ஏன் பின்னூட்டம் அனுமதிக்கப்படவில்லை?

 

ஒரு பெங்களூர் வாசகர் திரும்பத் திரும்ப என் காணொளிகளுக்குப் பின்னூட்டமிட ஏன் அனுமதிக்கவில்லை என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதுவே ஜனநாயகம் என்றார். அவர் ஒரு சோதிடர். அவருக்கென பல விந்தையான ஆன்மிகக்கருத்துக்கள் உள்ளன. பின்னூட்டம் இருந்தால்தான் அது ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

என் பிற காணொளிகளுக்கு வரும் பின்னூட்டங்களில் முக்கால்வாசி வெறும் வசைகள். அந்த முகநூல் கணக்குகளைப் பார்த்தால் பெரும்பாலும் முகமிலிகள். அவர்களின் வசைகளை நான் ஏன் என் வாசகர்கள் மேல் ஏற்றிவைக்கவேண்டும்? எந்த ஒரு தீவிர விவாதத்தையும் இவர்கள் உடனடியாக மலினமாக்கிவிடுவார்கள். திசைதிருப்புவார்கள். கொஞ்சம் புரிந்தவர்களுக்குக் கூட எதுவுமே புரியாமலாகிவிடும். இவர்கள் உளறுவதற்கு நான் மேடை அமைக்க முடியாது.

எல்லா காணொளிகளிலும் பின்னூட்டம் என்றாலே அசட்டுத்தனம்தான். ஆனால் அவை அனுமதிக்கப்படுவது பின்னூட்டம் அனுமதிக்கப்பட்டால் ‘ஹிட்’ கூடும் என்பதனால்தான். பின்னூட்டமாக ஒரு வசையோ அசட்டுக்கருத்தோ போட்டவர்கள் அதை அவர்களே பலருக்கு பகிர்ந்து பரப்புவார்கள். அது காணொளிக்கு ஹிட் கூட்டும். ஆனால் எனக்கு அப்படி வரும் பார்வையாளர்கள் தேவையில்லை. கொஞ்சமேனும் தீவிரமானவற்றை கவனிக்க உளம்கொண்டவர்கள் மட்டும் போதும்.

ஆகவே காணொளிகளுக்கு எதிர்வினை கடிதங்களாக மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய கட்டுரைஓர் இஸ்லாமியரின் கடிதம்
அடுத்த கட்டுரைஎ.வி. மணிகண்டனின் நிகழ்ச்சிகள் பற்றி ஜெயமோகன்