ஓவியமும் அடிப்படைச் சிந்தனையும்.

பிரபாகரன், ஓவியப்பயிற்சியில் வரைந்தது

அன்புள்ள ஜெ,

உங்கள் காணொலிகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஓவியம் வரைவதற்கான பயிற்சி என்பது என்னைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகிறது.

ஓவியம் வரையக்கூடிய ஒருவர், அல்லது குறைந்தபட்சம் ஓவியம் வரைவதில் எளிய பயிற்சி பெற்ற ஒருவர், தன்னைச் சுற்றியுள்ள காட்சிகளை இன்னும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குகிறார். அவர் ஓவியராக ஆக வேண்டிய அவசியமில்லை. சுற்றியுள்ள உலகைக் கவனிப்பதற்காகவே வரைய வேண்டும். ஒரு காட்சியை வரைய முயற்சிக்கும்போது, அதுவரை சாதாரணமாகப் பார்த்துச் சென்ற விஷயங்களைக்கூட நாம் நிதானமாகவும் ஆழமாகவும் பார்க்கத் தொடங்குகிறோம்.

இது எழுத்தாளர்களுக்கும், குறிப்புகள் எழுதுபவர்களுக்கும் மட்டுமல்ல. பொறியியல், தாவரவியல், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்களுக்கும் இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தன்னைச் சுற்றியுள்ளவற்றைக் கூர்ந்து கவனித்து, அவற்றை முறையாகப் பதிவு செய்வதற்கான ஒரு அடிப்படைப் பயிற்சியாக ஓவியம் அமைகிறது.

பழங்காலத்தில் பொறியியல், தாவரவியல் போன்ற பல துறைகளின் கல்வியிலும் குறைந்தபட்சம் வரைதல் ஒரு முக்கியமான திறனாக இருந்தது. பின்னர், எல்லாவற்றையும் மின்னணுக் கருவிகள் செய்து தரக்கூடிய காலம் வந்தபோது, நாமே வரைய வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணம் உருவானது.

ஆனால் மின்னணுக் கருவிகள் எதுவுமே நம் மூளைக்குள் சென்று அறிவாக மாறுவதில்லை. அவை ஒரு பதிவிலிருந்து இன்னொரு பதிவுக்குத் தகவல்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன. நம் மூளைக்குள் இருக்கும் அறிவுக்குத்தான் உண்மையான மதிப்பு. தகவல் பெருக்கினால் நமக்கு ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், நம் மூளைக்குள் எதுவுமே இல்லாமல் எல்லாமே வெளியில் இருக்கும்போதுகூட, நம்மிடம் எல்லாமே இருக்கிறது என்ற ஒரு பொய்யான உணர்வை அது உருவாக்கிவிடுகிறது.

உண்மையில் நம்மிடம் என்ன இருக்கிறது என்பது, நமது மூளைக்குள் என்ன இருக்கிறது என்பதில்தான் உள்ளது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நம் நினைவிலிருந்து எது இயல்பாக எழுந்து வருகிறது என்பதுதான் நமது அறிவின் அளவைக் காட்டுகிறது.

நமது மூளையில் அறிவைச் செலுத்துவதற்கு வாசிப்பு ஒரு வழி என்றால், காட்சியை நேரடியாக உள்வாங்கிக்கொள்வதற்கு ஓவியம் ஒரு வழி என்று நான் நினைக்கிறேன். நாம் வரையும்போது ஒரு பொருளைப் பார்ப்பதல்ல; அதன் வடிவம், அளவு, இடம், ஒளி, நிழல், அமைப்பு ஆகியவற்றைக் கவனிக்கிறோம். அந்தக் கவனிப்பு நமது சிந்தனையின் ஒரு பகுதியாகவே மாறுகிறது.

இந்த ஓவியப் பயிற்சியின் முக்கியத்துவம் இன்னும் தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. “எனக்குப் படம் வரையத் தெரியாது” என்று பலரும் தங்களைப் பற்றியே முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். உண்மையில், மிகச் சிறந்த ஓவியராக இருப்பது ஒரு தனித்திறன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அடிப்படையான வரைதல் திறனைத் தொடர்ந்து சில வாரங்கள் பயிற்சி செய்தாலே பெரும்பாலானவர்களால் கற்றுக்கொள்ள முடியும்.

ஓவியம் என்பது கலைஞர்களுக்கான ஒரு சிறப்புப் பயிற்சி மட்டுமல்ல; உலகைக் கவனிப்பதற்கான ஒரு மனிதப் பயிற்சி. பார்ப்பதற்கும் உண்மையாகப் பார்ப்பதற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

இந்தக் கருத்தை முன்னிறுத்தி நீங்கள் முன்னெடுக்கும் ஓவியப் பயிற்சி, எனக்குத் தோன்றுவதுபோல், கல்வியின் ஒரு முக்கியமான பகுதியாகவே கருதப்பட வேண்டும். குறிப்பாக இன்று குழந்தைகளும் இளைஞர்களும் பெரும்பாலான காட்சிகளைத் திரைகளின் வழியாக மட்டுமே எதிர்கொள்ளும் சூழலில், தாங்களே பார்த்து, கவனித்து, கையால் பதிவு செய்யும் இந்தப் பயிற்சிக்கு இன்னும் அதிகமான முக்கியத்துவம் இருக்கிறது.

அன்புடன்,

ராசி. குமரேசன்

முந்தைய கட்டுரைகிரேக்க- கிறிஸ்தவ மெய்யியல் அறிமுக வகுப்புகள்