உடன்தங்கல் பற்றி…

பெரு மதிப்பிற்குரிய ஆசானுக்கு,

தத்துவ வகுப்பின் இரண்டாம் நாள் காலை நாங்கள் அனைவரும் சென்று அமர்ந்து விட்டிருந்தோம்..நீங்கள் அதே சீரான நடையுடன் வந்து எங்களை கடந்து யானைக் குடில் செல்லும் வழியில் இறங்கி நடக்க உங்கள் பின் இருவர் தொடர்ந்து சென்றனர்.சட்டென்று நானும் பின் தொடர்ந்து வந்தேன். யானைக் குடிலுக்கு முன்னே ஒரு சிறிய சரிவான ஒற்றை அடிப்பாதையில் இறங்கி ஓடையின் புறம் இருந்த சிறு பாறையின் மீது அமர்ந்து காலை வெயிலை முகத்தில் ஏந்தியவாறு நித்திய மௌனத்தில் அமர நாங்களும் அமர்ந்தோம்.

வற்றிப்போன சிறு ஓடையில் கீற்றின் ஓசையென சன்னமான நீரின் ஒலி, காற்று வந்து இலைகளினூடாக  சுழித்து செல்லும் இசை, எங்கோ அகவிய மயிலின் நாதம், தவிட்டு மைனாக்களின் கூச்சல், சிறு வண்டுகளின் ரீங்காரம் இவை மட்டுமே அங்கிருந்ததன.முற்றும் அங்கிலாதபடி எங்கள் மனமும் கரைந்து ஒரு முடிவில்லாத நித்திரையில் ஆழ்ந்தது. இள மஞ்சள் வெயில் முகம் கவிழ எந்த மொழி வார்த்தையும் எழாமல் நீங்கள் திரும்பி நடக்க நாங்களும் பின் தொடர்ந்தோம்.

முப்பது அடி தூரத்திலேயே நீங்கள் அதைக் கண்டுகொண்டீர்கள்.அது ஒரு எறும்பு கொட்டில். இலைகளை ஒரே சீராக அடுக்கி குறிப்பிட்ட மரப் பிசினை வைத்து ஒட்டி பல அறைகளாக பகுக்கப்பட்ட ஒரு அரண்மனை.அந்தரத்தில் தொங்கும்படியாகவும் கிளைகளால் தாங்கிய படியும் ஒரே நேரத்தில் பல கட்ட யோசனைகளை பரிசீலித்து கட்டப்பட்ட உயர் வகுப்பு பந்தல் அது என விளக்கினீர்கள்.அறைகள் சரியாக தெரியும் பொருட்டு அதற்குப் பின்புறம் சுற்றி வந்து ஒரு உங்கள் அலைபேசியில் குறும்படம் ஒன்றை எடுத்துக் கொண்டீர்கள்.

சற்று நேரத்தில் மிகச் சரியாக 9.30 மணிக்கு தொடங்கிய வகுப்பில் முற்றிலும் தொகுத்துக்கொண்ட மன நிலையோடு வகுப்பை எடுத்துச் சென்றீர்கள்.உங்களால் அந்த நேரத்திற்கான அந்த கணத்திற்கான குவிப்பையும் தியானத்தையும் ஒரே நொடியில் கொண்டுவந்துவிட முடிகிறது.அதே வேளையில் நினைவில் இருந்தே பல விசயங்களை பேசவும் மேற்கோள் காட்டவும் முடிகிறது.

ஆனால் இந்த வயதில் என்னால் ஆகக்கூடியதாக இல்லை. நீங்கள் ஏற்கனவே தத்துவ வகுப்பில் கலந்து கொண்டுள்ள எங்களின் கவனச்சிதறல், முதல் வகுப்பில் கொடுக்கப்பட்ட அட்டவணையைக் கூட ஒரு மூச்சில் சரியாக தொகுத்துச் சொல்ல இயலாத உழைப்பின்மை பற்றிய கோபத்தை வெளிப்படுத்தி இருந்தீர்கள்.

தீவிர இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றை கற்கும் நாங்கள் உங்களை அணுகி நோக்க உங்களிடம் இருந்து அந்த தீவிர நிலைய பெற்றுக்கொள்ள தொடர்ந்து நான்கு ஐந்து நாட்கள் பயணம் செய்வது உதவியாக இருக்கும்.

கடந்தமுறை இரண்டு இளம் பெண் வாசகர்களுக்கு பயணத்தின் போது அந்த வாய்ப்பு கிடைத்தது. வேறு ஏதாவது பயண திட்டம் இருந்தால் எங்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறோம்.

நன்றி

கார்த்திக்

பரமக்குடி

அன்புள்ள கார்த்திக்

உடன்தங்கல் என்பது ஒரு நல்ல எண்ணம் என நினைத்தேன். அவ்வகையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தேன். ஆனால் அது தொடர்ச்சியாக வெவ்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து மூன்று நாட்கள் இடைவிடாமல் என்னை பேச வைப்பதாகவே முடிந்ததுபலரை உடன் தங்கச் செய்யும்போது என்ன நிகழ்கிறது என்றால் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோன்றிய கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்விக்கும் தொடர்பு இருப்பதில்லை. அவற்றுக்கு நான் சொல்லும் பதில்கள் அவர்களுக்கு புரிவதுமில்லை.

ஏனெனில் ஒரு விரிந்த பின்னணி பரப்பிலிருந்து தான் ஒரு கருத்தை புரிந்து கொள்ள முடியும். நான் சொல்லும் பின்னணி அவர்களுக்கு புரியாதபோது அந்த கருத்து உதிரி வரிகள் ஆக நின்றுவிடுகிறது.அதை உடனடி மறந்தும் விடுவார்கள். எனக்கு ஒருங்கிணைக்கப்பட்ட வகுப்பில் உள்ள நம்பிக்கை வெறும் உரையாடலில் இல்லை. அது பொழுதுபோக்கு மட்டும்தான் என்று தான் நினைக்கிறேன்.

அதற்கு அப்பால் உரையாடலுக்கு ஒரு மதிப்பு உண்டு. அது ஒரு வகுப்புகள் நிகழ்ந்த பிறகு, ஒர் அணுக்கம் அமைந்த பிறகு, மிக அவசியமான தளங்களில் மட்டும் ஏற்கனவே பேசிக் கொண்டிருப்பவற்றின் தொடர்ச்சியாக பேசப்படும் உரையாடல். தத்துவம் சார்ந்த அந்த உரையாடல் இப்போது நிகழும் தருணம் அமையவில்லை.

ஆகவே உடன்தங்கல் என்பது இப்போதைக்கு அரட்டையாக மட்டுமே உள்ளது. அதில் எனது ஆற்றல்  வீணடிப்பதாகவே உள்ளது. உடன்தங்கல் என்பது எப்படி நிகழலாம் என்றால் ஒருவர் வெறுமே  உடன் தங்கலை மட்டுமே விரும்புகிறார் என்றால், என் இயல்பான வாழ்க்கையின் ஒரு பகுதியாக உடன் இருக்க விரும்புகிறார் என்றால் மட்டும்தான்.நான் பொதுவாக மிக அமைதியாக இருப்பவன். எனக்குரிய உலகில் வாழ்பவன்.

ஆனால் அது பலருக்கு வீணாக தென்படும். அவர்களுக்கு அத்தனை கேள்விகளையும் கேட்டால்தான் வந்து தங்கிய எல்லா பொழுதையும் பயனுள்ளதாக மாற்றியதாக தோன்றும். உடன் தங்கலுக்கு தேவையானது  வெறுமே உடன் இருக்கும் மனநிலை .அதுபோதே எவரிடமும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

 ஜெ

முந்தைய கட்டுரைவாழும் தமிழ், எச்சரிக்கை.