இனிய ஜெயம்
தமிழ் அறிவுச் சமூகம் பைசன் × டியூட் எது சமூகத்துக்கு தேவை எனும் காத்திரமான அடுத்த விவாதத்துக்குள் சென்றுவிட்டதால், இனி யாரும் இது குறித்து அக்கறைக்கொள்ளப் போவதில்லை எனவே அக்கப்போர் விட்டது என்பதால், அன்றைய கரூர் சம்பவம் குறித்து அதில் பேசப்பட்டவற்றில் மூன்று விஷயங்கள் குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
முதல் விஷயம் நிகழ்ந்தவைக்கு யார் பொறுப்பு எனும் நிலை. ஹே ராம் படத்தில் ஒரு காட்சி வரும். சாகேத்ராமன் மகாராஜாவுடன் பயணம் செய்யும் வழியில், அவர்கள் பாதை புகை வண்டி செல்லும் பொருட்டு மூடப்பட்டு இருக்கும். மகாராஜாவின் நண்பர் காரைவிட்டு இறங்கி, கதவை திறக்க சொல்ல முயலுவார் ( என்ன?… அற்ப ரயில் போவதற்காக மகாராஜா காத்திருப்தா?) ராஜா அதை தடுத்து “நம்மை சுற்றி எல்லா கதவும் மூடி கிடக்கிறது. இதை மட்டும் திறந்து என்ன ஆக போகிறது… விடு” என்பார்.
இதுதான் இப்போதும் கடலூர் நிலவரம். சில மாதம் முன்பு இங்கே பள்ளி வேன் மீது ரயில் மோதி ஒரு விபத்து நடந்தது. அதன் முதன்மை காரணம் இதுதான். கேட் கீப்பர் தமிழனை சுரண்ட வந்த வட இந்திய பிரஜை வேறு. தமிழர் என்றோர் இனம் உண்டு தனியே அவருக்கு ஓர் குணம் உண்டு என்பதை அறியாதவர் வேறு. வேலைக்கு வந்த நாள் துவங்கி, கதவு பூட்டியாச்சி ரயில் வர கொஞ்ச நேரம் ஆகும். காத்திருந்து போங்க என்று அவர் சொல்லும்போதெல்லாம், அப்படி எல்லாம் நிற்க முடியாது என்று தொடர்ந்து தகராறு நிகழ துவங்க, ஆசாமி ஊருக்குள் பிழைப்பு ஓட்ட, வேறு வழி இன்றி, ரயில் வரும் சில நிமிடங்கள் வரை கதவை திறந்து வைத்திருப்பார். எல்லாம் ஒரு கணக்குதான். அன்று கணக்கு பிசகிவிட்டது. ஊரே கூடி கேட் கீப்பரை பிடித்து தர்ம அடி போட்டு காவல் வசம் ஒப்படைத்தது. நடந்தவற்றுக்கு பொறுப்பு யார்? சிக்கியவர் கேட் கீப்பர். அவரது அலட்சியம் நிரூபிக்க தேவையே இல்லாத அளவுக்கு உறுதி வாய்ந்தது ஆகவே நீதி வென்றது. அவர் தண்டனை பெற்று காணாமல் போனார். மற்றபடி எதுவும் மாறவில்லை.
சில வருடம் முன்னர் ஒரிசாவில் ஒரு ரயில் விபத்து நிறைய பேர் செத்துப் போனார்கள். பொறுப்பு இருவர் மேல் சுமத்தப்பட்டது.அவர்களின் அலட்சியம் நிரூபிக்கப்பட்டது. முடிந்தது கதை. அடுத்த பெரிய ரயில் விபத்து நிகழும் வரை இனி எதற்கும் ஒரு பிரச்னையும் இல்லை.
இப்படித்தான் எல்லாமும். சமீபத்தில் பகுத்தறிவு திரவம் அருந்தி ஒரே இரவில் 60 பேர் செத்த போது ஏன் இத்தனை பெரிய கூச்சல் கிளம்பவில்லை? ஏனென்றால் அதன் காரண காரிய கண்ணிகள் என்னென்ன என்று எல்லோருக்கும் தெரியும். ஒரு விஷயத்துக்கு கூச்சல் போடலாமா அல்லது அமைதியாக மழையின் கீழ் எருமையாக கடந்து போகலாமா என்பதை கிடைக்கும் காரணம் எதுவோ அதுதான் முடிவு செய்யும்.
உண்மையில் இங்கே எவருக்கும் விபத்து நிகழும் பின்னணி காரணம் குறித்தோ, அநீதி குறித்தோ, அது மீண்டும் நிகழாது இருக்க வேண்டும் என்பது குறித்தோ எந்த அக்கறையும் இல்லை. கண்துடைப்பாகவேனும் காரணம் என்ற ஒன்றை கண்டுபிடித்து, அதன் மேல் பாரத்தை போட்டு விட்டு, நடந்தவற்றை அப்படியே கடந்து சென்று, எதையும் மாற்றிக்கொள்ளாது எப்போதும் போல இருந்துவிட வேண்டும் என்பதே உண்மையில் இங்கே இயக்கத்தில் உள்ள நிலை.
நிறைய பேர் செத்த ரயில் விபத்தில் கூட அலட்சியம் என்பதை காரணம் காட்டி இருவர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் 40 பேர் செத்த இந்த சம்பவத்தில் காவல் ஆட்சி நிர்வாகம் என்ற எதிலும் ஒரே ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்றால், அங்கே எப்பிழையும் இல்லை, அலட்சியம் கூட இல்லை என்றுதானே அர்த்தம்? அது எத்தனை உயரிய நிர்வாகமாக இருக்க வேண்டும்? அந்த நிர்வாகத்தை பாராட்டத்தானே வேண்டும்? இந்த கரூர் சம்பவத்தில் சமூகம் மேற்படியாக சொரனைகெட்ட முறையில் தொடர்ந்து நடந்துகொள்ள தேவையான “கண்துடைப்பு காரணம்” கூட எவராலும் எவருக்கும் தரப்பட வில்லை என்பதுதான் நிகழ்ந்த சந்தைக் கூச்சலுக்கு காரணமே தவிர நீதி பீதி போன்ற பிற காரணங்கள் ஏதும் இல்லை.
இரண்டாவதாக கூச்சலில் உரத்து ஒலித்த இவர்கள் தற்குறி எனும் குரல். யார் தற்குறி? படிக்காதவனா? படிப்பு வந்தால் தற்குறித்தனம் போய்விடுமா? எனில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்று இரண்டு பக்க அறிக்கைகளிலும் மாறி மாறி கைநாட்டு வைத்தவர்கள் யார்? கடந்த பல வருடமாக அரசாங்கம் அனுமதி தந்திருந்த மாத்திரை மருந்துகள். சில மாதம் முன்னர் அவை விஷம் என்று சொல்லி அரசு தடை செய்கிறது. எனில் இத்தனை வருடம் அதை தின்றவன் யார்? கொள்ளை நோய் ஒன்று வந்து உலகமே பொத்திக்கொண்டு வீட்டில் முடங்கி கொண்டது. அரசு ஒரு மருந்தை அறிவித்தது. எந்த மருந்தும் குறிப்பிட்ட நோய் மீது மூன்று முறை பரிசோதிக்கப்பட்டு, மூன்று முறையும் வெற்றி சதவீதம் ஒரே போன்று இருந்தால் மட்டுமே அது குறிப்பிட்ட நோய்க்கு உரிய பயன்பாட்டு மருந்து. இது அறிவியல். ஆனால் அரசு அறிவித்த மருந்து முதல் கட்ட பரிசோதனையில் இருக்கும்போதே பொது பயன்பாட்டுக்கு திறந்து விட பட்டது. எல்லா படித்தவர்களும் ஊசி போட்டுக்கொள்ள சொல்லி வலியுறுத்தினார்கள். எல்லோரும் ஓடி சென்று முதலில் எனக்கு குத்து என்று சொல்லி கியுவில் நின்று புட்டத்தை காட்டினோம். இன்று அதன் பின்விளைவுகள் என்னென்ன என்று எவருக்கும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் வழி கிடையாது. இந்த விஷயத்தில் யாரெல்லாம் தற்குறி? ஒரு கும்பலை மட்டும் தனிமைப்படுத்தி அதை விட எண்ணிக்கை கூடிய இந்த கும்பல் அந்த கும்பலை தற்குறி கும்பல் என்று சொல்லுவதன் வழியே, இன்றைய தமிழ் நிலத்தின் சமூகம் மொத்தமாக (ஒவ்வொருவரும்) அதன் உள்ளேயே கொண்டிருக்கும் தற்குறி தனம் என்பது இல்லாமல் ஆகிவிடுமா? அவர்களை தற்குறி என்று மதிப்பிடுவோர் அவர்களை விட “சற்றே மேம்பட்ட” தற்குறி என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.
மூன்றாவதாக இதில் உள்ள சமூக உளவியல். உலகம் முழுவதும் மானுட கலாச்சாரம் வண்ணமயமாக வேறுபாடுகளுடன் விரிந்து பரவிக் கிடந்தாலும், அவற்றை மானுட கலாச்சாரம் என்ற ஒரு குடையின் கீழ் சேர்க்கும் அம்சங்கள் என பண்பாட்டு மானுடவியல் வரையறை செய்த சில உண்டு. எந்த காலத்திலும் எந்த நிலத்திலும் மாறாத அம்சங்கள். அந்த அம்சங்களில் ஒன்று, ஒன்றை விசுவாசித்து, அல்லது ஒன்றை வணங்கி, அல்லது விரும்பி சேவகம் செய்ய ஒன்றை நோக்கி தன்னை ஒப்புக்கொடுக்கும் குறுங்குழு. அந்தக்குழு இந்த ஒட்டுமொத்த சமூகத்துக்குள் ஒரு பகுதியாக இருக்கும். (இந்த குழு கொண்ட அம்சங்கள் அந்த பொது சமூக கடலின் ஒரு அலை)
ஆம் இது எந்த காலத்திலும் மனிதனுக்குள் உள்ளே இருக்கும் மானுடத்தில் வெளிப்படும் மாறாத அம்சம். பழைய காலத்தில் அதற்க்கு வேறு வேறு காரணம். இன்று அது வெளிப்பட காரணம் சினிமா இதுதான் வேறுபாடு. இன்றைய காலம் நுகர்வு வெறியின் காலம். விளம்பரங்கள் வழியே மூளையை சொடுக்கி சொடுக்கி எவனுக்கு எது தேவை இல்லையோ அவன் தலையில் பெரும் தொகை பெற்றுக்கொண்டு அதை கட்டும் காலம். அப்படி இன்று தமிழ் நிலத்தில் ஒருவன் தலையில் கட்டப்படும் பல விஷயங்களில் ஒன்று சினிமா. அந்த சினிமாவில் பார்வையாளன் ஒருவனின் பகல் கனவை எந்த அளவுக்கு ஆழமாக ஒருவர் சுரண்டுகிறாரோ அவர் ஸ்டார் விளையாட்டில் வெற்றி அடைவார். அந்த விளையாட்டில் வெற்றி அடைந்த ஒரு நாயகன். அந்த நாயகன் நான் உங்களில் ஒருவன் என்று தனது படங்கள் வழியே நம்ப வைப்பார். அதே சமயம் ஒரு சராசரி மனிதனால் அவரை எட்டவே பார்க்கவே முடியாது எனும் நிலையை ஊடகங்கள் உருவாக்கும். இந்த இரட்டை நிலை அதுதான் கும்பலுக்கு பின்னால் இருக்கும் விசை.
சுற்றிலும் கூட்டம். வண்டிக்குள் நாயகன். வண்டிக்குள் விளக்கு அணைகிறது. கும்பல் கூவுகிறது. லைட் மீண்டும் ஒளிர நாயகன் உதிக்கிறார். கும்பல் இப்போது உச்சத்தில் களி வெறி கொண்டு கூவுகிறது. இதையே கொஞ்சம் சப்லைம் செய்தால் என்ன ஆகும்? கூட்டத்தில் பல மணி நேரம் கால் கடுக்க நிற்கிறோம். மனதில் பல்வேறு கவலைகள். பல்வேறு பிரார்த்தனைகள் உச்ச கணம் ஒன்றில் மங்கல ஒலி முழங்க திரை விலகுகிறது, பொன் ஒளி திகழ கருவறை தெய்வம் ஒரு மின்னல் போல நம் முன் எழுகிறது. நாம் என்ன ஆவோம்? அடுத்து பிள்ளை போனாலும் பரவாயில்லை விஜி வரனும் என்று சொன்ன அந்த அம்மா. விதி விலக்கு அந்த அம்மா. அதை விதியாக பாவித்து அடிவயிற்றுக்கும் கீழே அண்டர் கிரவுண்ட் இல் இருந்து கலங்குவது கும்பல் மனநிலை கொண்ட சிந்தனை. அதை கொஞ்சம் சப்லைம் செய்தால் என்ன ஆகும்? விதி விலக்கான ஒரு அம்மா, இன்முகத்துடன் தனது குழந்தையை கொன்று அறுத்து கறி சமைத்து ஒரு சுடுகாட்டு சாமியாருக்கு விருந்து வைக்கிறார். பக்தி பரவசத்துடன் இன்றும் நாம் அந்த கதையை கோயில்களில் கேட்கிறோம்.
எனவே உண்மையில் இங்கே இருப்பது எதுவோ அது இந்த இருண்ட காலத்தை சேர்ந்த கோலம் எல்லாம் இல்லை. இவை எல்லாம் எப்போதும் இங்கே இருப்பதுதான். இதை என்ன செய்வது என்று தெரியாமல்தான் முன்பு இதற்கு மேல் கடவுள் பக்தி என்ற போர்வை போட்டு மூடப்பட்டது. இப்போது அத்தகைய போர்வைகள் எதுவும் இல்லாததால், இன்றும் உள்ள இதை இன்றைய சூழலில் வைத்து சப்லைம் செய்ய என்ன உண்டு என்று எவருக்கும் தெரியாததால், தெரிந்த ஒன்றே ஒன்றான அய்யோ அம்மா என்ற கதறலை கதறி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறோம் அவ்வளவுதான்.











