ஓர் இஸ்லாமியரின் கடிதம்

 

அன்புள்ள ஜெயமோகன்,

உருது மொழி இலக்கியத்தை ஏன் கற்க வேண்டும் என்ற உங்களுடைய காணொளியை பார்த்தேன். ஒரு இஸ்லாமியனாக உங்கள் மேல் நீண்ட காலம் ஒரு காழ்ப்பு எனக்கு இருந்தது. இணையத்திலே உங்களைப் பற்றி எழுதும் வெவ்வேறு நபர்கள் உருவாக்கிய காழ்ப்பு அது. என்னிடம் பேசிய்வர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள்தான். ஆனால் அவர்கள் எவருமே உங்களைப் படித்தவர்கள் அல்ல என்பது இப்போதுதான் எனக்கு தெரிகிறது .அவர்க்ளிடம் இந்த காணொளி பற்றி பேசும்போது இவை அவர்களுக்கு திகைப்பை அளிப்பதை புரிந்து கொண்டேன் .எவ்வாறு ஜெயமோகனை பற்றி இவ்வாறு ஒரு கருத்தைச் சொன்னீர்கள் என்று கேட்டால் அவர்கள் சுட்டிக்காட்டிய் அனைவருமே இஸ்லாமியர் அல்லாதவர்கள்.

அப்படி பார்த்தால் இஸ்லாமியர் அல்லாதவர்கள் உள்நோக்கத்துடன் இஸ்லாமியரிடம் உங்களைப் பற்றி ஒரு எதிர்மறையான சித்திரத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இது ஒரு அபாயகரமான விஷயம் .இஸ்லாமியர்களை ஒருவகையான குண்டரபடையை போல இந்த கும்பல் பயன்படுத்திக் கொள்கிறது. தங்களுக்கு எவரை பிடிக்கவில்லையோ அவர்கள் மேல் இஸ்லாமியர்களுக்கு குரோதம் வரும் வழியாக ஒரு விஷயத்தை பரப்பி விட்டுவிடுகிறார்கள் .இஸ்லாமியர்கள் அந்த வெறுப்பை தாங்கள் சுமந்து கொண்டு அலைவதோடு மட்டுமல்லாமல் பழியையும் பெற்று க் கொள்கிறார்கள் .ஒருவர் இன்னொருவரை இஸ்லாமியருக்கு எதிரானவர் என்று சொன்னாலே சொல்பவரைத்தான் நாம் முதலில் கவனிக்க வேண்டும். அவர் இஸ்லாமிய எதிரி, அல்லது இஸ்லாமியர்களை வெறும் அடியாளாக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கிரிமினல் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

உங்களுடைய காணொளிகளிந் வழியாக தொடர்ந்து இஸ்லாமிய மெய்யியலை இலக்கியத்தை நீங்கள் அறிமுகம் செய்து கொள்வதை கண்டு எத்தனை நாள் இத்தனை காழ்ப்பைச் சுமந்து அலைந்தேன் என்ற மன வருத்தத்தை நான் அடைகிறேன். நேரில் உங்களை சந்திக்க வேண்டும்.

முனவர் கான்

முந்தைய கட்டுரைகீதையை அறிதல், வாசிப்புப் பயிற்சி