அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய காணொலியை கண்டேன். ரமேஷ் அவர்களுக்கு நீங்களும் உங்கள் நண்பர்களும் செய்த உதவி பற்றி நீங்கள் அஞ்சலி குறிப்ப்பில் கூறியிருந்ததை திரித்து அதை ‘உதவியைச் சொல்லிக் காட்டுவது’ என்று அர்த்தப்படுத்திக் கொண்டு உங்களை இங்கே வசைபாடினார்கள். அவர்களை நானும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். ரமேஷ் அந்த நிலையிலிருந்தும் கூட படைப்பின் உச்சத்தை அடைந்ததை நீங்கள் குறிப்பிட்டதை அவர் படுக்கையில் இருந்ததை சொல்லிக்காட்டி இழிவு படுத்துகிறார் என்று எனக்குத் தெரிந்த ஒரு பெரிய எழுத்தாளர் எழுதியதற்கு நான் கடுமையான கடிதம் கூட எழுதினேன்.
நீங்கள் சொல்லும்போது அது அவர்களின் தாழ்வுணர்ச்சி மற்றும் இயலாமையுணர்ச்சியின் வெளிப்பாடு என்று புரிகிறது. அவர்கள் அவருக்கு எதையுமே செய்யவில்லை என்பதை மறைப்பதற்காக மட்டும்தான் இந்த போலிப் பாவனையை மேற்கொண்டு அவருக்கு உதவியவர்களை வசைபாடுகிறார்கள். அவரை கைவிட்டவர்களும் சேர்ந்து கொண்டு உங்களை வசைபாடிய கொடுமையையும் காணமுடிந்தது.
ஒரு பெருந்தன்மை, ஒரு அறவெளிப்பாடு அற்பர்களை கூச வைப்பது என்பதை திரும்பத் திரும்ப வாழ்க்கையில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அதிலிருந்து மீண்டு முன் செல்வது என்பது நம் தீவிரதால் மட்டும் தான் முடியும் என்பதை உங்கள் கட்டுரை வழியாக கண்டபோது பெரிய நம்பிக்கை உருவாகியது. நன்றி
ஜெயப்பிரகாஷ் நாராயணன்










