களின் அடுக்குகள் போன்றவற்றைச் சேர்த்து ஓவியங்களை இன்னும் இயல்பாகவும் உயிரோட்டமாகவும் காட்ட முயற்சி செய்தேன். தொடர்ந்து வெவ்வேறு யோசனைகளை முயற்சி செய்து வரையத் தொடங்கியபோது, ஓவியம் என்பது கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு திறன் மட்டுமல்ல; வரையும் அந்த நேரத்திலேயே மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு அனுபவம் என்பதையும் உணர்ந்தேன்.
42 வயதில் எனக்குள் ஓவியம் வரையும் திறன் இருப்பதை நான் கண்டறிந்தேன். அதற்கான முதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது வெள்ளிமலையில் நான் கலந்துகொண்ட அந்த வகுப்புதான். இந்த உணர்வு எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. அதற்காக இந்த முயற்சியை முன்னெடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய முதல் நீர்வண்ண ஓவியம் வெள்ளிமலையில்தான் உருவானது. அங்கிருந்து கடந்த மூன்று மாதங்களாக, தினமும் சிறிது நேரமாவது ஓவியம் வரைய முயற்சி செய்து வருகிறேன். அதைவிட முக்கியமாக, என் மனதில் தோன்றும் காட்சிகளையும், என்னைத் தொடும் விஷயங்களையும் ஓவியமாக வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறிய window எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்தச் window வழியாக என்னை நானே மகிழ்வித்துக்கொள்ள முடிகிறது.
சிறு வயதிலிருந்தே வரைவதில் எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தாலும், அன்றாட வாழ்க்கையின் அவசர ஓட்டத்தில் அதை எங்கோ மறந்துவிட்டேன்.“இந்த வகுப்பில் கலந்து பார்” என்று கூறியது என் சகோதரி. இன்று நினைத்துப் பார்க்கையில், அது எனக்கான ஒரு சிறிய திருப்புமுனையாகவே தோன்றுகிறது.

ஒருவருக்குள் இருக்கும் திறமை, அதை அவரே அறியாமல் கூட நீண்ட காலம் மறைந்திருக்கலாம். எனக்குள் இருந்த அந்தச் சிறிய திறமையை நான் கண்டுகொள்ள இந்த வகுப்பு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த உங்களுக்கும், ஓவியர் லலிதா ராகவன் அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னால் வரைய முடியும் என்ற நம்பிக்கையையும், வரைவதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியையும் எனக்குள் உருவாக்கியதற்காக.
பிரபாகரன்.











