அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் பயிற்சி வகுப்புகள் வழியாக இலக்கியத்தை முறையாக அறிமுகம் செய்யலாம் என்று தோன்றுகிறது. நான் இலக்கியம் சம்பந்தமான விவாதங்களை கூர்ந்து கவனிக்கும்போது பெரும்பாலானவர்களுக்கு இலக்கியம் என்றால் என்ன என்பது பற்றிய ஒரு புரிதல் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிகிறது.க்ணிசமானவர்கள் இலக்கியம் பற்றிய குத்துமதிப்பான பார்வையை கொண்டிருக்கிறார்கள். ஒரு கதையைப் படிக்கிறார்கள், அதை விரும்புகிறார்கள், ஆனால் அதைப்பற்றி பேசும்போது அதன் கதைச் சுருக்கத்தை மட்டுமே சொல்ல தெரிந்திருக்கிறது. அந்த கதையிலிருந்து மேலே செல்வதற்கான பயிற்சி இல்லை. ஆகவே எந்த கருத்தும் சொல்லாமல் தாமதிக்கிறார்கள். அல்லது அதை கதையை சுருக்கி சொல்லி பேசாமல் இருக்கிறார்கள் .
நிறைய பேரிடம் பேசும்போது அவர்களுக்கு படைப்புகளைப் பற்றி கருத்து சொல்வதற்கான தயக்கம் இருப்பது தெரியவருகிறது. அத்துடன் படிமம் உருவகம் போன்ற ஏராளமான கலைச் சொற்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதும் தெரியவருகிறது. அண்மையிலே நடந்த ஒரு வினாடி வினாவில் படிமம் என்றால் என்ன என்று கேள்வி கேட்கப்பட்ட போது அங்கிருந்த பெரும்பாலானவர்களால் சரியான பதிலை சொல்ல முடியவில்லை என்பதை கண்டேன். இந்த அடிப்படையான தரவுகள் கூட தெரியாமல் தான் பலர் இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் .ஆகவே முறையாக இலக்கியத்தை அறிமுகம் செய்யும் வகுப்புகள்தான் இன்றைக்கு அவசியமோ என்று எனக்கு தோன்றுகிறது.
பார்வையாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு உண்மையில் அடிப்படை புரிதல் கூட இல்லாத போது அதிதீவிரமான இலக்கிய உரையாடல்கள் இலக்கியவாதிகளுக்கு நடுவே மட்டுமே நிகழ்வதாக சுருங்கி விடுகிறது அல்லவா?
தன்ராஜ்
அன்புள்ள தன்ராஜ்,
நீங்கள் சொல்வது உண்மை. இங்கே இலக்கியப் பயிற்சி அளிப்பதற்கான எந்த அமைப்பும் இல்லை. இலக்கியத்திற்குள் நுழையும் ஒருவர் முட்டி மோதி ,செவி வழியாக வரும் உதிரி தகவல்களை தானே கோர்த்து எடுத்துக் கொண்டு, இலக்கியம் என்றால் என்ன என்கிற ஒரு புரிதலை வந்தடைவது இங்கு வழக்கமாக உள்ளது. அது நிறைய தவறுகளுடனும் குழப்பங்களுடனும்தான் உள்ளது .பெரும்பாலானவர்கள் பல ஆண்டுகள் கழித்துத்தான் பல கலைச் சொற்களை உண்மையிலேயே புரிந்து கொள்கிறார்க்ள். அதுவரைக்கும் அந்த கலைச்சொற்களை தவறாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நவீனத்துவம் பின்நவீனத்துவம் போன்ற கலைச் சொற்களை மிகப் பிழையாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல எழுத்தாளர்களை இருபது முப்பதுஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சூழலில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள் .
இக்கலைச் சொற்களை முறையாக அறிமுகம் செய்யும் கல்வி முறை நமக்கு இல்லை. அந்தக் கல்வி முறையில் கற்பவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த தகுதியும் அற்ற மிக எளிமையான மாணவர்கள் என்பதனால் அங்கே கற்பிக்கப்பட்டும் பயனில்லை. ஆனால் இலக்கியம் கற்பதற்கான வகுப்புகளை நடத்துவது அவசியம். ஆனால் யார் நடத்துவது, எங்கு நடத்துவது என்பது பெரிய சிக்கல்தான். நாங்கள் தத்துவத்தைக் கற்பிப்பதற்கான சில வகுப்புகளை நடத்தி வருகிறோம். இலக்கிய வகுப்புகளும் அவ்வப்போது நிகழ்கின்றன. ஆனால் அவை போதாது என்றும் உணர்கிறோம். மிக விரிவான அளவில் இந்த வகுப்புகளை நடத்தலாமதான்.
நீண்ட காலத்திற்கு முன்பு இவ்வாறு தமிழ் சூழலில் தமிழிலக்கிய மரபு, இலக்கியத்தின் அடிப்படை கொள்கைகள், கலைச்சொற்கள் பற்றிய மிகப்பெரிய அறியாமை இருப்பதையும்; அந்த அறியாமையை மறைத்துக் கொண்டு அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர் போன்ற ஒரு பாவனையுடன் பெரும்பாலானவர்கள் பேசிக் கொண்டிருப்பதையும் உணர்ந்து, சலித்துத்தான் நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம் என்ற நூலை நான் எழுதினேன் .அந்த ஒரு நூல் வழியாக இந்த கேள்விகள் பெரும்பாலானவற்றுக்கான பதில்களை அடைந்து விட முடியும்.
ஆனால் அந்த நூலை வாங்கிய அதை முழுமையாக படிப்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள் .ஒரு விவாதத்தில் தங்களுக்கு புரியாத ஒன்றை அந்த நூலில் சென்று பார்த்து புரிந்து கொள்பவர்களும் குறைவானவர்களே. அந்த நூல் ஒரு பாட நூலாகவே தமிழ் நவீன இலக்கியத்திற்கு அமைய தகுந்தது.ஆனால் கல்லூரிகளில் கூட மிகச் சிலரை அவற்றை அதை பயன்படுத்துகிறார்கள். அந்த நூலை இத்தருணத்தில் பரிந்துரைப்பது மட்டுமே நான் செய்யக்கூடியது.
ஜெ











