
அன்பிற்குரிய ஆசிரியருக்கு,
ஈரோடு கிருஷ்ணன் நடத்திய தர்க்கபூர்வ சிந்தனை வகுப்பில் பங்குபெற்று என் அனுபவத்தை பகிர்கிறேன்.
முதல் நாள் காலை 9மணிக்கே கிருஷ்ணன் மீட்டிங் ஹாலில் அனைத்து கருவிகளும் நன்றாக வேலை செய்கிறதா என்று பெரும் ஆர்வத்துடன் அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டிருந்தார். அவரிடம் தென்பட்ட துள்ளளும், கண்களில் தெரிந்த புன்னகையும், அவர் அணிந்திருந்த நேர்த்தியான சட்டையும் ஏனோ ஒரு குழந்தையிடம் தென்படும் உற்சாகத்தை காட்டியது. இரண்டரை நாட்கள் வகுப்பிற்கு நேரத்தை மிகவும் நேர்த்தியாகவே திட்டமிட்டு வந்திருந்தார்.
புத்தருக்கும், சாரதைக்கும் வணக்கம் செலுத்திய பின் சரியாக 10 மணிக்கு அனைவரும் வகுப்பிற்கு வந்தோம். பங்கு பெற்றவர்களில் பாதி பேர் இளைஞர்கள். சட்டகல்வி படிக்கும் இளைஞர்கள் சிலர் குறிப்பாக கிருஷ்ணனை சந்திக்கும் பொருட்டே வந்திருந்தனர். இடைவெளி நேரங்களில் வெகுநேரம் கிருஷ்ணனுடன் சட்டம் சார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
முதல் வகுப்பில் சிலர் தங்களை மறந்து சற்று அயர்ந்தனர். கிருஷ்ணன் அதை மிக மென்மையாகவும் அதே சமயம் கண்டிப்புடனும் எச்சரித்தார்.வெள்ளிமலையில் நிகழும் வகுப்புகளனைத்தும் மிகத்தீவிரமாக இருக்கும். எனவே அதன் பொருட்டு வருபவர்களுக்கு மட்டுமே இவ்வனைத்தும். எண்ணிக்கைகள் எங்களுக்கு பொருட்டள்ள. ஆர்வம் இல்லாத சிலரால் இங்குள்ள அனைவரும் பாதிக்கலாகாது. எனவே விருப்பமற்றோர் இப்போதே விலகலாம். ஆட்சேபனை இல்லை. யாரும் இங்கு தவறாக கருதமாட்டார்கள். இது உங்களுக்கான் சுதந்திரம் என்றார்.
இந்த வகுப்பிற்கு அடிப்படையாக இருந்த புத்தகங்களை முன்பே குழுவில் பகிர்ந்தார்.
1.The ways of thinking eastern peoples-Hajime nakamura
2.The republic-Plato
3.The prince-Niccolo Machiavelli
4.Humankind:a hopeful history-rutger bregman
5.Vishnupuram-Jeyamohan
6.Creative thinking and brainstorming-Geoffrey Rawlinson
7.The 48 laws of power-Robert greene
ஒரு மெல்லிய தயக்கத்திற்குபின் வகுப்பை தொடங்கினார். இவ்வகுப்பின் ஒட்டுமொத்த நோக்கம் என்பது மெய்மையை அறிவது. அதை அறிவதற்கு சிந்தனை ஒரு கருவி, சிந்திப்பதற்கு தர்க்கம் ஒரு கருவி, தர்க்கபூர்வ சிந்தனைக்கு சட்டம் ஒரு கருவி என்று கூறி “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு” என்ற குறளை முதன்மைபடுத்தினார். சிந்திப்பதென்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதினால் அதனை தினமும் முயற்சி செய்து வருகிறேன் என்றார்.
ஒரு முறை பயணத்தில் உங்களிடம் உரையாடிக்கொண்டிருந்த போது நீங்கள் ஒரு புனைவெழுத்தாளன் எப்போதும் தர்கத்திற்கும், கற்பனைக்கும் நடுவில் தான் இருக்க முடியும் என்று கூறிய விடயம் ஒரு சிறந்த சிந்தனையாக இருந்தது என்றார்.அச்சிந்தனையை நினைத்துஒரு மெல்லிய புன்னகையை என்னுள் புரிந்தேன். அனைத்து இன்பங்களிலும் முதன்மையானது அறிதலின் இன்பமே. அந்த முதன்மை இன்பத்திற்காகவே இவ் வகுப்புகளனைத்தும் நிகழ்கின்றனவோ என்ற எண்ணம் தோன்றி சிலிர்படைந்தேன். அந்த சிறந்த தொடக்க சிந்தனையின் வாயிலாக வகுப்பை முன்னகர்த்தினார். எல்லா உரைகளிலும், வகுப்புகளிலும் அந்த தொடக்கம் சரியாக அமைந்துவிட்டால் பின் தன்போக்கில் அடுத்தடுத்த நகர்வுகள் மிக இயல்பாக நிகழும்.
“புறத்தே செவி மடல் தெரிந்தால் அவை குட்டிகளை ஈனும் பாலூட்டிகள்” என்ற பார்வையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் ஊகித்ததை விளக்கினார். மேலும் தன் அனுபவத்தில் நடந்த சில விடயங்களையும் பகிர்ந்தார். இவ்வனைத்தும் வகுப்பை மேலும் உற்சாகமூட்டியது. அந்தியூர் மணியும் இவ்வகுப்பில் ஒரு மாணவராக கலந்து இன்னும் செம்மை படுத்தினார். சட்டத்தில் பிரத்யட்சம் என்ற விடயம் ஏன் இல்லை என்று கிருஷ்ணன் கூறி முடித்த பின் அந்தியூர் மணி அதன் விளக்கத்தை விரிவாக விளக்கும்போது ஒரு நிமிடம் சிலிர்த்தேவிட்டேன்.பிரத்யட்சம் சட்டத்தில் இருந்தால் அது சார்புநிலையாகிவிடும் என்பதை தேநீர் இடைவெளியில் மணி விரிவாக விளக்கினார்.
சிறிய இடைவெளிக்கு பிறகு In gredients of thought என்ற தலைப்பில் Cartesian and systematic thinking பற்றி நிறைய உதாரணங்கள் வாயிலாகவும், சில முக்கியமான புத்தகங்கள் வாயிலாகவும் விளக்கினார். Induction/deduction, Sylogism, Thesis and antithesis, breaking in small pieces, major and minor premise என்ற தலைப்புகளில் தர்க்கபூர்வமாக சிந்திப்பதற்கு தேவையான விடயங்களை விளக்கினார். இத்தலைப்புகள் அனைத்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் விடயங்களே ஒழிய அதன் கலைச்சொற்கள் தான் தெரியவில்லை.
மதிய சாப்பாட்டிற்கு பின் சிறிது நேரம் ஓய்வெடுத்து சரியாக நான்கு மணிக்கு வகுப்பு மீண்டும் தொடங்கியது. புதிர்களை அவிழ்க்கும் சில பயிற்சிகளை தந்தார். ஐந்து குழுவாக பிரிந்து அந்த புதிர்களுடன் முட்டி மோதினோம். சில புதிர்கள் கடினமாக இருந்தது.ஆனால் அதன் நோக்கம் புதிர்களை அவிழ்ப்பது மட்டுமல்ல,ஒரு எல்லையை தாண்டி வேறு ஒரு கோணத்தில் சிந்திக்க முயற்சி செய்திருக்கோமா என்பது மட்டுமே. அந்த புதிர்களை கிருஷ்ணன் பின் அவிழ்க்கும் போது தெரிந்தது. மிகவும் சுவாரஸ்யமாக அந்த வகுப்பு நீண்ட நேரம் சென்றது.
இரவு உணவு முடிந்து அனைவரும் சீக்கிரமாகவே துயிலுற்றோம். மறுநாள் காலை ஒரு நீண்ட காலை நடை சென்று அனைவரும் வெகு உற்சாகமாக வகுப்பில் அமர்ந்தோம். அந்த நாள் முழுக்க சட்டத்தில் உள்ள முக்கியமான தருக்கங்களை கற்றோம். கிருஷ்ணன் அடிப்படையில் வழக்கறிஞர் என்பதால் சட்டத்தில் பயன்படுத்தும் முக்கியமான தர்க்க விதிகளை விளக்கினார். தான் இதுநாள் வரை சந்தித்தவற்றில் சில முக்கியமான, நுண்ணிய அவதானிப்புகளை விளக்கினார். An introduction to indian judiciary என்ற தலைப்பில் framing issues, burden of proof/onus of proof/presumptions, judgement ஆகியவற்றை விரிவாக விளக்கினார்.
தர்க்கம் எவ்வளவு முக்கியமான விடயமாக சட்டத்தில் இருக்கிறது என்று நினைத்தபோது மண்டையில் ஒரு சுத்தியை கொண்டு ஓங்கி அடித்ததுபோல் இருந்தது. மிகவும் இறுக்கமான உணர்ந்தேன். வகுப்பு முடிந்து சாப்பிட போகும் போது திடீரென்று என்னுள் சில விடயங்கள் திரப்பதை உணர்ந்தேன். இப்போது தான் உங்களின் ஒட்டுமொத்த படைப்புகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வகுப்பிற்கு முந்தய நாள் தான் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த நாவலில் வரும் அசாத்தியமான தருக்கங்கள் ஒவ்வொன்றாக என்னுள் விரிந்தது. இந்த தருக்கங்கள் உங்களின் இரண்டாம் கட்ட படைப்புகளில் முழுவீச்சுடன் இருப்பதை அப்போது தான் உணர்ந்தேன் (வெள்ளையானை நாவல் முதல்). உண்மையில் அந்த தருக்கங்களின் உச்சங்களின் வாயிலாகவே ஒரு படைப்பு பெரும் படைப்பாக மாறுகிறது. உதாரணம் பின் தொடரும் நிழலின் குரலில் கதிர் என்ற கதாப்பாத்திரம் பேசும் தருக்கம்.
மாலை வகுப்பில் விவாதம் இருந்தது. மூன்று தலைப்பில் விவாதம் நடந்தது.ஒவ்வொரு விவாதத்திலும் இரு தரப்பிலிருந்தும் வலுவான தருக்கம் முட்டி மோதியபின் ஒரு கட்டத்தில் அந்த விவாதம் ஒரு விழுமியத்தை நோக்கியோ ஒரு வலுவான சிந்தனையை நோக்கி சென்றது. ஆனால் அந்த விவாதங்கள் அனைத்தும் சட்டத்தில் இருக்கும் விதிமுறைகளை முன்னிறுத்தியே தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த கூர்மையான தருக்கத்தின் மூலம் அவ் வவாதங்கள் ஒரு படி மேல் சென்று அறம் நோக்கி நகர்ந்தது. ஒரு ஆழ்ந்த மெளனம் அப்போது அங்கு நிகழ்ந்தது.
விவாதங்கள் முடிந்தது இரவு உணவிற்கு செல்ல நீண்ட நேரம் ஆகியது. மழை விடாமல் பெய்துகொண்டே இருந்தது. மேகங்கள் அதிகமாக இருந்ததால் பக்கத்தில் இருப்பவரே தெரியவில்லை. அந்த இரவு ஊட்டியில் இருந்தது போல உணர்வு ஏற்பட்டது. ஆழ்ந்த மெளனம் என்னை சூழ வெகுநேரம் தனியாக நின்று மலைகளை பார்த்த வண்ணம் இருந்தேன். ஒவ்வொரு வகுப்பிற்கும் வெள்ளிமலை வரும்போது அந்த கற்றலின் இன்பத்தை உணராமல் இருந்ததில்லை. வகுப்பின் பொருட்டே ஹரதபாத்திலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். மகிழ்வாக இருந்தது. மொண்ணை காரணங்களை காட்டி வகுப்பை தவறவிடும் கூட்டங்கள் மத்தியில் இவ்வாறான நண்பர்களை சந்திப்பதில் உவப்பாக இருந்தது.
நீண்ட நேரம் கிருஷ்ணனுடன் மணியுடனும் உரையாடல் முடிந்தது உறங்க சென்றோம்.கடைசி நாள் காலையிலும் மழை லேசாகா பெய்துகொண்டுதான் இருந்தது. குளிர் அவ்வளவாக இல்லை. காற்று சற்று அதிகமாக இருந்ததால் குளிர் அதிகமாக இருந்த தோற்றம் தென்பட்டது. காலை மடம் கோயிலுக்கு நண்பர்கள் சிலர் சென்றோம். மீண்டும் வகுப்பு சரியாக பத்து மணிக்கு தொடங்கியது. நேற்று மிச்சமிருந்த ஒரே ஒரு விவாதம் மட்டும் நிகழ்ந்தது. வகுப்பின் இறுதியாக logical fallacies என்ற தலைப்பில் சிலவற்றை விளக்கினார்.
பெங்களூரில் முன்பொருமுறை நடந்த இதே போல் வகுப்பை இங்கே இன்னும் தெளிவாகவும், விரிவாகவும் நடத்தினார். ஒட்டுமொத்தமாக இவ்வகுப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு நிறைய திறப்புகளை அளித்தது என்றே கூறுவேன். தத்துவ வகுப்புகளில் நடக்கும் அசலான விவாதங்களுக்கு இவ்வகுப்பில் நடந்த விவாதங்கள் உதவியாக இருந்தன. நீங்கள் நடத்தும் மேடையுரை வகுப்பு, அபுனைவு பயிற்சி வகுப்புகள் வரிசையில் இந்த வகுப்பும் முக்கியமென்றே கருதுகிறேன். மீண்டும் கிருஷ்ணனுக்கும், உங்களுக்கும், வகுப்பை இன்னும் செம்மை பெற உதவிய அந்தியூர் மணிக்கும் என்ற மனமார்ந்த நன்றிகள். சமயல் வேலைகளில் முழுமூச்சுடன் இருந்த சரஸ்வதி அம்மாவுக்கும் என் வணக்கங்கள்.
அன்புடன்
அசோக்












