வணக்கம் ஜெ!
நான் கடந்த மூன்று வருடங்களாக depression treatment எடுத்துகொண்டிருக்கிறேன்.வாழ்வில் வெளிச்சமே இல்லாமல் இருந்த காலம் .அப்பொழுது தான் தங்களை YouTube மூலம் அறிந்துகொண்டேன்.உங்களது காணொளி ஒன்று விடாமல் பார்துகொண்டிருக்கிரேன் . unified wisdom வகுப்புகளில் கலந்து கொண்டேன்.தங்களின் புத்தகங்கள் படித்தேன்.ஆனால் எனக்கு concentration செய்ய இயலாததால் எதிலும் செயலாற்ற முடியவில்லை. அரதி மனநிலை தான்
சில நேரம் வரும் உள கிளர்ச்சிகள் காரணமாக impulsive ஆக முடிவு எடுப்பேன்.தங்களின் அனைத்து வகுப்புகளில் இணய வேண்டும் என்று முடிவெடுத்து aalayakalai,வாசிப்பு பயிற்சி,தத்துவம் ஆகிய வகுப்புகளில் அறிவிப்பு வந்தவுடனே பதிவு செய்தேன்.ஆனால் நான் இவ்வாறு செய்வது என்னுடைய அன்றாடதில் இருந்து விலகும் பாவனை என்பதை கண்டுகொண்டேன். வயிறை புறட்டிபோடும் பயமும் ,உடல் சோர்வும் ,படிப்பிலும் , வேலையிலும்,குடும்பத்திலும் தேக்க நிலையில் இருக்கும் எனக்கு இது இப்பொழுது அவசியம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.
தங்களிடம் கற்கும் வாய்ப்பை இழக்க கூடாது என்பதற்கு தான் அறிவிப்பு வந்த்வுடன் பதிவு செய்தேன். தினமும் அடிக்கடி website check செய்து(fomo) தங்களின் வகுப்புகளுக்கு பதிவுசெய்தேன்.உங்களுடைய மேடயுறை பயிற்சியில் கலந்துகொண்டு கற்கும் வாய்ப்பு பெற்றேன். ஆனால என்னால் சரியாக கோர்த்து பேசமுடியவில்லை,தொண்டை அடைத்து நின்றேன்.உங்களின் தன்மீட்சி புத்தகம் தான் நான் குழப்பத்தில் இருக்கும் பொழுது refer செய்வேன். அறம், பொருள், இன்பம் மூன்றயும் செரி செய்துவிட்டு உங்களிடம் மீண்டும் வருகிறேன்.மீண்டு வருகிறேன். அப்பொழுது இந்த பதிவு கட்டணத்தை பயன்படுத்த ஒப்புதல் கோருகிறேன்.
தங்கள் உண்மையுள்ள மாணவன்.
அ
அன்புள்ள அ,
உங்கள் இந்தக் கடிதமேகூட நீங்கள் உங்கள் வழக்கமான தேக்க உளநிலைக்குத் திரும்பியதன் சான்றுதான். நீங்கள் தவிர்க்கவேண்டியது , கடக்கவேண்டியது இந்தத் தயக்கத்தைத்தான்.
உளச்சோர்வுநிலையில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மக்களுடன் கலக்கவேண்டும். கூட்டுச்செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். செயல்களை செய்யவேண்டும். அதுதான் உளசோர்வை கடக்கும் வழி.
ஆனால் உளச்சோர்வு நிலை அதற்கு நேர் எதிரான தூண்டுதலையே அளிக்கும். பிறரை தவிர்க்கவும், தனிமையில் இருக்கவும் தூண்டும். செயல்களை தவிர்க்கச் செய்யும். செய்லால் எப்பயனும் இல்லை என்னும் எண்ணத்தை உருவாக்கும். இந்த நச்சுச்சுழலை வெல்வது மட்டுமே உளச்சோர்வைக் கடக்கும் வழி.
செயலாற்றுக என்பதே ஒரே மந்திரம். ஆனால் அது இயல்பாக நிகழாது. செயலாற்றுவது மிகக்கடினமாகவே இருக்கும். முழுமையற்றிருக்கும். தொடர்தோல்விகளே தொடக்கநிலையில் இருக்கும். அதை மீறியாகவேண்டும். எந்நிலையிலும் நான் செயலாற்றுவேன் என்னும் வெறியுடன் செயலாற்றியாகவேண்டும். அவர்களே உளச்சோர்வை கடக்கமுடியும்.
நீங்கள் வகுப்புகளுக்கு வருவது சரியல்ல என்ற முடிவுக்கு ஏன் வந்தீர்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் வகுப்புகளுக்கு பிடிவாதமாகத் தொடர்ந்து வருவது, கூடுமானவரை பிறருடன் கலந்து இருப்பது, முடிந்தவரை எல்லாவற்றிலும் ஈடுபட முயல்வது மட்டுமே உங்களுக்கான மருந்து. அது ஒரு வலுவான திரையை கிழித்துக்கொண்டு அப்பால் செல்வதுபோல முதலில் கடினமானதாகவே இருக்கும். ஆனால் அது தவிர வேறுவழியில்ல்லை.
யோசிக்கவும்.
ஜெ