பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வெள்ளிமலையில் கடந்த வாரம் நடைபெற்ற தியானம், உளக்குவிப்பு வகுப்புகளில் கலந்து கொள்ளும் பேறு பெற்றேன்.
இருபதுகளின் தொடக்கத்தில் ஓஷோவின் நூல்களை பொது நூலகத்தில் எடுத்துப் படித்திருக்கிறேன். என் உள்ளத்தில் ஆன்மீக உணர்வுகளை தூண்டிய முதல் ஞானி அவர்தான். அப்போது முதலே உரிய குருவின் பாதத்தில் அமர்ந்து யோகம், தியானம் ஆகியவற்றைப் பயில வேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. உங்கள் தளத்தில் தியான வகுப்பு குறித்த அறிவிப்பு வெளியானதும் இரண்டு முறை முயற்சித்தும் வர இயலவில்லை. இம்முறை எப்படியும் பங்கேற்பது என்ற தீவிரத்துடன் முயன்று கலந்து கொண்டேன்.
வாட்சப் குழுமத்தில் பெங்களூர் நாராயணசாமி என்னும் நண்பர் அறிமுகமானார். அவருடன் ஈரோட்டில் வெள்ளி அன்று அதிகாலையில் கார் மூலம் பயணித்து நித்ய வனத்தை அடைந்தேன். நண்பர்கள் சிலர் ஏற்கனவே வந்திருந்தனர். அந்தியூர் மணி அண்ணன் அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அனைவரும் அவரை அண்ணன் என்று அன்போடு அழைத்தனர். நல்ல காலை உணவிற்குப் பின் வகுப்பிற்குச் சென்றோம். ஆசிரியர் தில்லை அவர்கள் வேத கால ரிஷிகள் போல கம்பீர தோற்றத்துடன் இருந்தார். கணீரென்ற குரலில் வகுப்பை ஆரம்பித்தார்.
அஸதோமா ஸத்கமய
தமஸோமா ஜோதிர் கமய
மிருத்யோமா அமிர்தம் கமய
பிருகதாரண்ய உபநிடதத்தில் வரும் இந்த சாந்தி மந்திரத்துடன் வகுப்பை தொடங்கினார். இந்த மந்திரம் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்த மந்திரம். வாழ்க்கை குறித்த பல நல்ல அறிவுரைகள் வழங்கினார். மாலையில் நடைபெற்ற தியான வகுப்பில் Stillness meditation மற்றும் பிரணாயாமங்கள் கற்றுத் தந்தார். இவை உடலை தளர்த்திக் கொள்ளவும் மேலும் உடலில் பல நல்ல விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நாத முத்ர பிரணாயாமங்கள், பஞ்ச முத்ர பிரணாயாமங்கள் என் உடலில் இருந்த தேவையற்ற பதட்டத்தை குறைத்து என் சுவாசத்தை மேம்படுத்தியதை பூரணமாக உணர்ந்தேன்.
ஆசிரியர் கற்றுத் தந்த யோக நித்ரா எனும் தியானம் மூலம் நமது தூக்கம் மேம்படும். எனக்கு பல வருடங்களாக தூக்கம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தன. பின்னிரவில் தூக்கம் கலைந்து விடும். பிறகு தூக்கம் வர மிகவும் சிரமப்படுவேன். யோக நித்ரா பயிற்சியி்ன் மூலம் அன்று இரவு நல்ல உறக்கம் அமைந்தது.
மறு நாள் காலை 6:45 மணி தியான வகுப்புக்கு அனைவரும் தயாராகி முன்பே வந்து விட்டோம். தூய்மையான காற்று, பறவைகளின் இனிய ஒலிகள், சூரிய கதிர்களின் மெல்லிய வெம்மை. இந்த சூழலில் தியானம் செய்வது உடல், மனம் இரண்டிற்கும் அளித்த புத்துணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
காலை உணவிற்குப் பின் நமது வாழ்வில் இக்கணம் குறித்து ஆசிரியர் விவரித்தார். இக்கணம் மட்டுமே உண்மையானது. அதில் 100% ஈடுபாட்டுடன் வாழ வலியுறுத்தினார். நாடி சோதனா முறையில் சுவாசத்தை சீர் செய்ய கற்றுத் தந்தார். பின்னர் வகுப்பின் முக்கிய நிகழ்வான சைதன்ய தியானம் கற்றுத் தரும் நிகழ்வை முறையான குரு பூஜையுடன் தொடங்கினார். சைதன்ய தியானம் மூன்று நிலைகள் கொண்டது. மூன்றாவது நிலை தியானம் முடிந்தவுடன் நாங்கள் உடலிலும் மனதிலும் இனிய அதிர்வையும் புத்துணர்ச்சியையும் உணர்ந்தோம். எவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. மதிய உணவு முடிந்து சிறு ஓய்வுக்குப் பின் மாலை வகுப்பில் மீண்டும் சந்திக்கும் வரை இனிய அமைதி நிலவியது.
மாலை வகுப்பில் ஓஷோ கூறியது போன்ற ஒரு dynamic தியானத்தில் ஈடுபட்டோம். இசைக்கேற்ற இனிய அசைவுகள் கொண்டது. உடலும் மனமும் ஒன்று சேர்ந்த இனிய இன்பம் இது.
மறுநாள் அதிகாலை Stillness meditation தொடங்கி சைதன்ய தியானம் வரை முழுமையான தியான வகுப்பு நடைபெற்றது. காலை உணவிற்குப் பின் நன்றி கூறுதல் பற்றியும் சிதறல் அற்ற கவனம் குறித்தும் விளக்கினார் ஆசிரியர்.
இந்த தியான வகுப்பின் சாரமாக நான் அறிந்த ஞானம் என்பது இக்கணத்தில் வாழ்வது தான். இக்கணம் என்பது ஒரு பொன்னுலகு. மெய்மை. ஷாங்கரி லா. பூவுலகின் சொர்க்கம். ஸென் கூறும் முழுமையான விழிப்புணர்வு. சாந்தி மந்திரம் கூறும் உண்மை, ஒளி, அமரத்துவம்.
அது உங்கள் எதிரிலேயே இருக்கிறது. அதை அறியாதவர் போல எப்படி கடந்து செல்கிறீர்களோ என வியக்கிறார் ஓஷோ.
உண்மையில் அது சாதாரண மானிடர்க்கு வாய்ப்பதே இல்லை. எனக்கு சைதன்ய தியானத்தில் மூன்றாம் நிலையில் சில கணங்கள் வாய்த்தது. மற்ற நேரங்களில் என் விழிப்புணர்வு எனும் குரங்கு மனதின் இருண்ட அறைகளில் எதையோ தேடிக்கொண்டு இருக்கிறது.
ஆசிரியர் தில்லை அப்பொன்னுலகில் உலவும் தேவன். நான் அவரை வகுப்பு நேரங்கள் தவிர மற்ற நேரங்களிலும் கவனித்து இருக்கிறேன். எதிலும் முழுமையாக இருக்கிறார்.
எனது குரங்கை என்ன செய்வது என அவரிடமே கேட்டேன். அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் சிரித்தவாறே நீங்கள்தான் அந்த குரங்கு என பதில் அளித்தார். அவரது புன்னகை வெண்முரசின் இளைய யாதவரின் புன்னகை. பார்த்தனாகி கற்பது ஒன்றே வழி.
வீட்டுக்கு வந்த நாள் முதல் இரண்டு வேளைகளிலும் தவறாது தியானப்பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். எனது பேச்சு, பார்வை தெளிவடைந்து உள்ளது. உறக்கம் மேம்பட்டுள்ளது. புத்துணர்வுடன் எனது காலைப் பொழுது விடிகிறது. பல ஆண்டுகள் நீடித்த செரிமானக் கோளாறுகள், சைனஸ், தூக்கப் பிரச்சனைகள் சரியாகி விடும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
இப்பயிற்சிக்கு வாய்ப்பளித்த தங்களுக்கும், பயிற்சி அளித்த மரியாதைக்குரிய ஆசிரியர் தில்லை அவர்களுக்கும் வாழ்நாள் முழுதும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
என்றும் அன்புடன்
தண்டபாணி












