அன்புள்ள ஜெயமோகன்,
குழந்தைகளுக்கு இயற்கையை அறிமுகம் செய்வது பற்றிய காணொலியைப் பார்த்தேன்.
ஆண்டுக்கு ஒரு முறையோ இருமுறையோ விடுமுறைக்கு காட்டுக்கு அல்லது தோட்டத்துக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதன் வழியாக எந்த குழந்தையையும் இயற்கையில் ஈடுபடச் செய்ய முடியாது என்பது தான் எனது அனுபவம். ஏனென்றால் அது குழந்தைகளுக்கு உண்மையில் புரிவதில்லை. இயற்கை அவர்களுக்கு சிலசமயம் சலிப்பூட்டலாம். ஆதிமனித இயல்பால் சில குழந்தைகள் இயற்கையில் ஈடுபடவும்கூடும்.
மாதம் ஒருமுறையாவது ஒரு குழந்தையை வெளி உலக அழைத்துச் செல்லவில்லை என்றால் அந்த குழந்தை இயற்கையுடன எப்படி இருப்பது என்பதே கற்றுக் கொள்வதில்லை.அங்கே சென்றும் செல்போன் கேட்டு அழுது அடம்பிடிக்கும்.
ஆண்டு முழுக்க 363 நாட்களும் ஒரு குழந்தை பள்ளிக்கூடத்திலும் செயற்க்கையான தொழில்நுட்பக் கேளிக்கையிலும் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறது. இரண்டு நாட்கள் மட்டும் அதை கொண்டு இயற்கையில் விட்டால் அதனால் இயற்கை புரிந்து கொள்ள முடியாது. இயற்கை அதற்கு ஒரு பதற்றத்தை அளிக்கலாம். சலிப்பூட்டவும் செய்யலாம். தனக்கு ஏற்கனவே பழக்கமான ஒன்றையே திரும்பத் திரும்ப செய்வதற்கு அந்த குழந்தை முயலக்கூடும்.
இன்றைய நவீனப் பள்ளிக்கூடங்களில் இயற்கையுடன் குழந்தையை ஒவ்வொரு நாளும் ஈடுபடுத்துகிறார்கள். அமெரிக்காவிலும் இந்தியாவிலுமுள்ள அந்த பள்ளிக்கூடங்கள் எல்லாமே மிகச் செலவேறியவை. உயர்குடியினருக்கானவை. அந்த பள்ளிக்கூடங்களில் சாமானியர் தங்கள் பிள்ளைகளை சேர்க்க முடியாது.
அந்த நிலையில் முழுமை அறிவு போன்ற அமைப்புகள் மாதம் ஒரு முறையாவது குழந்தைகள் வந்து தங்கி இயற்கையுடன இருந்து செல்வதற்கு உரிய நிகழ்ச்சிகளை அமைக்கலாம். அது அவர்களுக்கு கல்வியில் இருக்கும் சோர்வை போக்கி உற்சாகப்படுத்தும். குழந்தைகளை சினிமா, பார்க், மால் என்று கூட்டிச்செல்வதைவிட இது மிகச்சிறந்தது.
மூன்று நாள் நிகழ்ச்சியாக நீங்கள் அமைப்பதுதான் முக்கியமான சிக்கல். குழந்தைகளுக்கு விடுமுறை கிடைப்பதில் தடை இருக்கிறது. இரண்டு நாள் நிகழ்ச்சியாக சனி ஞாயிறு மட்டுமே வைத்தால் இன்னும் பலர் கலந்து கொள்ள முடியும்.
சாரதா









