ஆன்மிகப் பயிற்சிகள் என்னென்ன?

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் தத்துவ வகுப்பு செய்திகளை தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறேன். நீங்கள் இந்த தத்துவ வகுப்புகளுடன் ஆன்மிகப்பயிற்சிகள் எதையாவது பரிந்துரைக்கிறீர்களா? அல்லது நீங்களே பயிற்சி அளிக்கிறீர்களா? ஆன்மிகப்பயிற்சி இல்லாத தத்துவக் கல்விக்கு என்ன பயன்?

ரா.ரங்கராஜன்

அன்புள்ள நண்பருக்கு

இந்த தத்துவ முகாம்கள் தத்துவத்தை மட்டுமே அறிமுகம் செய்பவை. தத்துவத்துடன் ஆன்மீகம் எப்போதும் இணைந்துள்ளது .ஆனால் அது பெரும்பாலும் மிக அந்தரங்கமானது. அதை ஒருவர் தனிப்பட்ட முறையில் மட்டுமே கற்றுக் கொள்ளவேண்டும்.  தனக்குரிய ஆன்மீகத்தை தனக்குரிய ஆசிரியரிடமிருந்து தனக்குரிய வாழ்க்கை முறைகளுக்கு இணைந்த வகையில் தன்னுடைய உளநிலைக்கு உகந்த வகையில் கற்றுக் கொள்வதே முறை.

அவ்வாறு கற்றுக் கொள்வதற்கான வெவ்வேறு வாய்ப்புகள் இன்று உள்ளன. முறையான தத்துவ பயிற்சி இல்லாத நிலையில் மிக எளிய கருத்துக்களை, சாதாரணமான ஆன்மிகச்செய்திகளை சொல்பவர்களையே தத்துவஞானிகள் என்றும் ஆன்மீக ஆசிரியர்கள் என்று எண்ணுவதும்; ஏமாறுவதும்; பின்னர் வருந்துவதும் நிகழ்கிறது. தத்துவக் கல்வி என்பது ஒருவர் தன்னுடைய ஆன்மிகம் என்ன என்பதை புரிந்து கொள்ளவும், தனக்கான சரியான ஆசிரியர் எவர் என்று மதிப்பிடவும் உதவுவது. அதை மட்டுமே நாங்கள் கற்பிக்கிறோம்.

தத்துவத்துடன் இணைந்து கற்க வேண்டிய யோக தியான முறைகளையும் அளிக்கிறோம். யோகத்துக்கு அவசியமான உடல்நலக் கல்வியை அளிக்கிறோம். அதிலிருந்து ஒருவர் ஞானம், பக்தி ,யோகம் ஆகிய மூன்று வழிகளில் த்னது ஆன்மிகம் என்ன என்பதை தானாகவே சென்றுதான் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான தேடல் அவருடைய வாழ்வில் இருந்துதான் கிளம்ப வேண்டும். அதை ஒரு நிறுவனமயமாக்கி அளிப்பதில் எங்களுக்கு ஈடுபாடு இல்லை.

எங்கள் அமைப்பு நித்ய சைதன்ய யதியின் வேதாந்த மரபைச் சார்ந்தது. ஆனால் இந்த தத்துவக் கல்விக்கு அது நிபந்தனை அல்ல. ஒவ்வொருவரும் அவருக்கு இசைந்த் ஆன்மீகத் தேடலை அடைய்வேண்டும் என்பது எங்கள் எண்ணம். ஆகவேதான் இஸ்லாமிய, கிறிஸ்தவ, பௌத்த மரபுகளையும் நாங்கள் கற்பிக்கிறோம்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைஇந்தியாவின் முகத்தை முன்வைப்பது…