அன்புள்ள ஜெ
மேலையிசை சார்ந்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் காணொளிகளைப் பார்க்கிறேன். நீங்கள் மிகுந்த முக்கியத்துவத்துடன் அவற்றை இளைய தலைமுறையினருக்கு வலியுறுத்துவதை உணரமுடிகிறது. ஆனால் மிகக்குறைவானவர்களே அவற்றைக் கவனிக்கிறார்கள் என்பதையும் காண்கிறேன், மற்ற வீடியோக்களுக்கு இருக்கும் பார்வையாளர்கள் இதற்கு இல்லை. நான் பேசியவரை பலர் இது தங்களுக்குத் தேவைஇல்லாதது, உள்ளே நுழைய முடியாதது என்றுதான் நினைக்கிறார்கள்.
அவர்களுடைய மனநிலையும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். நமக்கு மேலையிசை இதுவரை சுத்தமாகவே அன்னியமானதாகவே இருந்திருக்கிறது. பொதுவாக நம் அறிவுஜீவிகள் சிம்பனி கேட்டேன் என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்களே ஒழிய அவர்களுக்குச் சிம்பனியை கேட்பதற்கான பயிற்சியோ, பின்புலம் பற்றிய அறிவோ இல்லை என்பது வெளிப்படையானது. சிம்பனியை எல்லாம் அப்படி சும்மா அமர்ந்து கேட்டுவிடவும் முடியாது.
மேலையிசையை உண்மையில் மேலைத்தத்துவம், மேலைப்பண்பாடு ஆகியவற்றுடன் இணைத்துத்தான் புரிந்துகொள்ள முடியும் என நான் அறிந்திருக்கிறேன். ஆனால் நம் சூழலில் நமக்கு இதற்கெல்லாம் நம்பகமான வகுப்புகள் இல்லை. இசையை கற்பிக்கும் ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த பண்பாட்டு வாசிப்பும் இருப்பதில்லை. இசையை மேலைப்பண்பாட்டுடன் இணைத்துக் கற்பிப்பது என்பது மிகமிக அவசியமானது. அதை நீங்கள் செய்வதென்பது மிக முக்கியமான ஒரு செயல்பாடு.
மேலைநாடுகளில் வாழ்பவர்களுக்கு மேலையிசையில் ஓர் அறிமுகம் என்பது மிகப்பெரிய அடிப்படைத் தகுதி. அது அவர்களுக்கு எத்தனையோ வாசல்களைத் திறக்கும். பல நண்பர்களை உருவாக்கும். ஆனால் நம்மவர்கள் அமெரிக்கா வந்தாலும் இங்கே அமர்ந்து 90களின் இளையராஜா பாட்டைக்கேட்டு உருகிக்கொண்டிருப்பார்கள். நஸ்டால்ஜியாதான் சங்கீதம் என்று நினைத்து வைத்திருப்பார்கள். இந்தவகையான வகுப்புகளை தமிழில் அமெரிக்காவிலும் ஐரொப்பாவிலும்தான் நடத்தவேண்டும்.
ராஜ்