
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
வாசிப்பு பயிற்சிக்கு வந்திருந்த போது, ஒவ்வொரு வகுப்பிலிருந்து செல்லும்போதும், ஒரு புத்தகத்துடனும், ஒரு தோழமையுடனுன் செல்வேன் என்றேன். அதற்கு சைது குட்டியின் கதையை கூறினீர்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு புது நட்புடன் வருவார் என்று. பதிவு செய்யும்போது இந்த கதை தான் ஞாபகம் வந்தது. என் நெருங்கிய தோழமைகள் , நண்பர்கள், தெரிந்தவர்கள், நான் சந்திக்க விரும்புவர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே இருந்தது.
வியாழன் இரவு இந்திய தத்துவத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சியின் காலகட்டங்களை எல்லோர் முன்னிலையிலும் கூறினேன். உங்களின் புத்தாண்டு செய்தியான ‘Spectator to Performer’ என்பதை ஒரு துளியேனும் நிறைவேற்ற முடிந்ததில் மகிழ்ச்சி. அடுத்த நாள் வகுப்பில் ‘நான் perfect ஆக கூறினேன்‘ என்று சொன்னவுடன், எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
ஆலமரத்தடி அமர்ந்து குறிப்பை விரித்து எழுதி , கலந்துரையாடி, சிரித்து, பாடி என்று ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ஒத்த மனம் உடையோருடன் சேர்ந்திருப்பது இத்தனை மகிழ்ச்சியாக இருக்குமா? உங்கள் பயணக்கட்டுரைகளில் வாசித்ததை அன்றுதான் அனுபவித்து தெரிந்து கொண்டேன். புகைப்படங்களில் பற்பசை விளம்பரம் போல் பல்லை காட்டிக் கொண்டிருக்கிறேன்.
அதிகாலை வகுப்பில் ‘மலர்தல்‘ பற்றி கூறினீர்கள். வட இந்திய வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தபோது, பூக்கள் மலர்ந்த ஒளியை கேட்டீர்கள். நானும் ஒரு முறை கேட்டிருக்கிறேன். மதுரை வீட்டில் ஒரு பெரிய மரமல்லி மரம் இருந்தது. மொட்டைமாடி வரை வரும், அதன் நிழலில் அமர்ந்திருப்பேன். ஒரு நாள் மாலை அதன் அடியில் இருந்தபோது , ‘ டிப் டிப்‘ என்ற மெல்லிய ஒலி கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன். மொட்டின் ஒட்டிய இதழ்கள் பிரியும் போது ‘ டிப்‘ என்ற ஒலி கேட்கிறது. அதற்குப் பின், சிறிது சிறிதாக இதழ்கள் விரிந்து மலராகிறது . மலரின் மணத்தில் மனம் மயங்கி இருந்தேன். அந்த வீட்டில் பல வருடம் இருந்திருந்தாலும், இந்த மறக்க முடியாத அனுபவம் ஒரு முறை தான் கிடைத்தது. அதன் அருகிலேயே உயர்ந்த தேக்கு மரமும் இருந்தது. கொத்துக்கொத்தான மஞ்சரியில், குட்டி குட்டி வெள்ளைப் பூ இருக்கும் . மாலை வேளைகளில் பட்டாம்பூச்சி கூட்டம் மொய்க்கும். மஞ்சரியின் காய்ந்த காம்பு மரத்தடியில் விழுந்திருக்கும் . அதை எடுத்து, வேறு சில பூக்களை அதில் சொருகி விளையாடியிருக்கிறேன். கிளின்ட் என்ற குழந்தை ஓவியரைப் பற்றி கேட்டது நெகிழ வைத்தது. ஏழு வருட வாழ்க்கையில் 35 ஆயிரம் ஓவியங்களை வரைந்திருக்கிறார் . அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் மலர்ந்திருக்கிறார் .
வேதத்தை எவ்வாறு அணுக வேண்டும், இந்திய வேதத்தின் இடம் என்ன, உலகத்தின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் வேதங்களுக்கும், இந்திய வேதங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை என்று முழு சித்திரம் கிடைத்தது. நீங்கள் வகுப்பில் கூறியது போல், இந்த கண்ணோட்டத்தில் வேதங்களை கற்றுக் கொடுக்க வேறு இடமில்லை.
வீட்டுக்கு வந்த பின் , என் மகன் தேவ் –ன் இரவுக் கதைக்கு, முதல் கற்காலம் தொடங்கி மனித குலத்தின் வரலாற்றை கதையாக கூறினேன். (தகவல்கள் அதிகமாக இருக்கிறது; கதை குறைவாக இருக்கிறது என்பது அவன் கருத்து) அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத அந்த காலகட்டத்தில் விழுந்த விதைகள், பனி ஊழி காலத்திற்குப் பின், வேதங்களாக முளைத்தெழுந்திருக்கிறது. யோசித்துப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
ஏன் வகுப்பு எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு, நீங்களே பல பதில்களை கூறி மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, எங்களுக்காக வகுப்பு எடுப்பதற்கு மிகவும் நன்றி ஜெ. தத்துவ வகுப்புகள் கிடைத்திருப்பது எங்கள் நல்லூழே. மிகவும் நன்றி ஜெ.
என்றும் அன்புடன்,
S.ராஜேஷ்வரி
கோவை.










