அன்னைப் பெருமரம்

அன்புள்ள ஜெ

வணக்கங்கள்

2025 பிப்ரவரி மாதம் 14,15,16 தேதிகளில் தாவரவியல் வகுப்பிற்கு , எப்போதும் முழுமையறிவு வகுப்புகளுக்கு செல்வது போல முதல் நாள் மாலையே அதாவது வியாழக்கிழமை மாலையே சென்று விட்டேன். தாவரவியல் வகுப்பு என்பதாலேயே இவ்வளவு நாட்களில் அறிந்து கொண்ட தாவர இனங்களையும் , பெயர் தெரியாத சில தாவரங்களையும் ஆங்காங்கே இருந்ததை பதிவு செய்து கொண்டே வந்தேன் நித்யவனம் வரை. அதனாலேயே தாமதமாக இரவு கவிந்தபின் வந்து சேர்ந்தேன்.  1984ல் 17 வயதில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தாவரவியல் படிப்புக்கு விண்ணப்பிக்க என் தந்தையிடம் அனுமதி கேட்டு நின்ற காட்சியும் என் கல்லூரிக்கான  விண்ணப்பம் வீட்டிலேயே நிராகரிக்கப்பட்ட சம்பவமும் நிழலாடியது. இன்று ஏறக்குறைய நாற்பது வருடம் கழித்து 57 வயதில் ஒரு தாவரவியல் வகுப்புக்காக வந்துள்ள நிகழ்வு எனக்கும் இயற்கைக்குமான உறவை மேலும் ஆனந்தப்படுத்தியது. மறுநாள் காலை ஆறு மணிக்கு நல்ல மூடுபனியில் நமது புளியமர திறந்தவெளி கூடுகை பகுதி அருகே வந்தபோது பேராசிரியர் லோகமாதேவி பிரதான காட்டேஜ்க்கு வெளியே நின்று வடக்கு திசையில் மேட்டூர் பள்ளத்தாக்கை பார்த்தபடி நின்றிருந்தார், ஏறக்குறைய ஒரு ஆலயத்தின் தேவியை போலவே

காலை வகுப்பு ஆலமரத்தடியில் ஆரம்பமானது. “ஆல் என்றால் நீர் ” , இம்மரம் அபிரிமிதமான நிலத்தடி நீரை சேமித்து வைக்கும் என ஆரம்பித்தார், புனித நீரை தொட்டு நற்காரியங்களை துவங்குவது போல.. ! தாவரவியல் பெயர் ficus Benghalensis , Fig biology ஒரு தனித்துறை – FICUS ல் உள்ள இந்த ‘US’ என்று வந்தாலேஅன்னைப் பெருமரங்கள்என்று பொருள் படும் என்றார். அச்சொல்லே சிலிர்க்க வைத்தது. எங்கெங்கும் அன்னைகளாக நிறைந்து நின்ற கானகம் நினைவை நிறைத்து. தத்துவ வகுப்பில் உபநிடதங்கள் கானகங்களில் உருவெடுத்தது என்று நீங்கள் சொன்னதன் முழு பரிமாணம் புரிந்தது  இக்கணம்

தன் உடல் முழுவதும் உணவாக மாறி,  அதாவது பழங்கள் செரிந்துசொப்பி காய்த்தல்என்பதால் தான் அவை அன்னை மரங்கள் என்றார். …

ஒரு ஆலமரம் ஒரு குறுங்காடு போன்ற பரப்பளவை உருவாக்கும் தன்மையுடையது. ஆந்திராவின் அனந்தபூர் அருகேயுள்ளதிம்மம்மா மரிம்மானுஏறக்குறைய 5 ஏக்கர் பரப்புள்ளது. ஆலமரம் ” Symbol of Wisdom and Symbol of Mortality” போன்ற தன்மைகளுக்கு சிறந்த உதாரணமாக அறியப்படுகிறது. இதன் அடியில் பல்வேறு நிகழ்வுகளுக்காக கூடுவதால் ஞானத்தின் சின்னமாகவும், தன்னுடைய எண்ணற்ற விழுதுகளால் என்றும் அழியாத தன்மை கொண்டதாகவும் கருதப்படுகிறது, என்றார். அடுத்ததாக அதன் பழங்கள் என்று நான் இவ்வளவு நாள் நினைத்துக் கொண்டு இருநததெல்லாம் பழம் அல்ல என்றுகூறி துணுக்குற வைத்தார். அவை அத்தனையும் நன்கு திரண்டு கொழுத்த inflorescence, அதாவதுமலரமஞ்சரி. அதாவது இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் சைக்கோனியம் …., உட்புறமாக சுருண்டு கொண்ட மலர் மஞ்சரி என்றார். அதை தொடர்ந்து ஆல் மரத்திற்கும் அதற்கான கருவுறச்செய்யும் குளவிக்குமானபரஸ்பரம் சார்ந்து வாழுதல்ஆலம்பழம் மற்றும் குளவி இரண்டும் பரஸ்பரம் சார்ந்து வாழுதல் , ஒன்றுக்கொன்று கடமைப்பட்டவை, அதாவது அவை ஒன்றையொன்று இல்லாமல் வாழ முடியாது. (Obligate mutualism) பற்றி விளக்கினார். Ficus Benghalensis குளவிகளுடன் ஒரு தனித்துவமான கூட்டுவாழ்வு உறவைக் கொண்டுள்ளது, இரண்டு இனங்களும் இணை பரிணாம பண்புகளை வெளிப்படுத்துகின்றனஅதிலும் அந்த சைக்கோனியத்தின் துளைக்குள் (மரணத்தின் வாயில்) செல்லும் பெண் குளவி, தன் இறக்கைகள் மற்றும் உணர்கொம்புகளை இழந்து விடுமாம். உள்ளே செல்லும் போது மகரந்த சேர்க்கையும் நடக்கிறது. தானும் தன் இன் முட்டைகளை இட்டு விட்டு உள்ளேயே மரிக்கிறது . முட்டைகளில் இருந்த ஆண் மற்றும் பெண் பூச்சிகள் வெளி வருகின்றன. ஆண்கள் தன்னின் பெண்கள் வெளியேற வாய்க்கால் போல வழிகளை ஏற்படுத்திவிட்டு பெண்களுடன் புணர்ந்து கருவுற செய்கின்றன. பெண் பூச்சிகள் வெளியேறிவிடும். ஆண்கள் அங்கேயே மடிகிறார்கள். 80 மில்லியன் வருடமாக ….. ! எனக்கு கண்கள் பனித்தது, வெளி உலகறியா ஆணினத்திற்காக! ( நானும் ஆண் என்பதுதான் உண்மை காரணம்). இதை மூன்றாம் தத்துவ வகுப்புக்காக நான் வந்தபோது மாலை நடைப்பயிற்சியில் தங்களிடம் சொன்னபோது, அதற்கு நீங்கள்எத்தனையோ மனிதர்கள் கூட வெளி உலகறியாமலேயே இக்குளவிகள் செய்யும் வேலைகளை மட்டுமே செய்து வாழ்ந்து மடிந்து விடுகிறார்கள்என்றீர்கள். மேலும் இந்த அத்தி வகை பழங்கள் அனைத்துமே ficin என்ற நொதியால் அந்த ஆண் பூச்சிகளை கரைத்துவிடும் என்றார். அதைத்தான் நாம் வாங்கி உண்கிறோம். எனவே நீங்கள் நினைப்பது போல அத்தி வகை பழங்கள் வெஸ் டயட் இல்லை, அது Non- Veg என்றார் பகடியாக! இப்படி உருவான பழத்தை உண்டு செரித்து பறவை எங்கோ ஒரு இடுக்கில் எச்சமிடுகையில் அதிலிருந்த கடுகினும் சிறிய எள்ளளவு விதை தான் முளைத்து வளர்ந்துஅழிவின்மையின் குறியீடாகநிற்கிறது இப்படி என்று நாங்கள் அமர்ந்திருந்த மரத்தை காண்பித்தார்

ஆலம் மற்றும் அரச மரங்களின் இலை வடிவங்களை ( Acute and Acuminate) கொண்டு அவற்றின் ஆன்மீக தொடர்பை விளக்கினார். Peepal என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லுக்குமெய்யறிவுஎன்ற அர்த்தமுள்ளதையும் அரசமரம் ( போதிமரம்) புத்தமதத்தோடு சம்பந்தப்பட்டு உள்ளதையும் விளக்கினார். எனவே இந்த மரம் மனிதனோடும் பறவைகளோடும் பூச்சிகளோடும் ஆன்மீகத்தோடும் மிகவும் தொடர்புடைய மரமாகும். எவனோருவன் ஆலமரத்தை அறிகிறானோ அவன் வேதத்தை அறிந்தவன் என்கிறது பகவத்கீதை என்றார். இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆலம் பற்றி பேசவில்லை ஆனால் அத்தி மரத்தை பற்றி பேசுகிறது. கனியுள்ள அத்தி மரத்தை வெட்டியான் அல்லாவின் கோபத்திற்கு ஆளாவான் என்கிறது இஸ்லாம். ஒரு அத்தி மரம் பத்து மகன்களுக்கு சமம் என்கிறது இஸ்லாம்

இப்படி, ஆலமரத்துக்கு மட்டும் ஒரு குறுநாவலைப் போன்ற விவரணைகள் தந்தார். …… வந்தமரும்போது வெறும் ஆலமரமாய் நின்ற நம் ஆலமரம், வேறோன்றாக மனதில் உருவேறியது. அதை நான் மட்டுமே அறிவேன்

இதுபோல் எத்தனையோ தாவரங்கள் பற்றி இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தார்

போகன்வில்லாவின் வரலாற்றில் ஒரு பெண்ணின் தாவரங்கள் மீதான அதீத காதல் , எவ்வளவு பெரிய துணிவு மிக்க செயலை தூண்டியது என்றும், மகரந்தங்களுக்கான பயணப்பாதை உள்ளது பற்றியும்,….. 

அவர் கூறிய அனைத்தையும் சொல்லிவிட இயலாது. மேற்கூறியது ஒரு இருபது நிமிடம் நடந்த பாடமே

பேராசிரியர் லோகமாதேவியின் வகுப்பை முடித்தபின் எனக்குள் ஓடிய எண்ண ஓட்டம் இதுவே

மனிதனுக்கு இயற்கையின் மீதான ஆர்வம் ஒரு புள்ளியில் இரண்டாக பிரிகிறது. ஒரு பக்கம் செல்பவர் அதன் பிரம்மாண்டமான அழகிய , அதே சமயம் நுண்ணிய பேரமைதியில் ஆழ்ந்து பிரம்மத்தை காண்கின்றனர்… 

இன்னொரு வகை மனிதர்கள் அதன் பொருளீட்டி தரும் பக்கத்தில் வீழ்ந்து அதனை கட்டுக்கடங்காமல் அழித்து சமநிலைக்குலைவை ஏற்படுத்துகிறார்கள். பதிலுக்கு இயற்கை, தன் சுயசமநிலை (Self sustainability) தத்துவத்தின்படி சீர்செய்ய , பல்வேறுவிதமான நிகழ்வுகள் மூலம் தன்னை வெளிப்படுத்தி கொண்டேயிருக்கிறதுமனிதர்கள் தங்கள் தவறான நடவடிக்கைகளால் , தங்கள் உடம்பில் ஒரு பாகம் அழுகி துர்நாற்றம் வீசும் போதுகூட  அதை தொழில்நுட்பம் என்ற பட்டுத் துணி கொண்டு மூடிக்கொண்டு மேலும் மேலும் அழிவை நோக்கி செல்கிறார்கள்….ஏனெனில்  அழுகுவது தன்னுடம்பு தான்  பிரக்ஞையே இல்லை அவர்களுக்கு

இயற்கையின் பிரமாண்ட வெளித்தோற்றங்களான நெடிதுயர்ந்த வானங்காணா வனங்களையும், எப்போதும் வான் குடையின்கீழ் பரந்துவிரிந்து தென்றலுடன் கலந்து சிலிர்க்கும் புல்வெளிகளையும், கள்ளி கருகும் கானல்நீர்ப்பாலைவனங்களையும் ,  அடிவானம் வரை அரைவட்ட வடிவில் விரவிக் கிடக்கும் பெருங்கடல்களையும் , பொங்கிப் பெருகி ஆனந்த பாய்ச்சலில் பாறைகளை மணலாக மாற்றிக் கொண்டேயிருக்கும்  காட்டாறுகளையும், மறுகரை காண இயலாத அகண்ட பேராறுகளையும், நம்மை இமைகொட்ட விடாமல் உறைந்து நிற்க வைக்கும் பனிச்சிகரங்களையும்,  பூமிப்பந்தின் ஆதி ரகசியம் காக்கும் துருவப் பகுதிகளையும் ரசிக்கமாபெரும் ரசிப்புத் திறன்  தேவையில்லை. முட்டாள்களைக்கூட மண்டியிட வைக்கும் பல  சூத்திரங்கள் இயற்கையிடம்  உண்டு

மனிதன் கண்டறிந்த அறிவியல் விதிகளும் சமன்பாடுகளும்,   திசைகளும் அலகுகளும் கூட  இப்பிரபஞ்சத்தின் சாரத்தை   விளக்க வழியின்றி பொருளிழந்து தங்களைப்  பெற்றெடுத்த மனிதர்களின்நம்பிக்கைஇதயத்தின் அருகே திகைத்து நிற்கிறது . (The quote “Beyond the horizon of science, their belief only exists” is attributed to Albert Einstein.ஜன்ஸ்டீன் கூட இவ்வாறு சொன்னதாக ஒரு  செய்தி உண்டு. )

ஆனால்ஒரு சமூகப் பொறுப்புள்ள கருணையுள்ள மனிதபிறவிக்கு , இயற்கையின் இருத்தல் பற்றியும் அதன் மாசு மருவற்ற தெளிவான ஒன்றுக்கொன்று சார்ந்து நின்று சிலபல பரஸ்பர பகிர்வுகளின் மூலம் தன்னையும் வளர்த்துக் கொண்டு தன் எல்லை தாண்டாமல் தன் மையத்தையும் நிலைத்து நிற்க வைக்கும் சூட்சுமம் அறிய , இதையும் தாண்டி சில அதிநுண்ணிய பார்வையும் , அப்படிப்பட்ட பார்வைகள் கொண்டவர்களின் சிந்தனை துளிகளும், கருத்து பரிமாற்றங்களும் தேவைப்படுகிறது. அவர்களருகே அமர்ந்து , அவர்கள் உடன் நின்று கற்றலும் தேவையாகிறது. அப்படிப்பட்ட ஒரு வகுப்பு தான் பேரா. லோகமாதேவியின் தாவரவியல் வகுப்பு. இயற்கையின்அறிவியலைவிட இயற்கையின்அறவியலைதான் அதிகம் உணரச் செய்தார்.

வகுப்புகள் நடைபெற்று சில வாரங்கள் ஆகிவிட்டது…. ஆனால் தொடர்ந்து சந்தேகங்களை நண்பர்கள் எழுப்பிய வண்ணம் உள்ளனர்.. நேற்றிரவு கூட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பனி மூடிய இமயமலையிலும் , வறண்ட பாலைவனத்திலும்  மலரும் ஒரு அழகிய பலரைப் பற்றிய  சில அற்புதமான கருத்துக்களை பகிர்ந்தார். WhatsAppல் ஒரு சந்தேகம் கேட்டால், அதற்கு மிகச்சரியான பதில் வரும். குரல் மூலமாக, செய்தியாக , கட்டுரைகளாக, ….! சில கேள்விகளுக்கு …. 

எனக்கு தெரியவில்லை, … கேட்டு அல்லது படித்துவிட்டு சொல்கிறேன் என்றும் பதில் வரும். ஆனால் உடனடியாக மறுமொழி வந்தே தீரும். ஏனெனில் இவர்தாவரவியலின் தத்துவம்அறிந்தவராக உள்ளார். ஒரு மாணவி சிலமணி நேரங்களுக்கு முன்னர் கேட்டார், அம்மா எங்கள் வீட்டில் உள்ள தோட்டத்தில் குளவிகள் கூடு கட்டி உள்ளது! எப்படி அகற்றுவது என்று

எதற்காக அகற்ற வேண்டும்…. உங்கள் இல்லம் அவர்களுக்கு உகந்ததாக உள்ளது. அவர்கள் இங்கு வசிக்கிறார்கள் என்ற கவனம் மட்டுமே போதும். அவை உங்களை ஒன்றும் செய்யாது என்று அறவுரை அளித்தார். கற்றுக்கொண்ட படி வாழ்வது என்பது தான் கற்றலின் உச்சபட்சம். யோக ஆசிரியர் சௌந்தர் வகுப்புகள் முடியும் தருவாயில் சொன்னார்யோகாவை கற்றுக் கொடுக்க குருவால் இயலாது, நல்ல கருணையுள்ளம் கொண்ட அன்பான நண்பனாய் தான் முடியும் என்றார். இந்த தாவரவியல் என்ற மாபெரும் யோகத்தை கற்றறிய லோகமாதேவி என்னும் ஒரு கருணையுள்ளம் கொண்ட அன்பான தோழி நமக்கு கிடைத்துள்ளார் . அவருக்கு லோக மாதேவி என்ற பெயர் முழுவதுமாக பொருந்தும்

நித்யவனத்தின் முழுமையறிவு ஆசிரியர்களின் அணி,  பல தரப்பட்ட வடிவமும் வண்ணங்களும்  கொண்ட மலர் வளையம் போன்றதுகற்றுக் கொடுக்கும் உத்திகளில் ஒவ்வொன்றும் தனித்துவமானது.  எந்த மலரும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. அந்த மலர் வளையத்தை கையிலெடுத்து எப்படிச் சுழற்றி சுழற்றி பார்த்தாலும் சரி அல்லது அதை ஒரு மேடையில் வைத்து நாம் சுற்றி சுற்றி வந்து பார்த்தாலும் சரிஅந்தந்த துறைக்கான வண்ணங்களோடும் நறுமணத்தோடும் மிளிர்கின்றது

எவறொருவர் ஒருவர் தேனீயாக இம்மலர் வளையத்தை  மீண்டும் மீண்டும் தொடர்ந்து வந்து அணுகி அமர்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே கிட்டும் ஞானமலரமுது. . … 

நித்யவனத்தில் எப்போது கால் வைத்தாலும்நாளாந்தாஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கவே இயலவில்லை

பேரன்புடன் 

செல்வக்குமார் 

மதுரை

முந்தைய கட்டுரைஆன்மிகமும் இலக்கியமும், கடிதம்.