கிறிஸ்தவ சிந்தனை மரபை மெய்யியல் நோக்கில் அறிமுகம் செய்யும் பொருட்டு சிறில் தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருகிறார். மீண்டும் நடைபெறவுள்ள வகுப்புகளில் கிரேக்க சிந்தனை மரபையும் இணைத்துக்கொண்டு, இந்த வகுப்பைச் சற்று விரிவாக நிகழ்த்த உள்ளார்.
மேலைச் சிந்தனையையும் மேலைக் கலையையும் கிறிஸ்தவ மரபை அறியாமல் ஒருபோதும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. மேலைச் சிந்தனையையும் மேலைக் கலையையும் புரிந்துகொள்ளாத ஒருவரால் இன்றைய நவீன இலக்கியத்தையும் நவீனக் கலையையும் புரிந்துகொள்வது மிகவும் கடினம். சொல்லப்போனால், ஒரு மேல்நாட்டினருடன் உரையாடுவதுகூட சில சமயங்களில் கடினமாக இருக்கலாம்.
இன்று ஒருவர் திரைப்படங்களைத் தீவிரமாகப் பார்ப்பவராக இருந்தாலும்கூட, அவற்றின் பின்னணியில் உள்ள பண்பாட்டு அடுக்குகளைப் புரிந்துகொள்ள இந்த அறிமுகம் மிக அவசியமானது. நமது கல்விமுறையிலும் நமது சூழலிலும் இந்த வகையான கல்வி நமக்குக் கிடைப்பதில்லை. இந்தக் கல்வி மிக அவசியமான ஒன்று என்பதனால்தான் இந்த வகுப்பைத் தொடர்ந்து நாங்கள் நடத்தி வருகிறோம்.
இது மதக் கல்வியோ மதப் பிரசாரமோ அல்ல. மாறாக, கிறிஸ்தவ மரபை ஒரு விரிவான வரலாற்று, பண்பாட்டு, மெய்யியல் நோக்கில் அறிமுகப்படுத்தும் முயற்சி.
உண்மையில், கிறிஸ்தவர்களாகப் பிறந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்திற்குச் செல்பவர்களுக்குக்கூட கிறிஸ்தவ மரபு குறித்த மிக அடிப்படையான அறிமுகம்கூட இல்லாமல் இருப்பதை காணலாம். விரிவான அறிமுகம் இன்று எங்கள் வகுப்புகளின் மூலமாகவே அளிக்கப்படுகிறது.
ஆர்வமுடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
நாட்கள் அக்டோபர் 23 24 மற்றும் 25
தொடர்புக்கு [email protected]
அறிவிக்கப்பட்ட வகுப்புகள் இடமிருப்பவை
யாரும் வரையலாம்! -அடிப்படை ஓவியப் பயிற்சி வகுப்புகள்
(19 ஆம் தேதியும் 20 ஆம் தேதியும் பூஜை விடுமுறை. அதையொட்டி இந்த வகுப்பு சனி ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் ஒருங்கிணைக்கப்படுகிறது)
அக்டோபர் 17 (சனி) ,18(ஞாயிறு) 19 திங்கள்
தொடர்புக்கு [email protected]
அறிவிக்கப்பட்ட வகுப்புகள் – இடமிருப்பவை
வரவிருக்கும் வகுப்புகள்

ஆலயக்கலை அறிமுக வகுப்புகள்
ஜெயகுமார் நடத்தும் ஆலயக் கலை வகுப்புகள் மீண்டும் நிகழவிருக்கின்றன. இவை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதுவரை ஏறத்தாழ ஆயிரம் பேர் இதில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பல சிறு குழுக்களாக மாறி, ஜெயகுமாருடன் இணைந்தும், தனியாகவும் ஆலயங்களைப் பார்க்கும் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த வகுப்புகள் ஒரு தொடக்கப் புள்ளி. வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு கலைப் பயணத்தின், ஆன்மிகப் பயணத்தின் முதலடி.
ஆலயங்கள் நமது மரபின் பெரும் செல்வங்கள். அவை ஒவ்வொன்றையும் ஒரு நூல் என்று சொல்லலாம். ஆனால், நமக்குப் படிக்கத் தெரியவில்லை என்றால் அவை வெறும் பொருட்களாகவே தோன்றும். ஆலயங்களின் கட்டமைப்பு, அவற்றின் சிற்பங்களின் கலைமரபு ஆகியவற்றை அறிந்துகொள்வதன் மூலம் திடீரென்று ஆலயங்கள் நம்மிடம் பேசத் தொடங்குகின்றன. ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதுப்புது நுணுக்கங்களை நமக்குக் காட்ட ஆரம்பிக்கின்றன.
அவை நம் வாழ்வின் பெரும் கலை அனுபவங்களாகவும், தத்துவ அறிவுதல்களாகவும், மெய்நிலை எய்துதல்களாகவும் உருமாறுகின்றன.
நாட்கள் அக்டோபர் 30 31 மற்றும் நவம்பர் 1
தொடர்புக்கு [email protected]
*
(நவம்பர் 8 தீபாவளி. அந்த வார இறுதியில் வகுப்புகள் இல்லை)
*

தமிழும் சைவமும் அறிமுக வகுப்புகள்
தமிழ் மரபிலக்கியத்தை ஓரளவேனும் வாசித்து, ரசித்து, அறிந்துகொள்ளாத ஒருவரால் தமிழ்ப்பண்பாடு, சைவம், வைணவம் ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைப் புரிதலைக்கூட அடைய முடியாது என்பதே உண்மை.
ஆர்வமுடையவர்கள் இத்தகைய நூல்களை வாங்கி வைத்துக்கொள்வதுண்டு. ஆனால் அவற்றைப் படிக்க முடிவதில்லை. ஏனெனில் அவை நம்முடைய இன்றைய வாசிப்பு முறைக்காக எழுதப்பட்டவை அல்ல. இன்றைய வாசிப்பு என்பது அகவாசிபு அல்லது தனிமனித வாசிப்பு. ஐரோப்பியக் கல்விமுறையின் அறிமுகத்திற்குப் பின்னரே இந்த நவீன வாசிப்பு முறை நம்மிடையே பரவியது. மரபிலக்கியங்கள் வேறொரு வகையான வாசிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டவை.
அந்த வாசிப்பு முறையை அறிந்துகொள்ளாமல் அவற்றைக் கற்றுக்கொள்வது கடினம். அவற்றை அந்தத் தளத்தில் கற்று, அவற்றின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள, முறையாகப் பயிற்றுவிக்கும் தகுதி கொண்ட ஒருவரின் வழிகாட்டுதல் தேவை.
மரபின் மைந்தன் முத்தையா, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மரபிலக்கியத்தை முறையாகக் கற்றவர். சைவ ஆதீன வித்வான் என்ற மதிப்பையும் பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தை ரசிக்கவும், அதன் நுட்பங்களை உணர்ந்து உள்வாங்கவும் அவர் தொடர்ந்து பயிற்றுவித்து வருகிறார்.
எங்கள் அமைப்பு சார்பில் அவர் நடத்தும் ஐந்தாவது நிகழ்வு இது. இதில் தமிழ் மரபிலக்கியத்தை வாசிப்பதற்கும் ரசிப்பதற்குமான பயிற்சியுடன், சைவத் திருமுறைகள் பற்றிய ஓர் அறிமுகமும் வழங்கப்படும். இது இலக்கண வகுப்பு அல்ல, கவிதைகளை ரசிப்பதற்கான பயிற்சி மட்டுமே.
நாட்கள் நவம்பர் 13, 14 மற்றும் 15
தொடர்புக்கு [email protected]














