உங்கள் குலதெய்வம் பலி கேட்கிறதா?

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் வாங்க

 

அன்புள்ள ஜெயமோகன் ,

நான் தனிப்பட்ட முறையில் ஒரு இந்து நம்பிக்கையாளன். ஆனால் என் குலதெய்வம் என்னுடைய இந்து நம்பிக்கைக்கு வெளியே உள்ளது .ஆடு கோழி பலி கொடுப்பது, சாமி வந்து துள்ளுவது போன்ற பல சடங்குகளில் உள்ளன .அந்தச் சடங்குகளுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் என்  குலதெய்வம் ஆனதனால் நான் அதை கைவிட முடிவதில்லை.

எந்த ஓர் இந்துவுக்கும் இந்த சிக்கல் உண்டு என்று நினைக்கிறேன். என்னுடைய குலதெய்வ வழிபாட்டை நான் விட்டு விடக்கூடாது என்று உங்களுடைய ஒரு காணொளி வழியாக புரிந்து கொண்டேன். அதேசமயம் அதையெல்லாம் செய்வதும் எனக்கு பொருந்தவில்லை. ஒரு சைவ மரபைச் சார்ந்த நான் உறுதியான சடங்கு ஆசாரங்களை கடைப்பிடிப்பவன். அதே சமயம் சடங்குவாதி அல்ல.

உங்களுடைய சைவ சமய வகுப்புக்கு நான் வந்திருக்கிறேன். அங்கே எனக்கு சைவம் என்பது சிறு தெய்வ வழிபாடு செய்வதற்கு எதிரானது என்ற எண்ணம் தான் உருவானது. ஆனால் குலதெய்வத்தை விட்டு விடக்கூடாது என்றும் அந்த சைவ ஆசிரியர் என்னிடம் சொன்னார். இந்த முரண்பாட்டை நான் எப்படி புரிந்து கொள்வது ?

சிவ. மாணிக்கம்

 

அன்புள்ள மாணிக்கம் அவர்களுக்கு,

சைவ மரபைச் சார்ந்த ஒருவருக்கு பெரும்பாலும் ஊன்பலி கேட்கும் குல தெய்வங்கள் இருப்பது வழக்கம். உங்களுக்கு இரண்டு பண்புத்தொடர்ச்சிள் உள்ளன. ஒன்று, மிகத் தொன்மையான காலத்தில் இருந்தே உருவாகி வந்த ஒரு பழங்குடி மரபு. உங்கள் குல தெய்வங்கள் அதைச் சார்ந்தவை . இன்னொன்று, பழங்குடி மரபில் இருந்து உருவாகி, படிப்படியாக தத்துவத்திற்குள் நுழைந்து, மேலும் மேலும் செம்மையாக்கப்பட்டு கொண்டே வந்த சைவ மரபு.

சிவனும் ஒரு பழங்குடித் தெய்வம்தான் .இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் கூட பல கோயில்களில் சிவனுக்கு ஊன் பலி அளிக்கப்பட்டிருக்கின்றது. சிவனுக்கு மனிதபலியே அளிக்கப்பட்டு இருப்பது பிரபலமான பெரியபுராணக் கதை வழியாக நமக்கு தெரிய வருகிறது அல்லவா?

ஆகவே இரண்டு நதிப்பெருக்குக்ள் உள்ளன உங்களுக்கு. ஒரே ஊற்றில் இருந்து வரும் இரண்டு நதிகள் அவை. ஒன்று அதே வீச்சுடன் கொப்பளித்து சேறும் சக்தியும் நுரையும் ஆக பெருகி வருகிறது. இன்னொன்று தேங்கி, நிதானமாகி, தெளிந்து வருகிறது. இரண்டும் ஒரே ஊற்றில் இருந்து வருபவை என்று உணர்வது அவசியம் .

சைவ ஆசாரம் கொண்ட நீங்கள் அந்த ஆசாரங்களை விட்டு விட வேண்டியது இல்லை. ஆகவே உங்கள் குல தெய்வத்திற்கு நீங்கள் ஊன்பலி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை . ஒரு குல தெய்வத்திற்கு நீங்கள் எந்த வகையிலும் நேரடியாக பலிபூஜை செய்ய வேண்டியதில்லை .அங்கே பலியிடப்படும்  விலங்குக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அந்த பூசைகள் நிகழும்படி பார்த்துக்கொள்ளலாம், சைவ முறைப்படி வேண்டிக்கொள்ளலாம்.

அத்துடன் அண்மைக்காலமாக எல்லா குல தெய்வங்களுக்கும் ஊன்பலி அளிக்கும் பழக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஊன்பலிக்கு பதிலாக பல்வேறு குறியீச்டுச் சடங்குகள் செய்யப்படுகின்றன. பூசணிக்காய் கும்பளங்காய் போன்றவை ஊன்விலங்குக்கு பதிலாக வெட்டப்படுகின்றன. செங்குழம்பு குருதியாக அளிக்கப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக ஊன்பலி பெற்று வந்த தெய்வங்கள் இந்த குறியீட்டு சடங்குக்குள் மாற்றப்பட்டு விட்டன. அவ்வாறு மாறுவதும் நல்லது .ஏனெனில் வரலாறு என்பது தொடர்ந்து பண்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்று தான் .

அதனால் நீங்கள் குல தெய்வத்தை இழந்து விடுவதில்லை .மாறாக அதை இன்னும் நன்மையாக உள் வாங்கிக் கொள்ளத்தான் செய்கிறீர்கள். அதை அறியாதிருப்பது உதாசீனம் செய்வது மட்டும்தான் கூடாது.

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைநவீனத் தமிழிலக்கியத்தைக் கற்பது எப்படி?