தத்துவமும் செயலும்

அன்புள்ள ஜெ,

தத்துவம் மற்றும் தத்துவக் கல்வியின் பயன்கள் பற்றி நீண்ட காலமாக தாங்கள் பேசிவருவதை கேட்டிருக்கிறேன். தத்துவம் என்ற ஒன்றை நான் முதன்முதலில் தெரிந்து கொண்டது என் மனதில், என் வாழ்வில் நீங்காது எழும் மனச்சிக்களை புரிந்துகொள்ள முற்படும் போதுதான். தத்துவத்தை ஒரு மாணவன் கற்றறிந்து அதனைத் தாண்டிய ஒரு உள்ளுணர்வை ஒருவன் பெற வேண்டும் என்றீர்கள். நான் புரிந்துகொண்ட எந்த தத்துவமும் எனக்கு சிக்கல்களை மட்டுமே கொடுத்தது அதை பயன்படுத்தவும் இல்லை அதை கடக்கவும் இல்லை, அவ்வாறான உள்ளுணர்வை ஒருவன் பெற இயலாதெனில் வெறும் தத்துவ அறிவில் ஏதேனும் பயன் உள்ளதா? இல்லை இந்த தத்துவ அறிவின் பயன் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பங்காற்றுவதோடு நின்றுவிடுகிறதா?
மேக்சின்

அன்புள்ள மேக்ஸின்
புத்தரின் புகழ்பெற்ற கதை ஒன்றுண்டு. ஒருவன் நெஞ்சில் அம்பு தைத்தது. அதை எடுக்க மருத்துவர் முற்பட்டபோது அவன் கத்தினானாம். ‘முதலில் இந்த அம்பு எதனாலானது, எவரால் எய்யப்பட்டது, எதனால் என் மேல் ஏவப்பட்டது ஆகிய செய்திகளை அறியாமல் இதை தொடவிடமாட்டேன்’. அவன் பரிதாபமாகச் செத்துப்போனான்.
வாழ்க்கை செயல்களானானது, நிகழ்வுகளால் ஆனது. வெறும் எண்ணங்களோ சிந்தனைகளோ வாழ்க்கை அல்ல. செயல்களை ஆற்றும்போது, நிகழ்வுகளில் இணைந்துகொள்ளும்போது நமக்கு கேள்விகள் உருவாகின்றன. அக்கேள்விகளுக்கான விடைகளை நாம் தேடுவதன்பொருட்டே தத்துவம் உள்ளது. கண்டடைந்த விடைகளை மீண்டும் செயற்களத்திலேயே பரிசீலித்துப் பார்க்கவேண்டும்.
தத்துவம் இல்லாமல் செயல்கள் நிகழக்கூடும், அவற்றுக்கு சிலசமயம் போதிய தெளிவு அமையாமல்போகும். செயல் இல்லாத தத்துவத்தில் வெறும் அகச்சிக்கல்கள் மட்டுமே எஞ்சும்.
ஆகவே செயல்புரிக என்று சொன்னபின், அச்செயல்களுக்கான தத்துவத்தையே கீதை முன்வைக்கிறது.
ஜெ
முந்தைய கட்டுரைபறவை பார்த்தல் பயிற்சி 
அடுத்த கட்டுரைஎதற்காக பைபிள்?