அன்புள்ள ஜெ
இலக்கியம் சார்ந்த காணொளிகளை கூடுதலாக எதிர்பார்க்கிறேன். இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றிய காணொளிகள் உதவியாக இருக்கும் என்று படுகிறது.
சந்திரசேகர்
அன்புள்ள சந்திரசேகர்
இலக்கியத்தை வாழ்க்கையின் ஊடாக இணைத்து கற்றுக் கொள்வது தான் சரியான கல்வியாக இருக்க முடியும். இலக்கியக் கோட்பாடுகளை விரிவாக கற்பது என்பது கல்வியாளர்களுக்கு பயன்படும். இலக்கிய ரசனை சார்ந்த கட்டுரைகள் மட்டுமே நல்ல வாசகனுக்கு எவ்வகையிலேனும் பயன்படக்கூடியவை. மற்றவர்களுக்கு இலக்கியப் படைப்புகளை வழிகாட்டியாக அமைய வேண்டும்.
ஒரு வாசகன் இலக்கியக் கோட்பாடுகளை கற்றுக் கொள்ளாமல் இலக்கிய படைப்புகளில் இருந்து இலக்கியத்தின் எல்லா பகுதிகளையும் சென்றடைய பயிற்சி அடைவான் என்றால் அதுவே மிக உகந்த வழியாக அமையும், அத்தகைய வாசகர்களே நான் பார்த்தது உண்டு. வாழ்க்கைக்கு அப்பால் இலக்கியத்தை அணுகும் வழி என எதுவும் இல்லை .
ஆகவே எப்போதும் இலக்கிய கோட்பாடுகளைப் பற்றி அவர் நம்பிக்கை எனக்கு உண்டு. நல்ல இலக்கிய கோட்பாடு என்பது ஏற்கனவே நமக்கு வாசிப்பின் ஊடாக கிடைத்த உள் வெளிச்சங்களை நாமே உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பலசமயம் உதவுகிறது. ஐ.ஏ.ரிச்சர்ஸட்ஸ், எலியட் முதல் ப்ளூம் வரையிலானவர்களுடைய கருத்துக்களை எனக்கு அவ்வாறுதான் உதவின என்று தோன்றுகிறது.
இலக்கியத்தை அறியாமல் கோட்பாடுகளை மட்டும் அறிந்தவர்கள் எந்த வகையிலும் நல்ல இலக்கிய படைப்புகளை உணர முடியாத மூர்க்கரளாகவும் மொண்ணைளாகவும் ஆகி இருப்பதை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில் அவர்களை பார்க்கும் போதெல்லாம் வரும் அச்சம் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து அவ்வாறு நானும் ஆகிருக்க கூடும் என்பதும், நல்ல வேளை தப்பித்தோம் என்பதும்தான். எவ்வளவு வீணான வாழ்க்கை என்ற எண்ணம் ஏற்படுகிறது.
ஓர் ஓவியக் கூடத்தில் விழிஇழந்த ஒருவர் வருடிப் பார்த்து கருத்துக்களை சொல்லிக்கொண்டு முழு வாழ்க்கையை செலவிடுவது போலத்தான் இவர்கள் இலக்கியத்துக்குள் வாழ்கிறார்கள். சுட்டசட்டி சட்டுவம் என்னும் உவ்மை வழியாக இவர்களை வரையறை செய்திருக்கிறார்கள். தமிழில் இலக்கியத்தை, வாசிப்பை, வாசிப்புக்குப் பின்புலமான அறிவியக்கத்தை அறிமுகம் செய்வதே முதன்மைப்பணியாக உள்ளது.
இலக்கியக் கோட்பாடுகளை விரித்துரைப்பது என்பது எந்த வகையிலும் அறிவு செயல்பாடு அல்ல. அறிவின் ஒரு சிறு பகுதி மட்டுமே அது . பெரும்பாலும் பயனற்றது.
ஜெ











