அன்புள்ள ஜெயமோகன் ,
அஜிதன் நடத்தும் மேலைத் தத்துவ வகுப்பு லண்டன் மற்றும் மேலை நாடுகளில் நடக்கும் தகவல் பற்றி பேசிக்கொண்டிருந்த போது ஒரு நண்பர் கேட்ட கேள்வியை ஒட்டி என்னுடைய சந்தேகத்தை கேட்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். மேலை நாடுகளுக்கு சென்று தமிழில் அல்லது ஆங்கிலத்தில் நாம் வகுப்பு நடத்த வேண்டிய அவசியம் என்ன ?அங்குள்ள பல்கலைக்கழகங்களிலேயே மிகச் சிறந்த முறையில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன அல்லவா ?
ராடன்
அன்புள்ள ராடன் ,
உண்மைதான் மேலைத் தத்துவ வகுப்புகள் மேலைநாட்டு பல்கலைக் கழகங்களிலே மிக விரிவாகவே நடத்தப்படுகின்றன. முனைவர் பட்டம் வரைக்கும் அதில் படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சுருக்கமாக தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் பயிலப்படத்தக்க பட்டய வகுப்புகளுக்கோ மற்ற பயிற்சிகளுக்கோ செல்லலாம்.
அப்படி என்றால் ஏன் நாம் அங்கே தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மேலைத்தத்துவ வகுப்பை நடத்த வேண்டி இருக்கிறது?
ஒரு சிறு வேறுபாடுதான் அந்த தேவையை உருவாக்குகிறது. சிந்திக்க விரும்புபவருக்கு தத்துவத்தை வெறும் பாடமாக நடத்த முடியாது. அது கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே பயன்படும். தத்துவத்தை வாழ்க்கைச் சிக்கல்களுடனும் அதில் இருந்து எழும் கேள்விகளுடன் இணைத்து புரிந்து கொள்வதுதான் சரியான வழியாக இருக்க முடியும்.
அத்தகைய வாழ்க்கைப் பிரச்சினைகள் அமெரிக்காவில் உள்ளன. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து; அங்குள்ள அரசியல் , சமூகவியல், உளவியல் பிரச்சனைகளை சந்திப்பவர்கள் எளிதாக அதன் வழியாகத் தத்துவத்திற்குள் செல்வார்கள். நாம் மேலைத் தத்துவத்தை கற்கும் போது நாம் சந்திக்கும் வாழ்க்கைச் சிக்கல்களில் இருந்துதான் செல்ல முடியும்.
அமெரிக்காவிலேயே குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர் கூட குடும்ப அமைப்பில் இந்தியராகத்தான் நீடிப்பார். உறவுகளில் இந்திய உள்ளம்தான் இருக்கும். பண்பாட்டுச் சிக்கல்கள் எல்லாமே இந்தியா சார்ந்தவையாக இருக்கும். அரசியல் கூட பண்பாட்டு அடிப்படையில் நிகழ்வதனால் அதுவும் இந்தியா சார்ந்ததாகவே இருக்கும்.
ஆகவே இந்தியப் பிரச்சினைகளிலிருந்து தத்துவக் கொள்கைகளுக்கு செல்லவேண்டும் என்றால் அதை இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு தத்துவ அறிஞர் நடத்தும் வகுப்பிலேயே எதிர்பார்க்க முடியும். இதனால்தான் அங்கே வகுப்புகளில் தத்துவம் பயின்றவர்களும் இந்த வகுப்புகளுக்கு வருகிறார்கள்.
ஜெயமோகன்










