ஆசிரியருக்கு.
“Expansion is life ,Contraction is death.”Swami Vivekananda. வாழ்க்கையின் அளவு கோல் நமக்கு நாமே நிர்ணயிப்பது என்பது உண்மை.எல்லோருக்குமான வாழ்க்கையின் அளவுகோல் என்பது வகுக்கப்பட முடியாது. மனிதன் தன்னிலையில் வளரும் போது அவனே அவனுடைய அளவுகோலை மாற்றிக்கொள்கிறான்.பிறருடன் ஒப்பீடு செய்யும் போது தன்னுடைய வளர்ச்சியை அவனே தடை செய்து கொள்கிறான் என்பது உண்மை.
அகமனத்தில் வளரும் ஒருவன் புறச்சூழல் வளர்ச்சியை கொண்டு தன்னை அளவீடு செய்து கொள்ள விரும்பமாட்டான்.பல இடங்களுக்கு சென்று அந்த அனுபவத்தை தன்னுடைய அகமன வளர்ச்சிக்கு உரமாக்கி கொண்ட ஒரு மனிதன் புறச்சூழலுக்கு அடிபணிந்து தன்னுடைய வளர்ச்சியை புறந்தள்ள மாட்டான்.அஞ்சமாட்டான்.
வாழ்க்கை பரிணாமத்தில் சாதனை (Practice) மிக முக்கியம்.தனிமனித சாதனை அவனுடைய விடாமுயற்சியினால் சாத்தியப்படும். எல்லை கட்டி வாழும் போது சுற்றுச்சூழலின் அழுத்தத்திற்கு ஆளாவது இயற்கை.சமூகச்சூழலை தன் வளர்ச்சிக்கு குறை கூறுபவன் வளர்ச்சியடைவதில்லை.சுயமேம்பாடு என்பது சமூக மேம்பாடு.சமூக மேம்பாடு தனிமனித சுய மேம்பாட்டில் உண்டு.
“வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாலும் தெரிஞ்சிக்கலாம், நாலும் தெரிஞ்சி நடந்து கிட்டால் நல்லா இருக்கலாம்” என்பது கண்ணதாசன் வரி.அளவுகோல் நம்மிடமே உண்டு. வாழ்க்கையில் உயர வானமே கூட எல்லை இல்லை.வறுமையில், பஞ்சத்தில் அடிபட்ட தலைமுறை தற்போது இல்லை.
தற்போதைய தவைமுறைகளுக்கு வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அதிகம். இந்த தலைமுறைகளாவது குறுகியமனம் என்ற அளவுகோலை தவிர்த்து வாழ்க்கை பயணத்தில் உயர பறந்து வெற்றி பெறட்டும்.தங்கள் வாழ்க்கையின் அளவுகோல் சிந்தனை ஒரு மனித உளவியல் மேம்பாட்டுச் சிந்தனை .தட்டி எழுப்புங்கள், தூங்கும் இளைய தலைமுறையை, முழுமையறிவு என்ற அறிவுக்கோல் கொண்டு.
வாழ்த்துக்கள்.
தா.சிதம்பரம்.