கம்பன், கடிதம்.

அன்புள்ள ஆசானுக்கு,

இன்றைய கம்பராமாயண அமர்வில் வாசித்த ஒரு பாடல், (பாடல் 1069)

மிதிலை வீதிகளில் செல்லும் இராமனை பார்த்து மாடங்களில் உள்ள பெண்கள் கூறுவது

எண் கடந்து. அலகு இலாது. இன்று 

ஏகுறும் இவன் தேர்என்று

பெண்கள் தம்தம்மின் நொந்து

பேதுறுகின்ற காலை

மண் கடந்து. அமரர் வைக்கும் வான் கடந்தானை. தான் தன் 

கண் கடவாது காத்த காரிகை பெரியளே காண்!’

வேகமாக வீதிகளில் தங்கள் கண்களை கடந்து செல்லும் இராமன். இவர்கள் அனைவரும் அவனை காண்கிறார்கள். இதற்கு முந்தைய பாடல்களில் எல்லாம் அவர்கள் அனைவரும் மலரை மொய்க்கும் வண்டுகள் போல அவனை மொய்க்க வருகிறார்கள்

அவனோ எதையும் எவரையும் பார்க்காமல் வேகமாக கடந்து செல்கிறான்

எண் கடந்து. அலகு இலாது.

அந்த பெண்கள் வேறென்ன சொல்ல முடியும். இப்படி இருக்கும் ஒருவனை, ஒருத்தி தன் கண்களை கடந்து செல்லாது பார்த்து கொள்கிறாள், அவள் பெரியவள் தான். வேகமாக போகும் அவன் ஒன்றும் சாதாரணமானவன் அல்ல. மண் கடந்து, அமரர் வாழும் வான் கடந்த உலகளந்தான் அவன்

மண் கடந்து. அமரர் வைக்கும் வான் கடந்தானை. தான் தன் 

கண் கடவாது காத்த 

காரிகை பெரியளே காண்!

தன்னவன் தன்னை கடந்து போக யாருக்குதான் பிடிக்கும். இங்கே இருப்பதோ உலகையே அளந்தவன், ஆனால் அதுவா காரணம் அவள் தன் கண் கடந்து போகாமல் காக்க, அவள் காத்தாள் என்பதை விட அவன் அவளை கடந்து செல்லவே இல்லையோ என்றே தோன்றுகிறது

அவனால் அவளை கடந்து செல்ல முடியாது, என்பதை காத்தவள் என்று சொல்வதே பொருந்தும் என்பது போல இருந்தது

எங்கே வேண்டுமானும் செல்ல முடியும், செல்லவே வேண்டியும் உள்ளது. ஆனால் உன்னை கடந்து செல்ல மாட்டேன் என்று அவன் சொல்வது போல இருந்தது

இந்த இரவுக்கு இந்த பாடலும், இந்த வரிகளும் போதும்

நன்றி

ஈஸ்வரி

முந்தைய கட்டுரைஇக்கணம் என்னும் பேரின்பம்.