அன்பின் ஜெ,
நலமா? நான் நலம். உங்களது ‘எப்போதும் அருளும் தெய்வம்‘ என்ற காணொளியைக் கண்டேன். எவ்வளவு உண்மையான சொற்கள் என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கோவிட் கால வீடடங்கல் காலகட்டத்தில் சிங்கப்பூரில் உள்ள சில நண்பர்கள் இணையம் வழியாக உங்களது ‘காடு‘ நாவலை வாசித்துப் பேசலாமென முடிவு செய்தோம்.
உங்களிடமிருந்து தொடங்கிய எதுவும் ஆக்கப்பூர்வமாகவும் நேர்மறையாகவும்தானே பயணிக்க முடியும். இப்பயணத்தில் இதுவரை இருபத்தைந்து நாவல்களை வாசித்துப் பேசி உள்ளோம் என்பதே வியப்பாகவும் உவப்பாகவும் உள்ளது. இலக்கியத்தையும் வாசிப்பையும் நேசிக்கும் ஒத்த அலைவரிசை உடைய நண்பர்கள் கணேஷ் பாபு, பாரதி மூர்த்தியப்பன், சிவானந்தம் நீலகண்டன், இலங்கேஷ், வெங்கட், சத்யா, ரமா சுரேஷ், சரவணப் பெருமாள், தர்ஷணா சண்முகம் ஆகியோரைக் கொண்ட இந்தக் குழ நாற்பத்தைந்து நாட்களுக்கு ஒரு முறை கூடுகிறது. ஒருவர் பரிந்துரைக்கும் நாவலை அனைவரும் வாசித்துவிட்டு வந்து கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
ஆரம்பத்தில் பெயரற்ற குழுவாகத்தான் இருந்தோம். நண்பர் சுனில் கிருஷ்ணன் இங்கு வந்தபோது அவரது படைப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்விற்காக அனுமதி வாங்க வேண்டிய சூழலில் பெயர் வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானோம். நண்பர் கணேஷ் பாபு ‘சொல்லாழி‘ என்ற ஆண்டாளின் சொல்லைப் பரிந்துரைக்க அதுவே குழுவின் பெயரானது. தற்போது
சொல்லாழி குழு இருபத்தாறாவது நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறது. இருபத்தைந்து நாவல்கள் வழியாக இருபத்தைந்து வாழ்வை வாழ்ந்திருக்கிறோம். சிரிப்பும் கொண்டாட்டமாகவும் ஆனால் அதே சமயம் ஆழமாகவும் கலந்துரையாடி உள்ளோம்.
இதை ஏன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கேள்வி எனக்குள் ஒருபோதும் எழாதவாறு நண்பர்கள் இணைந்திருப்பது நல்லூழ். ஒரு செயலை தொடர்ச்சியாகச் செய்வதன் வழியாக கிடைக்கும் நிறைவும் பலனும் எதற்கும் ஈடாகாது என்பதை உணர்ந்துள்ளோம். நீங்கள் சொல்லியிருப்பது போல் இலக்கிய வாசிப்பு எனும் தெய்வம் எங்களுக்கு அருளிக்கொண்டிருக்கிறது. அத்தெய்வம் எங்களை ஒருபோதும் கைவிடாது. அது உடனிருப்பதால் நாங்கள் என்றென்றும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
அன்புடன்
அழகுநிலா
சிங்கப்பூர்