ஜெ,
உங்கள் காணொளியில் நீங்கள் வரலாற்றைப் புரிந்து கொள்வதைப் பற்றி பேசியதை பார்த்தேன்.நான் ஆட்சி பணித் தேர்வுக்கு தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவன்.வரலாறு என்பது நினைவில் நிறுத்தப்பட வேண்டிய தகவல்கள் மட்டும்தான் எனக்கு இதுவரைக்கும் சொல்லப்பட்டிருக்கிறது .வரலாற்று ஆய்வில் இருக்கும் நெறிகள், அதை முன் வைப்பதற்கான முறைமை ஆகியவற்றைப் பற்றி நீங்கள் பேசுவதை கேட்டபோது நான் படித்த பெரும்பாலான வரலாற்று நூல்களில் அந்த முறைமையோ நெறியோ இல்லை என்பதையும் உணர்ந்தேன் .
வரலாறு என்பது முன் முடிவுகள் இல்லாமல் பற்றுகள் இல்லாமல் சொல்லப்பட வேண்டிய ஒன்று. அதற்கு ஒரு புறவயத் தன்மை உண்டு என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ் பெருமை நிலை நாட்டுவதற்காகவோ இந்தியாவின் பெருமை நிலை நாட்டுவதற்காகவோ சொல்லப்படுவது வரலாறு அல்ல. அது ஒரு பெருமைபேசுதல மட்டும்தான். நாமே சொல்லிக்கொள்ளலாம். பிறர் ஏளனமாகவே எண்ணுவார்கள்.
வரலாறு என்பது அறிவியல் போலவே தனக்கான ஒரு இயங்கியல் கொண்டது என்பதை உங்கள் காணொளிகள் வழியாக தெரிந்து கொண்டேன். வரலாறு பற்றி இந்த எல்லா காணொளிகளுமே முக்கியமானவை .போட்டித் தேர்வுகளுக்கு பயில்பவர்கள் இந்த காணொளிகளை மிக எளிதாகவே புரிந்து கொள்ளலாம். அவர்களுக்கு அது திரும்பத் திரும்ப தகவல்களை மனப்பாடம் செய்யும் சலிப்பிலிருந்து மிகப் பெரிய விடுதலையாக இருக்கும்.
ராஜேஷ் ராஜ்












