அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் நடத்திய வாசிப்பு பயிற்சி வகுப்பில் நான் என் மகனுடன் கலந்து கொண்டேன் .அதுவரைக்கும் வாசிப்பு என்பது மிக எளிதான, இயல்பான ஒரு செயல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வாசிப்பதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சி என்ன, அதற்கு இருக்கும் தடைகள் என்ன, அந்த்த் தடைகளை எப்படி களைவது -என்பதெல்லாம் அந்த வகுப்பில் தான் எனக்கு தெரிய வந்தது .
அத்துடன் வாசிப்பு என்பது மிக ஒற்றைப்படையான ஒரு செயல் அல்ல என்றும் ,அதில் பல படிநிலைகள் உள்ளன என்றும், நமக்கான வாசிப்பையே நாம் பல வகையாக வகுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது .
அந்த வகுப்பில் தீவிரமான கட்டுரைகளை எப்படி படிப்பது என்று செயல்முறை வழியாக கற்பித்தீர்கள். அதே சமயம் எளிமையான வணிக புனைகதைகளையும் நிறைய படிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னது எனக்கு விசித்திரமாக இருந்தது. நான் எளிமையான கதைகளை அதிகம் படிப்பவன் அல்ல. எனக்கு தேவை என்று நினைக்கும் முக்கியமான கட்டுரைப்படைப்புகளை மட்டும் தான் படித்து வருகிறேன் .அந்த வாசிப்பு அவ்வளவு சரியானது அல்ல என்ற எண்ணம் நீங்கள் சொல்லும்போது உருவாகியது. ஆனால் அது எப்படி என்று எனக்கு புரியவில்லை ,
வாசிப்பு என்பது கல்வி வழியாக நமக்கு கிடைக்க வேண்டிய ஒன்று. ஆயிரக்கணக்கான கல்வி நிலையங்கள் தமிழில் இன்று உள்ளன. அவை வாசிப்பை இயல்பாகவே கற்பித்து கொடுக்க வேண்டும் .ஆனால் வாசிப்புப் பழக்கம் உள்ள ஆசிரியர்களை பார்ப்பது என்பது தமிழில் மிக மிக அரிதாக உள்ளது .பெரும்பாலான ஆசிரியர்களால் ஒரு பத்தியை கூட சுயமாக படித்து புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் ஏற்கனவே படித்தவற்றையே திரும்ப வகுப்பாக எடுக்கிறார்கள் .நம்முடைய மொத்தக் கல்விமுறையே காதால் கேட்டு கண்ணால் பார்த்து புரிந்து கொள்ள அளவில்லே உள்ளது. ஒரு புத்தகத்தை படித்து புரிந்து கொள்வது என்பது நம்முடைய கல்வி முறையிலேயே இல்லை. ஆகவே வாசிப்பு என்பது தமிழ்நாட்டில் ஒரு இயக்கமாகவே இல்லை .இதனால் தான் இங்கு புத்தகம் வாசிப்பவர்கள் எண்ணிக்கை ஒரு சதவீதத்திற்கும் குறைவு என்று கணக்குகள் காட்டுகின்றன .
வாசிப்பவர்களும் தங்களே முயன்று வாசிப்புக்கு பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்தான். ஆனால் தனியாக பயிற்சி எடுத்துக்கொண்டால் மேலும் பலர் வாசிப்புக்குள் வர வழி உண்டு. நீங்கள் எடுத்தது போன்ற வாசிப்புப் பயிற்சிகள் குழந்தைகளுக்கு இன்னும் நிறைய நடத்தப்படும் என்றால் இங்கு ஒரு வாசிப்பு சமூகம் உருவாவதற்கு வழி உண்டு.
ஆராவமுதன் மணிவண்ணன்.

அன்புள்ள ஆராவமுதன்,
நாங்கள் வாசிப்புப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியதற்கான காரணமே உண்மையில் இங்கே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் முறையான வாசிப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை என்பதுதான். முறையான வாசிப்புப் பயிற்சி வழியாக நல்ல வாசிப்பு இயல்பை எவராலும் உருவாக்கிக் கொள்ள முடியும். உண்மையில் கலைகளில் ஈடுபடுவதற்கான உளத்தகுதிகள் தனியாக உள்ளன. அனைவராலும் கதைகளை படிக்கவும் முடியாது .அதற்கு கற்பனை தேவை. ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கான புத்தகத்தை படிக்கும் வழக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். உலகமெங்கும் பண்பாட்ட நாடுகளில் பெரும்பான்மையான ஏதேனும் ஒரு நூலை படிப்பவர்களாகவே உள்ளனர்.
தமிழகத்தில் புத்தகப் படிப்புக்கு எதிரான மனதிலே உருவாகியுள்ளது. இங்கே படிப்பது என்பதே ஒரு வெட்டி வேலை என்று நம்முடைய கல்வி முறையே மாணவர்களிடம் சொல்கிறது. நம சமூகம் நம்புகிறது. ஆகவே இங்கே படிப்பவர் கிட்டத்தட்ட தலைமறைவாக்வே அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. படிப்பது எவ்வளவு உயர்வானது என்று கற்பிப்பதற்கும், படிப்பதற்கான அடிப்படைப் பயிற்சியை அளிப்பதற்கும் நாங்கள் எங்களுடைய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
ஆனால் தொடர்ச்சியாக இந்த வகுப்புகளை நடத்துவதற்கு பல சிக்கல்கள் உள்ளன. மாணவர்கள் விடுமுறை இல்லாத நாட்களில் இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள முடிவதில்லை. விடுமுறைகள் நம்முடைய கல்விச் சூழலில் மிக குறைவாகவே உள்ளன .இருந்தாலும் இந்த வகுப்பில் தொடர்ந்து நடத்தும் எண்ணத்துடன் தான் இருக்கிறோம் .
வணிக இலக்கியத்தை ஏன் படிக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்றால் ஒருவரால் எப்போதும் தீவிரமான எழுத்துக்களை படிக்க முடியாது .அவ்வாறு படிக்காத போது அவர் நீண்ட நீண்ட இடைவெளிகளை விடுவதற்கான வாய்ப்பு உண்டு. அந்த இடைவெளிகள் வாசிப்பு என்கிற ஒரு பழக்கத்தை இல்லாமல் ஆக்கிவிடும். கண்ணுக்கும் மனதிற்கும் ஒருவகை ஒத்திசைவு உருவாவதுதான் வாசிப்பதற்கு மிக அடிப்படையானது .தொடர்ந்து எதையேனும் தினமும் வாசித்துக் கொண்டிருப்பவர்களால் மிக எளிதாக எந்த புத்தகத்தையும் படிக்க முடியும். மிகுந்த இடைவெளி விட்டு ஆண்டுக்கு ஒன்றோ இரண்டாவது நூல்களை மட்டும் படிப்பவர்களால் அந்த நூல்களை ஆழ்ந்து படிக்க முடியாது. தொடர்ச்சியாகவும் படிக்க முடியாது.
வாசிப்பை ஒரு மன இயக்கமாக, அன்றாட வாழ்க்கையாக நிலை நிறுத்த வேண்டும் என்றால் எளிய வணிகப் படைப்புகளையும் அவ்வப்போது படிக்க வேண்டும். அவற்றை முக்கியமான நூல்களுக்கிடையேயான இடைவெளியாக, ஃபில்லர் ஆக ,பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தான் நான் சொல்ல வந்தது.
ஜெ











