மந்தைக்கு வெளியே

திரு ஜெமோ

உங்கள் காணொளிகளைப் பார்க்கிறேன். நீங்கள் ஒரு கதை எழுத்தாளர். கற்பனையும் மொழிவளமும் இருப்பதனால் கதைகளை வெற்றிகரமாக எழுதுகிறீர்கள். சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் எதற்கு எங்களுக்கு அறம், வாழ்க்கைமுறை எல்லாம் கற்பிக்கவேண்டும்? இங்கே நல்லது கெட்டது சொல்லித்தர ஆளே இல்லையா? எழுத்தாளர்களுக்கு ஏன் இந்த வேலை? மக்களை அரசியல்படுத்த போராடிக்கொண்டிருக்கும் நேரம் இது. இலக்கியவாதிகள் அவர்களுக்கு எது வருகிறதோ அதைச் செய்தால்போதும்.

பண்பொழிலன்

அன்புள்ள பண்பொழிலன்,

இங்கே அறம், நல்லதுகெட்டது முதல் பண்பாடு, வரலாறு உட்பட அனைத்தையுமே பேசுபவர்கள் அரசியல்வாதிகள். அவர்கள் பேசினாலே போதும் என நீங்கள் எண்ணுகிறீர்கள் என நினைக்கிறேன். கொஞ்சம் மதத்தலைவர்களும், மதப்பிரசங்கிகளும் அதைச் செய்கிறார்கள். அவர்கள் அதையெல்லாம் செய்யக்கூடாது என்று நான் சொல்லமாட்டேன். அவர்கள் சொல்வதைக் கேட்க பலகோடிப்பேர் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொல்கிறார்கள். நல்லது.

ஆனால் மிகச்சிறுபான்மையினரான ஒரு வட்டம் உண்டு. அவர்களுக்கு தங்கள் பைகளை ஜேப்படிப்பவர்களிடமிருந்து அதையெல்லாம் கேட்டு அறிந்துகொள்ள ஆர்வமிருப்பதில்லை. அதிகாரவெறி, பிளவுமனப்பான்மை, வெறித்தனமான நம்பிக்கை ஆகியவற்றை ஏற்க மனமிருப்பதில்லை. அவர்களுக்காக மட்டுமே எழுத்தாளனாகிய நான் பேசுகிறேன். இதற்கு ஒரு பத்தாயிரம்பேர் இருக்கிறார்கள்.

உங்கள் உலகில் நான் வரமுடியாததுபோலவே என் உலகிலும் நீங்கள் நுழையமுடியாது. ஆகவே இந்தப்பக்கம் பார்த்து பொருமுவதைவிடுத்து அங்கே வந்துகுழுமும் மந்தைகளை கவனியுங்கள்.

ஜெ

முந்தைய கட்டுரையோகம்- உளம் அடங்கல் பயிற்சி
அடுத்த கட்டுரைமதமும் ஞானமும்