ஓவியக்கலைஞர் ( ஓவியம் Ernest Meissonier, 1855)
தமிழகத்து அறிவுச்சூழலுக்கு மாணவர்களுக்கும் நவீன ஓவியக்கலையை அறிமுக செய்ய முடிவெடுத்தது மூன்று காரணங்களுக்காக.
ஒன்று, இன்றைய உலகில் புழங்குவதற்கே நவீன ஓவியக்கலை சார்ந்த அறிமுகம் தேவை.நவீன ஓவியங்கள், நவீனக் கட்டிடங்கள், நவீன ஆடைகள், நவீன நகைகள் ஆகியவற்றை ரசிப்பதற்கான பயிற்சி அது. அவற்றின் அழகியல் மற்றும் அவற்றுக்குப் பின்னாலுள்ள சிந்தனை முறைகளைப் பற்றி அறிவார்ந்து புரிந்து கொள்வதற்கான பயிற்சி. குறைந்தபட்சம் அவற்றைப்பற்றி பேச்சு நிகழுமிடங்களில் ஒன்றும் தெரியாமல் நிற்காமலிருப்பதற்கான அறிமுகமாவது இன்றைய மனிதனுக்குத் தேவை.
இரண்டு, இன்றைய உலகில் நவீன ஓவியக்கலை என்பது பலநூறு தொழில்களுக்கான தொடக்கம். கட்டிடக்கலை வரைவாளர், ஆயத்த ஆடை வடிவமைப்பாளர், கணிப்பொறி வரைகலையாளர் என பல துறைகளில் இன்று பலரும் பயில்கிறார்கள். நவீன ஐரோப்பிய ஓவியக்கலை பற்றிய அறிமுகம் இன்றி அவற்றுக்குள் மெய்யாக நுழைய முடியாது. வெறுமே பாடங்களைக் கற்றுக்கொள்வதில் பொருளில்லை. ஓவிய அறிமுகம் அனைத்தையும் புத்தம் புதியதாக காட்டும். நம்மிடம் இருக்கும் சாத்தியக்கூறுகளையே நாம் அறிய முடியும்.
மூன்று, அனைத்துக்கும் மேலாக இன்றைய எழுத்தாளர், இலக்கிய வாசகர் நவீன ஓவியக்கலையை அறிமுகம் செய்துகொள்ளாமல் இன்றைய சிந்தனையைப் புரிந்துகொள்ளவே முடியாது. இன்றைய இலக்கியத்தின் எல்லா அடிப்படைகளும் ஓவியக்கலையில் இருந்து உருவானவை, அல்லது ஓவியக்கலையையும் இணைத்துக்கொண்டு வளர்ந்தவை. நவீன ஐரோப்பிய இலக்கியம் என்பது ஓவியக்கலையில் இருந்து பெற்ற படிமங்களால் ஆனது. ஓவியக்கலை அறிமுகம் இல்லாத ஒருவர் ஓர் ஐரோப்பிய நாவலை மெய்யாகவே வாசிக்க முடியாது. ஓர் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து எதையுமே ரசிக்கமுடியாது.
நானறிந்தவரை இன்றைய தமிழ்ச்சூழலில் ஏ.வி. மணிகண்டன் போல இவ்வறிமுகத்தை அளிக்க பிறிதொரு ஆளுமை இல்லை. ஓவியம் அறிந்தவர்கள் உண்டு. ஆனால் அவர்களுக்கு இலக்கிய அறிமுகம், மொழிப்பயிற்சி இருக்காது. நவீனக் கவிதைகள் அறிந்திருக்க மாட்டார்கள். தமிழ் நவீன இலக்கியச் சூழலில் புழங்கியிருக்க மாட்டார்கள். ஆகவே அவர்களால் அழகியல் கொள்கைகளை விளக்கிக் கற்பிக்க முடியாது .
இந்த வகுப்பு மிகமிக எழுச்சியூட்டும் கல்வியாக இருந்தது என நண்பர்கள் எழுதிக்கொண்டே இருந்தனர். ஆகவே மீண்டும்.
வரும் நவம்பர் 3, 4, 5 தேதிகளில் (வெள்ளி, சனி ,ஞாயிறு) ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் பயிற்சிவகுப்புகள் நிகழும்.
தொடர்புகொள்ள [email protected]