அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொலியில் வரும் உரையாடல்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு நாளும் காரில் செல்லும்போது இந்த உரையாடலை கேட்பது என்னுடைய வழக்கம். ஓர் எழுத்தாளர என்னுடன் இருந்து பேசிக் கொண்டிருக்கும் உணர்வு உருவாகிறது. ஒவ்வொரு நாளும் செய்திகளில் இருந்து வந்து கொண்டிருக்கும் எரிச்சல் உட்டும் விஷயங்கள் இருந்து என்னை மீட்டு கொஞ்சம் சிந்திக்க வைக்கின்றன இவை. பெரும்பாலும் அன்றைய நாளின் அலுவல்களுக்கு நடுவே இந்த சிந்தனையே ஓடிக்கொண்டு இருக்கும்.
இந்த ஆழ்ந்த சிந்தனை வேலையில் இருந்து என்னை திசை திருப்புகிறதா என்று பார்த்தேன். பலர் அப்படி சொல்வார்கள். ஏன் வம்புகளை கேட்கிறீர்கள் என்று கேட்டால மேலோட்டமான வம்புகளே தங்களால் கவனம் அளிக்காமல் கேட்கமுடிகிறது, அவை வேலையில் இருந்து திசைதிருப்புவதில்லை என்பார்கள். ஆழமான சிந்தனைகள் மூளையை ஆக்ரமிக்கின்றன என்பார்கள். ஆனால் எரிச்சல் ஊட்டும் சோர்வு ஊட்டும் செய்திகளுக்கு பதிலாக இத்தகைய ஊக்கமூட்டும் சிந்தனைகள் உண்மையில் செயலாற்றலை கூட்டுகின்றன என்று தான் என் அனுபவம்.
நீங்கள் சொல்வது போல பல வகையான கேலி கிண்டல்களுடன் எதிர்மறையான காணொலிகள் பலரால் விரும்பப்படுகின்றன. எனில் அவர்களுக்கு இருக்கும் இயல்பான சோர்வு நிலை காரணமாக அவர்கள் மேலும் சொர்வூட்டும் விஷயங்களைத்தான் தேடுகிறார்கள். சோர்வு நிலைக்கு மருந்து ஊக்கமூட்டும் செய்திகள் தான். ஆனால் பெரும்பாலானவர்கள் அதை நாடுவதில்லை. இன்றைய வேலைச் சூழல் ஆழமான சோர்வை உருவாக்குகிறது. அந்த சோர்விலிருந்து நம்மை வெளியே கொண்டு வருவது நல்ல சிந்தனைக்ளே. செயல் மேல் நம்பிக்கை வைப்பதும், இயற்கையியின் அழகைப் பற்றிய புரிதலை உருவாக்குவதும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு நினைப்பை நமக்குள் ஏற்றிக் கொண்டிருப்பதுமான பாசிட்டிவ்வான சிந்தனைகள்தான் நமக்கு சோர்வை அகற்றும் மருந்து.
அத்தகைய சிந்தனைகளை உங்கள் காணொலிகள் வழியாக நான் அடைந்து கொண்டிருக்கிறேன். அந்த காணொலிகள் என்னை போன்றவர்களுக்காக தான் நடத்தப்படுகின்றன.
சந்தானகிருஷ்ணன் மாதவ்










