அன்பின் ஜெ,
நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பல வருடங்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதும் கடிதம் இது. நான் அக்டோபரில் ஆசிரியர் அமலன் ஸ்டான்லி அவர்கள் நடத்திய விபாஸனா தியானம் இரண்டாம் நிலை வகுப்பில் பங்கு கொண்டேன். அந்த அனுபவத்தைப் பகிரவே இக்கடிதம் . முதலில் நான் தியானம் நோக்கி வந்த பாதையை கூறினால், நான் சொல்ல வருவதை ஓரளவு கடத்த முடியும் என்று நம்புகிறேன். பக்தி இலக்கியம், கர்நாடக இசை, சடங்குகள் எளிதாய் புழங்கும் ஒரு குடும்பப் பின்னணியில் என் இளவயது இருந்தது. வீட்டில் உள்ள பெண்களுக்கு இதில் எல்லாம் மிகுந்த ஈடுபாடு இருந்தாலும் வீட்டு ஆண்கள் ஒரு வகை எள்ளலுடனும், நிர்பந்தத்துடனும் இறை விஷயங்களில் பங்கெடுப்பதை சிறு வயதில் கவனித்திருக்கிறேன்.
எனக்கும் இறை பக்தி என்பது சில வருடங்கள் முன்பு வரை, எதிர்வரும் துயரங்களில் இருந்து காக்கவும், கடந்த கால பிழைகளை மன்னிக்கும் இடமாகவே இருந்து வந்தது. பயம், குற்ற உணர்வு, சஞ்சலம் என இந்த மூன்றில் எது அதிகமானாலோ குறைந்தாலோ பக்தியின் அளவு உயர்ந்தோ தாழ்ந்தோ வந்தது. திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கழித்து எங்களுக்கு குழந்தை பாக்கியம் வாய்த்தது. ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. கருவில் இருக்கும்போதே வளர்ச்சி சரியாக இல்லாததால் பல குறைபாடுகளுடன் அந்தக் குழந்தை பிறக்கும் என்றும் பிறந்தாலும் நீண்ட நாள் இருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியதால் கருவை கலைக்க நேரிட்டது.
வாழ்வின் மிகக் கடினமான நாட்கள் அவை. அதில் இருந்து படிப்படியாக மீண்டு வந்தோம். மீண்டு வந்தாலும் எங்கள் அன்புக்குரிய நண்பர்களும் பெற்றோரும் மேலும் பரிகாரங்களையும் வேள்விகளையுமே பதிலாகத் தந்தார்கள். ஒரு கட்டத்தில் இது நடப்பதெல்லாம் என் பக்தியின் குறைபாட்டின் விளைவே என்று நம்பும்படி ஆனது. பல நல்ல மனிதர்கள் எப்போதும் எங்களுடன் இருந்தாலும் ஒரு தனிமையும் கூடவே குடிகொண்டது. யோசித்துப் பார்த்தால் என் நெருங்கிய நண்பர்கள் எல்லோரும் பள்ளியில் என்னுடன் படித்தவர்கள். ஆனால் வாழ்க்கை ஓட்டம் ஒன்று போல் இல்லை என்றால் ஒவ்வொருவராக பிரிந்து போவார்கள். ஒரே ஸ்டேஷனில் கிளம்பும் பல ரயில்கள் எல்லாம் ஒரே இடத்துக்குப் போவதில்லை தானே. ஒரே மாதிரி வாழ்வை நண்பர்கள் ஆரம்பித்தாலும் ப்ளஸ்டூ தேர்வில் பெயில் ஆன நண்பனின் ரயில் முதலில் நின்று போகும். நல்ல வேலை கிடைக்காமல் அடுத்தவனின் ரயில், திருமணம் தாமதமானால் அடுத்தவனின் ரயில் நிற்கும். அது போலவே குழந்தை. நண்பர்கள் துணை நின்றாலும் ஒரு கட்டம் மேல் முன்பு போல் பழக இயலவில்லை.
என்னுடன் இசையும் இலக்கியமும் எப்போதும் கூடவே வந்தாலும் எனக்கான ஆன்மீகத்தை மட்டும் நான் கண்டெடுக்கவே இல்லை. அது ஒரு குறையாகவே இருந்தது. பக்தியும், வேள்வியும், சடங்குகளும் கண்டிப்பாக அதற்கு பதில் இல்லை என்ற புரிதல் இருந்தது. சில நாட்கள் கீதை, வேதாந்தம் என்று தேடிப் படித்து வந்தேன். சுவாமி ததாத்மானந்தா (தயானந்த சரஸ்வதியிடம் தீக்ஷை வாங்கிய அமெரிக்க கணினி விஞ்ஞானி) அவர்களின் முழு உரைகளையும் கேட்டேன். வேதாந்த செய்யுள்களின் முழுப் பொருள் விளங்கவில்லை என்றாலும் சொல்ல வருபவை என்ன என்று ஓரளவு விளங்கியது. சரி அடுத்து என்ன என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. நிஜ வாழ்வில் அவற்றை செயல்படுத்த வழிமுறைகள் தெரியாமல் இருந்தேன்.
இந்தக் கட்டத்தில் ரமணர் மேல் ஒரு ஆர்வம் பிறந்தது. அவரே எழுதிய நான் யார் புத்தகத்தை வாசித்தேன். எனக்கு விளக்கங்கள் போதவில்லை. அதனால் அவர் ஆசிரமத்தில் தங்கியிருந்த அவர் சீடரும், ஆசிரமத்தில் மாத சஞ்சிகை நடத்தி வந்தவருமான ஆர்த்ர் ஆஸ்பார்ன் அவர்களின் புத்தகங்கள் படித்தது வெகுவாக உதவியது. ரமணர் கூறிய சில உவமைகள் சாத்தியம் தானா என்றும் யோசிக்க வைத்தது. தலை மேல் அடுக்கடுக்காக தயிர் சட்டிகளை வைத்துக்கொண்டு அசங்காமல் நடந்து வரும் தயிர்க்காரம்மா வீதியில் பெண்களை பார்த்து நலம் விசரித்து பேசிக்கொண்டே போனாலும் ஒரு கவனம் தயிர் சட்டிகள் மீது எப்போதும் இருக்கும். அது போல நாம் நம் தினசரி வாழ்வில் நம் கடமைகளை செய்து வந்தாலும் ப்ரம்மத்தின் மீது நம் முழு விழிப்பும் இருக்கும் நிலை சாத்தியம்தான் என்று படித்தேன்.
பிரச்சனை என்னவென்றால் ரமணர் எந்த விதமான பயிற்சியையோ குரு மரபையோ ஏற்படுத்தி வைத்துப் போகவில்லை. (நான் அறிந்தவரை). நான் என்ற எண்ணத்தின் ஊற்றை கவனித்து அதை அகற்றுங்கள் என்றுதான் அவர் சொல்லி இருக்கிறார். அவரிடம் கேட்ட பல கேள்விகளில் ஒன்று தியானம் செய்து அந்த நிலையை அடையலாமா என்ற கேள்விக்கு அவர் ‘ஆம். ஆனால் மூச்சு போன்று எதையாவது ஒரு நங்கூரத்தைப் பிடித்துக்கொண்டு தியானப் பயிற்சி செய்தால் அது இல்லாமல் முழுவிழிப்பு நிலைக்கு செல்ல முடியாது என்ற நிலைக்கு வந்துவிடாதீர்கள்’ என்று மட்டும் பதில் அளித்தார். அவரே கடுந்தவம் செய்து தான் அனுபவப் பூர்வமாக அறிந்தவைகளை பின்னாட்களில் வேதாந்த விளக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவை சரிதான் என்று உணர்கிறார் என்றும் படித்தேன்.
இவை எல்லாம் படித்துவிட்டு ஒரு நாள் திருவண்ணாமலை சென்றேன். ஆசிரமத்துக்குள் நுழைந்ததுமே நான் இதுவரை உணராத ஏதோ ஒன்று அங்கே இருப்பதை உணர்ந்தேன். நீண்ட நேரம் அங்கு அமைதியாக அமர்ந்துவிட்டு வந்தேன். எழும் போது கண்களில் கண்ணீர். ஏன் என்று தெரியவில்லை. உங்கள் தளத்தில் குரு நித்யா அவர்கள் ரமணரைப் பார்த்த நினைவுக் குறிப்பு கட்டுரையை வாசித்தேன். ரமணர் நம்மை நோக்கி இருக்கும் படத்தை பார்க்கும் போதெல்லாம் ஏறத்தாழ அவர் எழுதி இருக்கும் அதே உணர்வு. பரம்பொருளை வெளியே தேடி அலையும் ஒருவனின் தலையை தன்னை நோக்கித் திருப்புவதே ஒரு குருவின் வேலை என்ற ஒரு வரியும் அந்தப் புத்தகத்தில் படித்த ஞாபகம். இவ்வரி நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது.
தியானப் பயிற்சியை முறையாக ஒரு ஆசிரியரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேடலில் இருந்த போது தளத்தில் திரு அமலன் ஸ்டான்லி அவர்களின் விபாஸனா தியான வகுப்பைப் பற்றிய அறிவிப்பைப் பார்த்தேன். கடந்த ஜூன் மாதம் முதல் நிலை வகுப்புகள் நடந்தது. முதல் நிலை வகுப்புகளில் ஆசிரியர் படிப்படியாக அவர் குரலைத் தொடர்ந்து வரச்சொல்லி தியானத்தின் ஆரம்ப நிலையை அறிமுகம் செய்து வைத்தார். தியானத்துக்குப் போக பல பயிற்சிகளை கருவிகள் போல பயன்படுத்தச் சொல்லிக் குடுத்தார். அவர் சொல்லித் தந்த நடை தியானம் பல அலைக்கழிப்புகள் நிறைந்த மனதை, உடலை ஒரு சீரான நிலைக்கு எடுத்து வந்து தியானத்தில் அமரும் நிலைக்கு இட்டுச் செல்வது மிகவும் உதவியாக இருந்தது. மாலை நடைபெற்ற தம்ம வகுப்புகளில் அவர் கற்றுத் தேர்ந்த ஆசிரியர்களை அறிமுகம் செய்தார்.
முதல் நிலை என்பது உடற்கூராய்வு, நடை தியானம் ,ஆன பான சதி போன்ற கருவிகள் மூலம் தியானத்துக்குச் செல்வதாக இருந்தது. வகுப்பு முடிந்தாலும் அதன் முழு சாரம் வீட்டுக்கு வந்து பயிற்சி செய்யும் போதுதான் சிறிது சிறிதாக விரிந்து வந்தது. சில நாட்களில் இதுவரை கண்டிராத ஒரு அமைதி எனக்குள் குடியேறியிருப்பதை உணர்ந்தேன். அந்த அமைதி செயல்படும் தருணங்களையும் உணர முடிகிறது. ஒரு நாள் வீட்டில் ஏதோ வாக்குவாதம் வந்து, நான் புண்படும் ஒரு சொல்லை வீட்டார் சொல்லியதும் நான் அதற்கு மறுமொழிதான் கூறினேன் ஆனால் மதியிழந்து கத்தவில்லை. ஆச்சரியம் என்னவென்றால் இந்தத் தருணத்தை ஒரு மூன்றாவது மனிதனாக என்னை நானே பார்க்க முடிந்தது. மேலும் இந்த குடியேறிய அமைதி அலுவலக காரியங்களை முடிக்கையிலும் உணர முடிந்தது. வெகு நாள் கிடப்பில் போட்ட புத்தகத்தை ஒரே அமர்வில், செல்போன் பார்க்காமல் அமர்ந்து படித்து முடித்தேன். ஆக, செயல்களைச் செய்யும் தோறும் என் Emotional side வெளிப்படும் தருணங்களிலும் அதை உணர்ந்தேன். ஆசிரியர் தம்மம் வகுப்பில் ஜான (jhana) நிலைகள் பற்றி பேசினார். ஆனால் அதைப் பற்றி இப்போது படிக்க வேண்டாம் என்று சொன்னார். நான் ஆர்வ மிகுதியில் அதைப் பற்றியும் படித்தேன்.
ஆச்சரியம் என்னவென்றால் புத்த மதத்தில் விபாஸனாவில் ஈடுபடும் ஒருவனின் மனம் எவ்வாறு பல படிநிலைகளாக நிர்வாணா நோக்கிச் செல்கிறது, முதல் நிலைகளில் ஒருவன் உணர்வது என்ன என்று எல்லா நுணுக்கங்களும் பல நூற்றாண்டுகளாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவே மிரட்சியாக இருந்தது. ஆசிரியர் அமலன் அவர்கள் இதை படிக்கவேண்டாம் என்று சொல்லக் காராணம் நம் மனது ஒரு ஜான நிலையை குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்படும், இதனால் மனம் அமையவே அமையாது என்பதே. அது உண்மையும் கூட. அறிவியல் முழுவிழிப்பு நிலை தியானத்தைப் பற்றி இப்போது தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இப்பொது கிடைக்கும் மூளை, நரம்பு மண்டல ஆய்வு கருவிகள் கொண்டு. தியானம் prefrontal cortex, anterior cingulate cortex (ACC), and insula மூன்று மண்டலங்களும் ஒன்று இசைந்து வேலை செய்து உணர்ச்சிப் பெருக்கு மற்றும் பகுப்பாய்வு போன்ற விஷயங்களில் மனம் செயல்படும் விகிதங்களை மாற்றி அமைக்கிறது. ஆன்ட்ரூ ஹியூபர்மேனின் இந்த பாட்காஸ்ட் தியானம் சம்பந்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் பற்றி பேசும் முக்கியமான ஆவணம் (https://youtu.be/wTBSGgbIvsY?
இந்நிலையில் ஆசிரியரின் விபாஸனா இரண்டாம் நிலை வகுப்பு பற்றி அறிவிப்பு வந்தது. முதல் நிலை பயிற்சி பெற்ற ஒரு 16 பேர் கலந்துகொண்டோம். முதல் வகுப்புக்கும் இரண்டாம் வகுப்புக்கும் உள்ள வித்தியாசத்தை ஆசிரியர் முதல் நாளிலேயே சொல்லி மெது மெதுவாக நகர்த்திக் கொண்டு போனார். முதல் வகுப்பில் அவர் சைக்கிள் கற்றுக்கொள்ள துணை சக்கரங்களை பொறுத்தினார் என்றால் இரண்டாம் நிலையில் அதை கழட்டி வீசினார். 12ம் வாய்ப்பாடு கற்றுக்கொள்ளும் சிறுவனிடம் 7*12 என்ன என்று கேட்டால் அவன் மனதில் 1*12=12; 2*12=24 என்று ஆரம்பித்து ஏழு வரை வந்து பதில் அளிப்பான். பழகப் பழக உடனே 84க்கு வந்துவிடுவான். அதுபோல முதல் வகுப்பில் கற்றதை பயிற்சி செய்ததால் இரண்டாம் நிலையில் ஆசிரியர் சிறிய வேறுபாடுகள் மூலம் கருவிகள் துணை இல்லாமல் முமுவிழிப்பு நிலைக்கு அழைத்துச் செல்லும் போது உடன் செல்ல முடிந்தது.
இரண்டாம் நாள் மாலை அனைவரையும் தனித்தனியாக ஆசிரியர் ஸ்டேன்லி சந்தித்து, பயிற்சியில் சந்தேகம் உள்ளதா, என்ன பிழை செய்கிறோம், சரியான பாதையில் செல்கிறோமா என்று அறிவுரைகள் சொன்னார். ஒரு நாள் கேள்வி பதில் நேரத்தில் தியானத்தை ஒரு மன நிவாரணியாக அல்லது ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்ல செய்யலாமா என்ற கேள்விக்கு ஆம். இல்லை. என்று பதில் அளித்தார். அமெரிக்கா போன்ற நாடுகளில் Mindfulness Based Cognitive Therapy (MBCT) போன்ற பயன்பாடுகளுக்கு உபயோகப் படுத்துகிறார்கள். இது எல்லாமே விபாஸனாவின் துணை விளைவுகள். இந்தப் பாதையின் நோக்கம் அது அல்ல. அதை எதிர்பார்த்து இங்கே வந்தீர்கள் என்றால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்றார். தேரவாத புத்தம் வகுத்த பாதையில் மூன்று தசாப்தங்களாக தன்னை செலுத்தும் ஒரு ஆசிரியரின் மூலம் பாடம் கற்றது மிகுந்த நிறைவை அளித்தது.
கேள்வி பதில் நேரம் முடிந்து மீண்டும் ஒரு தியான வகுப்புக்கு ஆயத்தம் ஆனோம். மிக இலகுவாக முழு விழிப்பு நோக்கி அழைத்துச் சென்றார். ஓவ்வொருவரும் தங்களுக்குள் ஆழ்ந்து முழு விழிப்பில் அமைந்தோம். அப்போது ஒரு மழை. கூரை பிளக்கும் ஆர்ப்பரிப்புடன் கொட்டித் தீர்த்தது. குரு நித்யா கூடத்துக்கு உள்ளே சலனமற்ற அமைதி. மழை நின்றதும் தவளைகளின் ஒலி ஆரம்பம் ஆனது. அப்போதும் உள்ளே சலனமற்ற அமைதி. வெள்ளிமலை புத்தர் கைகளில் ஒரு மலர் உதிர்ந்து வந்து விழுந்திருக்கலாம். அப்போதும் உள்ளே சலனமற்ற அமைதி.
கே











