பிறரைக் கவனித்தல்

அன்புள்ள ஜெ,

இளையதலைமுறை எழுத்தாளர்கள் ஏன் நேர்ச்சந்திப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்று சொல்லியிருந்தீர்கள். அவர்கள் தங்களைப் பற்றி பேசவோ, தாங்கள் பேசவோ மட்டுமே விரும்புகிறார்கள். பிறர் பேசுவதைக் கேட்கும் மனநிலை கொண்ட இளம்படைப்பாளிகள் மிகமிகக் குறைவு. அத்துடன் அவர்கள்  முகநூலில் உரையாடிக்கொண்டே இருக்கிறார்கள். அதிலும் தங்களை முன்வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதிலேயே நிறைவடைந்துவிடுகிறார்கள். ஆகவே நேர்ச்சந்திப்புகளை விரும்புவதில்லை. இந்த மனநிலைக்கு விதிவிலக்கான சிலர் மட்டுமே உள்ளனர். நான் இதை பலமுறை கேட்டிருக்கிறேன். தாங்கள் பேசாத, தங்களைப் பற்றிப் பேசாத ஓர் அரங்கில் அவர்களால் அமர்ந்திருக்கவே முடியாது. விஷ்ணுபுரம் இலக்கியவிழாவிலேயே அவர்கள் பேசியபின் உடனே வெளியே சென்றுவிடுவதைக் கவனித்து கொண்டிருக்கிறேன். இந்த மனநிலையை நாம் யோசிக்கவேண்டும் அல்லவா?

சம்பத்குமார்

அன்புள்ள சம்பத்,

அந்த மனநிலையும் பெரும்பாலான இளம் படைப்பாளிகளிடம் இருப்பதுதான். அவர்கள் தங்களை முன்வைக்கும் தீவிரமும், எதையும் தன்னை மையமாக்கி யோசிக்கும் இயல்பும் கொண்டிருப்பார்கள். தன்னைப்பற்றிய கருத்துக்களுக்காகவே பிறரை கவனிப்பார்கள். ஆனால் அந்த மனநிலை மிக விரைவிலேயே அவர்களைத் தேங்கச் செய்துவிடும். எனக்கும் அந்த மனநிலை இருந்தது. அதை உடைத்து வெளிவர மூர்க்கமாக முயன்றுதான் வெற்றிபெற்றேன்.

பிறரைக் கவனிக்காமலிருப்பது, பிறர் பேசுமிடங்களை தவிர்ப்பது, தன்னை மையமாக்கிய இடங்களை மட்டுமே விரும்புவது ஆகியவை தன்னைப்பற்றிய பதற்றமும் கொஞ்சம் பாதுகாப்பின்மையும் கொண்ட இளம் படைப்பாளியின் இயல்புகள். அவை அவர்கள் எழுதி தங்களை நிலைநிறுத்திக்கொண்டபின், தாங்கள் சாதித்துவிட்டதாக எண்ணும்போது, அகலும்.

கடைசிவரை அப்படி  விலக்கம் அகலாதவர்கள் உண்டு. அவர்கள் எதையும் சாதிக்காதவர்கள், தங்களால் சாதிக்கமுடியாது என்று உணர்ந்தவர்கள். அவர்களை அலைக்கழிக்கும் தாழ்வுணர்ச்சி, குறையுணர்ச்சி அவர்களை எந்த பொதுநிகழ்வுகளிலும் கலந்துகொள்ள முடியாதபடி வெளியே தள்ளும். எங்கும் ‘இடமற்றவர்களாக’ தங்களை உணர்வார்கள். அந்தச் சூழலே தன்னை இளக்காரம் செய்து புறக்கணிக்கிறது என எண்ணிக்கொள்வார்கள். அது ஒரு நரகம், ஒன்றுமே செய்யமுடியாது.

ஜெ

 

முந்தைய கட்டுரைசிந்திப்பவர்களுக்காக மட்டும்
அடுத்த கட்டுரைசெல்பேசி அடிமைத்தனம்