அன்பு ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு
என் பெயர் செல்வகுமார் . நான் கரூரில் உள்ள ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன் .மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தேன் .அதற்கு முன்பு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வந்தேன் .2022 ஆம் ஆண்டில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தேன். போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் போது வேறு எந்த நோக்கமும் இன்றி தொடர் பயிற்சி பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன் .ஆனால் பணியில் சேர்ந்து பிறகு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டேன் .நான் பணியில் சேர்ந்து இருந்த காலம் கொரோனா நோய் தொற்று முடிவடைந்திருந்த தருணம் . எண்ணற்ற மாணவர்கள் கொரோனா காலகட்டத்தில் பள்ளி படிப்பினை அறவே மறந்து இருந்தனர் . அதன்பின் கல்லூரி சேர்ந்த பின் அது அவர்களுக்கும் மட்டும் கடின காலமல்ல . ஆசிரியர்களுக்கும் தான் .எப்பொழுதும் அலைபேசியில் மூழ்கி போயிருந்தனர். பல்வேறு போதை பழக்கங்களுக்கு அடிமை ஆகியிருந்தனர் . முழுமையாக கவன சிதறல்களுக்கு ஆளாகி இருந்தனர் .ஒருவேளை அலைபேசியை ஆசிரியர் வாங்கிக் கொண்டால் அவர்களது மனநிலை பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது .
பாடம் எடுக்கும் போது எப்பொழுதும் பேசிக் கொண்டும் ,கவனமில்லாமலும் இருந்து வந்தனர் .இது என்னை போன்ற ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்தது .அவர்களை கையாலாக முடியாமல் மிகப்பெரும் மன அழுத்தத்தினை ஏற்படுத்தியது .அப்பொழுதுதான் என்னுடைய நண்பர் கதிரேசன் அவர்களிடம் இந்த சூழ்நிலை எடுத்துக் கூறி ஏதேனும் தியானம் கற்றால் நன்றாக இருக்கும் என்று கூறினேன் . அப்பொழுது அவர் தியானத்தினை ஒரு குருவின் முன்னிலையில் மட்டுமே கற்க வேண்டும் .இணையத்தினை பார்த்து தியானம் கற்றால் அது ஆபத்தில் முடியும் என்று எச்சரித்தார் .இந்த உரையாடல் நிகழ்ந்த மூன்றாவது தினம் உங்களுடைய இணையதளத்தில் தில்லை செந்தில் பிரபு அவர்களின் உளக்குவிப்பு முகாமிற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது .அது வெள்ளி மலையில் நிகழ்ந்த முதல் தியான வகுப்பு .பார்த்த உடனே அந்த தியான வகுப்பிற்கு விண்ணப்பித்து விட்டேன் .
என் நண்பர் கதிரேசனுக்கும் சேர்த்து விண்ணப்பித்து இருந்தேன் . இருவரும் சேர்ந்து தியான வகுப்பில் கலந்து கொண்டோம் .இந்த நிகழ்வு என் வாழ்வில் நிகழ்ந்த பெரும் அற்புதம் .தியான வகுப்பில் இருந்த அந்த மூன்று நாட்கள் என் வாழ்வை மாற்றிய மூன்று நாட்கள் என்றே சொல்லலாம் .அன்பு ஆசிரியர் தில்லை செந்தில் பிரபு அவர்கள் அவரது நடவடிக்கையின் மூலமே பலவற்றை எங்களுக்கு கற்று தந்தார் .மேலும் அவர் வகுப்பு எடுத்த விதம் என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் பாடம் . அவர் எங்களிடம் அடிக்கடி சொன்ன விஷயம் என்னவென்றால் சூழ்நிலைகளை சரியாக அமைத்தால் செயல்கள் தானாக நடக்கும் என்று .அதுபோலவே சரியான சூழ்நிலைகளை தியான அரங்கில் அமைத்து எங்களுக்குள் தியானத்தினை நிகழ்த்தினார் .அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதற்காக பல்வேறு கருவிகளை எங்களுக்காக அவர் தந்தார் .சக்தி வாய்ந்த பிராணயாமா பயிற்சிகள் , யோகநித்ரா, சைதன்ய தியானம் எங்களுக்கு கற்று கொடுக்கப்பட்டது .
முதல் நாளில் என்னுள் சலனம் மட்டுமே நிலவியது .இரண்டாம் நாள் சலனம் குறைந்து அமைதி வந்தது.மூன்றாம் நாள் முழு புத்துணர்ச்சியோடு என்னுள் பூரண அமைதி குடி கொண்டது. வாழ்வில் இதுவரை பெறாத புதிய அனுபவங்களை அந்த மூன்று நாட்களில் பெற்றேன் .நம் வாழ்க்கை என்பது மகிழ்வாக வாழத்தான் என்பதை உணர்ந்தேன். அதன்பின் 40 நாட்கள் இருவேளை தியான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன் .இந்த பயிற்சிகள் என் அன்றாட வாழ்வில் முழுமையாக பிரதிபலித்தது .மாணவர்களின் மீது கொண்ட கோபம் குறைந்து அவர்களின் பக்கம் உள்ள பிரச்சனைகளை பார்க்க ஆரம்பித்து ஒவ்வொரு மாணவரிடமும் நெருங்கி பழக ஆரம்பித்தேன் .அப்பொழுதுதான் புரிந்தது அவர்களின் குடும்ப சூழல் மற்றும் பொருளாதார சிக்கல்கள் .இந்த தியானம் மட்டும் கிடைக்கவில்லை என்றால் நானும் அறியாமையில் தான் இருந்திருப்பேன் .
நான் பணி புரியும் கல்லூரி மாணவர்கள் கிராமப்புறம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள். ஒவ்வொரு மாணவரின் குடும்ப சூழ்நிலையும் மிக மோசமாக இருந்தது .ஒவ்வொரு மாணவருக்கும் அந்த சமயத்தில் அன்பு என்ற உணர்வு அதிகமாக தேவைப்பட்டது. அந்த உணர்வினை கொடுத்தபின் அவர்கள் நல்ல முறையில் நடந்து கொண்டனர். ஆனால் அவர்கள் வாழ்க்கையினை மாற்றுவதற்கு ஏதாவது ஒன்று செய்தாக வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது .அந்த சூழ்நிலையில் அன்பு ஆசிரியர் தில்லை செந்தில்பிரபு அவர்களிடம் இரண்டாவது தியான வகுப்பிற்கு தன்னார்வலராக வருவதற்கு அனுமதி வேண்டி பெற்றேன். அந்த நிமிடம் எனக்குள் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .அது முதல் இதுவரை நிகழ்ந்த எல்லா தியானா வகுப்பிலும் தன்னார்வலராக பங்குபெற்று வருகிறேன் .ஒவ்வொரு முறை வெள்ளி மலை சென்று வரும் பொழுதும் ஒரு ஆழ்ந்த அகக்குளியல் செய்து வருகிறேன்.
தியானம் என்னுள் அறிமுகம் ஆவதற்கு முன்பு நான் ஒரு இன்ட்ரோவர்ட் நபராக இருந்து வந்தேன். தியானம் என்னுள் இருந்த மனத்தடைகளை அகற்றி வெளிமுக செயல்கள் புரியும் நபராக மாற்றியது . அதன் பின் எந்த ஒரு பொறுப்பும் கொடுக்கப்படாமலேயே என்னுடைய கல்லூரியில் செயல்கள் செய்ய ஆரம்பித்தேன் . கல்லூரி வளாகத்தினை தூய்மைப்படுத்துதல் , மரம் நடுதல், தோட்டம் அமைத்தல், கழிப்பறைகளை பராமரிப்பு செய்தல், அரசு தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்களை தாமாகவே முன்னெடுத்தேன் . இவையெல்லாம் தியானம் எனக்கு அளித்த கொடைகள் .உடல் நிலையிலும் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது .சில வருடங்களாக அல்சர் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தேன் . அதுவும் முழுமையாக குணமாயிற்று. கல்லூரி பணியில் சேர்ந்த ஒரு வருடம் கழித்து நூலக பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டேன் .எதன் அடிப்படையில் அந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது என்று தெரியவில்லை . ஆனால் நூலகத்தின் வாயிலாக மாணவர்கள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக கருதினேன் .ஆனால் அந்த மாற்றத்தினை எப்படி ஏற்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை .
கல்லூரி நூலகத்தில் பாட புத்தக மட்டுமே இருந்தன .அதுவும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன .கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நூலகம் செயல்படாமலேயே இருந்து வந்தது .அன்பு ஆசிரியர் தில்லை செந்தில் பிரபு அவர்களிடம் கல்லூரி நூலகம் மற்றும் மாணவர்களின் சூழ்நிலையை எடுத்துக் கூறி தங்களது அறக்கட்டளையின் வாயிலாக ஏதேனும் உதவ முடியுமா என்று கோரிக்கை வைத்திருந்தேன் .அவரும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் உங்களது செயல்திட்ட திட்டங்களை செயல்படுத்துங்கள் என்று கூறினார். ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் உதவியோடு கல்லூரி நூலகம் குளிர்சாதன வசதியோடு புதுப்பிக்கப்பட்டது .மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது .நூலகம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது .அந்த நிகழ்வு கல்லூரி வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரும் ஆச்சரியம் .
இந்த நிகழ்வு மாணவர்கள் மட்டுமில்லாமல் பல ஆசிரியர்களின் வாழ்விலும் மாற்றத்தினை ஏற்படுத்தியது.எண்ணற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் நூலகத்தினை பயன்படுத்த ஆரம்பித்தனர் .பல ஆசிரியர்கள் நூலகத்திற்கு புத்தகங்களை கொடையாக வழங்கினர் .அதன் தொடர்ச்சியாக ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் வாசிக்கலாம் வாங்க புத்தக வாசிப்பு போட்டி கல்லூரி மாணவர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டது .இந்தத் திட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஒரு புத்தகம் வழங்கப்பட்டது .அவர்களுக்கு 50 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது .ஆகஸ்ட் 26, 2025 வாசிக்கலாம் வாங்க புத்தக வாசிப்பு போட்டி நிகழ்ந்த தினம் . அன்றைய தினம் என்னை போன்ற பல்வேறு ஆசிரியர்களுக்கு ஆச்சரியங்கள் நிகழ்ந்த தினம். எங்களுடைய மாணவர்களின் திறமைகளை கண்டு பரவசத்தில் ஆழ்ந்து போனோம் .
அந்த தினம் எங்களுடைய மாணவர்களின் மீது இருந்த பார்வையே மாறிப் போனது .அந்தக் போட்டியில் நடுவர்களாக பங்கேற்ற ஆசிரியர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர் .ஒவ்வொரு மாணவரும் மிக அருமையாக தங்களுடைய திறமையினை வெளிப்படுத்தினர். இக்கிகய், ரகசியம், மாயாஜாலம் , கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறு , ரிச் டாட் புவர் டாட், துப்பட்டா போடுங்கள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை முழுமையாக படித்து அதனுடைய சாராம்சத்தை வெளிப்படுத்தியது மிகவும் அருமை . அந்த நிகழ்வுக்கு பின் பல்வேறு ஆசிரியர்கள் நூலகத்திற்கு பல்வேறு நூல்களை கொடையாக வழங்கினர் . மாணவர்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல ஆசிரியர்களின் தனிப்பட்ட வாழ்விலும் மாற்றத்தினை ஏற்படுத்தியது. இதற்காக அன்பு ஆசிரியர் தில்லை செந்தில்பிரபு அவர்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது .
வாசிக்கலாம் வாங்க புத்தக வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா டிசம்பர் 24 2025 அன்று நடத்தப்பட்டது .அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆசிரியர் தில்லை செந்தில் பிரபு அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .ஆசிரியர் தில்லை செந்தில் பிரபு அவர்களுக்கும் இந்த நிகழ்வு மிகுந்த மனநிறைவை தந்திருக்கும் என்று நம்புகிறோம் . தாங்கள் அறிமுகம் செய்த இந்த தியானம் என்னுடைய வாழ்க்கையில் மட்டுமல்ல ,எங்களுடைய மாணவர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது .அதற்காக எங்கள் கல்லூரியின் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் .அன்பு நண்பர் கதிரேசனுக்கும் மிக்க நன்றி . வாழ்க்கை சந்தோஷமாய் வாழ்வதற்கே .நன்றி ……
செல்வக்குமார்












