அன்புள்ள ஜெயமோகன்,
இந்து தத்துவத்தை ஆங்கிலத்தில் நீங்களநடத்துவதைப்பற்றிஅறிந்தேன். தமிழ்நாட்டில், தமிழ் சூழலில் தமிழில் இந்த வகுப்புகளை நடத்துவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆங்கிலத்தில் இந்த வகுப்புகளை நடத்துவதற்காக தேவை என்ன என்று எனக்கு புரியவில்லை. இதை ஒரு பரபரப்புக்காக செய்கிறீர்களா என்று கூட தோன்றுகிறது.
எச்.ஆர். தேவநாந்தன்
அன்புள்ள தேவநாதன்,
தமிழ் வகுப்புகள் இரண்டு மூன்று ஆண்டுகளாக நடந்து வருகின்றன. 20க்கும் மேற்பட்ட வகுப்பு நடந்து முடிந்து விட்டன. 400 பேருக்கு மேல் இவ்வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய மாணவர் திரள் இப்போது உள்ளது.
ஆனால் இவர்களுடன் நண்பர்கள் பலர் வேறு மொழி பேசுபவர்கள், தமிழறியாதவர்கள். அவர்கள் இப்படி ஒரு வகுப்பு நடப்பதை தெரிந்துகொண்டு இவற்றை ஆங்கிலத்தில் நடத்த முடியுமா என்று கேட்டதாக என்னிடம் சொன்னார்கள். தெலுங்கு, கன்னட மொழி பேசுகிறார்கள் பெங்களூரில் இருந்தும் ஹைதராபாத்திலிருந்தும் இந்த வகுப்புகளுக்கு எளிதில் வர முடியும். ஆகவே தான் இவற்றை ஆங்கிலத்தில் நடத்தும் முடிவை எடுத்தோம்.
அத்துடன் இளம் தலைமுறைக்கு நிற்பதற்கு தமிழில் புரிந்து கொள்வதை விட ஆங்கிலத்தில் புரிந்து கொள்வது எளிதாக இருக்கிறது. தமிழை விட ஆங்கிலம் பயில்வதற்கு எளிதாக இருக்கும் என்று தோன்றுபவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். தங்களுடைய தமிழ் அறியாத நண்பர்களுக்கு இதை பரிந்துரை செய்யலாம்.
ஏனெனில் இன்று இந்தியாவிலேயே மதம் மற்றும் ஆசாரங்களுடன் தொடர்பில்லாமல தூய் ஹிந்து தத்துவத்தைமட்டும் நவீன கல்விமுறைப்படி, ஆனால் ஒரு குருகுலச் சூழலில் கற்பிக்கும் இன்னொரு அமைப்பு இல்லை. அத்தகைய கல்வியை விரும்புபவர்களுக்கு இன்னொரு வாய்ப்பும் இல்லை.
ஜெ












