இன்னொரு வகை விழா!

அன்புள்ள ஜெமோ

வாழும்தமிழ் நிகழ்ச்சியின் அறிவிப்புகள் ,செய்திகள் ஆகியவை அமெரிக்க இதழ்களில் வெளியாக ஆரம்பித்ததும் நானறிந்த வெவ்வேறு குடும்பங்களிலிருந்து என்னை அழைத்து விசாரித்தார்கள். நான் இப்போது அமெரிக்காவில் இல்லை என்று சொன்னாலும் உங்களைப் பற்றிய தகவல்களைக் கேட்க விரும்பினார்கள். அதுவரை எவரும் உங்கள் பெயரைக்கூட கேள்விப்பட்டிருக்கவில்லை. மிகச்சிலருக்கு பொன்னியின் செல்வனின் வசனகர்த்தா என்று மட்டும் தெரியும். அவர்களின் பிள்ளைகளை மேடையேற்றவேண்டும் என்பதே ஆர்வம்.தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பேசத்தெரியும் ,திருக்குறள் ஒப்பிக்கத்தெரியும், பாட்டு தெரியும், பரதநாட்டியம் தெரியும் என்றெல்லாம் சொன்னார்கள். இந்த பிள்ளைகளை எப்படி இடம்பெறச் செய்கிறார்கள், ஏதாவது போட்டி உண்டா என்றெல்லாம் கேட்டார்கள். 

இது எந்த வகையான விழா என்பதே அவர்களுக்குப் புரியவில்லை. இது இலக்கியவிழா, இலக்கியவாசிப்புள்ள குழந்தைகளைத்தான் தொகுப்பாளர்களாகப் போட்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். ஏதோ ஒருவகையில் இலக்கிய ஆர்வத்தால் அந்த அமைப்பினரிடம் தொடர்புகொண்டவர்கள் இக்குழந்தைகள் என்று விளக்கினேன். ஸ்டோரீஸ் ஆப் த ட்ரூ நூல் வெளிவந்தபோது அந்த நூலைப் பற்றிப் பேசியவ மாணவர்கள்தான் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள். அமெரிக்க பெற்றோர் நம்மூர் உயர்நடுத்தர குடும்பத்துப் பெற்றோர் போலத்தான். எப்படியாவது தங்கள் குழந்தைகளைஎல்லா இடங்களிலும்கொண்டுசென்று நிறுத்திவிட முண்டியடிப்பது அவர்களின் வழக்கம். இலக்கியம் என எதுவுமே தெரியாவிட்டாலும் இப்படி ஒரு நிகழ்ச்சி, இதற்கு வெளிச்சம் கிடைக்கும் என்றால் இங்கும் வந்துவிடவேண்டும் என நினைக்கிறார்கள். 

இந்த பெற்றோரின் குழந்தைகளில் பலருக்கு உண்மையிலேயே இலக்கியவாசிப்பு இருக்க வாய்ப்புண்டு. சிலர் அறிமுகம் செய்யப்பட்டால் உடனே இலக்கியத்துக்குள் நுழைந்துவிடுமளவுக்கு கூர்மை கொண்டவர்களாக இருக்கக்கூடும். அறிமுகமே இல்லாமல் இவர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அல்லது பெற்றோருடன் இக்குழ்ந்தைகள் எந்த தொடர்பும் இல்லாமலும் இருப்பார்கள். இந்த விழா வழியாக அமெரிக்காவின் இளைய தலைமுறையை நவீனத்தமிழிலக்கியம் சென்றடையவேண்டும் என்னும் கனவில் முதல் அடி வைக்கப்பட்டுவிட்டது. வாழ்த்துக்கள்.

சௌம்யநாராயணன் 

அன்புள்ள சௌம்யநாராயணன்,

வழக்கமானதமிழ் விழாபோன்ற ஒன்று அல்ல இது. இங்கே பங்கேற்பாளர்களையும் வடிகட்டுகிறோம். ஆகவே இலக்கிய ஆர்வலர் மட்டுமே கலந்துகொள்கிறார்கள். வெறும் வேடிக்கைகள் ஏதுமில்லை. அமெரிக்காவின் சூழலில் இந்தியா, கீழைநாடுகள் பற்றி அறிதல்கொண்டவர்களை மேடையேற்றுகிறோம். அதன்வழியாகவே இந்நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. இதில் கலந்துகொள்வதென்பது அந்த குழந்தைகள் அனைவருக்குமே முக்கியமான நிகழ்வு. அவர்களின் கல்விச்சூழலில் மதிப்புள்ளது. ஒரு சான்றிதழும் அளிப்போம். 

இத்தகைய அறிவுச்செயல்பாடுகள் வழியாகமே அமெரிக்காவின் அடுத்த தலைமுறையுடன் ஆக்கபூர்வமான தொடர்பை அவர்களின் பெற்றோர் உருவாக்கிக்கொள்ள முடியும். அவர்களுக்கு மெய்யான அறிவியக்கத்துடன் தொடர்பை உருவாக்கவேண்டும். தாங்கள் ரசிக்கும் தமிழ் சினிமா, பட்டிமன்றம், சாப்பாடு, நடனம் போன்றவற்றுக்குள் அவர்களை இழுக்க முயலக்கூடாது.

ஜெ

முந்தைய கட்டுரைபௌத்த தியானம்- பயிற்சி வகுப்புகள்