பெருதிட்டங்கள் உதவுமா?

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுடைய நியூயார்க் இலக்கிய விழா பற்றிய செய்திகளை கேள்விப்பட்டு அவற்றை வாசித்து பார்த்தேன். மிகப்பெரிய கனவுகளுடன் தொடங்கி ,சரியான திட்டமிடல்களுடன் அதை நடத்தி முடித்திருக்கிறீர்கள். அதன் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறீர்கள். இந்தச் செயலுக்கம் எனக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக அமைகிறது. ஆனால் இந்த மிகப்பெரிய விழாக்கள் வழியாக  என்ன நிகழும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. சிந்தனை என்பது இத்தகைய பெரிய நிகழ்வுகள் அமைப்புகளை சார்ந்து செயல்படுமா என்பது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது.

சாம்

அன்புள்ள சாம்,

நாங்கள் நடத்துவது பெரிய நிகழ்வு அல்ல. தமிழில் இதைப்போல எதுவுமே நிகழவில்லை என்பதால் இது பெரிய நிகழ்வாக தோன்றுகிறது.  ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் செலவில் நடக்க்கும் பெங்களூர் இலக்கிய விழா, மாத்ருபூமி இலக்கியவிழா, புக்பிரம்மா இலக்கியவிழா போன்றவைதான் பெரிய நிகழ்வுகள். அவ்வாறு இந்தியா முழுக்க ஏறத்தாழ 60 இலக்கிய விழாக்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

நியூயார்க் நிகழ்வின் செலவு என்பது நியூயார்க் பணமதிப்பிலேயே இந்திய ரூபாயில் இரண்டு கோடிக்கு கீழேதான் வரும். அமெரிக்க பணத்தில் அது மிகச்சிறிய தொகை. அதன் ஒரு சிறு பகுதியே இந்தியாவில் இருந்து செலவிடப்பட்டது. இங்கிருந்து சென்றவர்களுக்கான விசா மற்றும் டிக்கெட் செலவு மட்டுமே. எஞ்சிய அனைத்து பணமும் அமெரிக்காவிலேயே சேகரிக்கப்பட்டது.  பங்கெடுத்தவர்களின் கட்டணத்திலிருந்து பெரும்பகுதி பணம் திரட்டப்பட்டது.

ஆனால் நான் பெரிய நிகழ்வுகளுக்கு எதிரானவன் அல்ல. பல பெரிய நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டிருப்பவன். பெரிய நிகழ்வுகள் பெரிய அளவில் சென்று செல்கின்றன என்பதை மறுக்கவே முடியாது. கேரளத்தை  மூன்று இலக்கிய விழாக்கள் இலக்கிய ஆர்வத்தின் உச்சத்திலேயே வைத்திருக்கின்றன. தமிழகத்திலும் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் இலக்கிய விழா என்பது உண்மையில் புத்தகத் திருவிழாக்கள்தான். அவை தான் ஆண்டு முழுக்க புத்தகம் சார்ந்த ஒரு விழிப்புணர்வையும் வாசிப்புக்கு வாசகர்களை கொண்டு வரும் பணியையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றந. நாம் அவற்றின்பங்களிப்பை எந்த வகையில் குறைத்து மதிப்பிட முடியாது.

நான் பெரிய விழாக்களை ஏன் ஒருங்கிணைப்பதில்லை என்றார் அவற்றின் நிர்வாகச் சுமையை தாங்குவது என்னால் இயலாது எனப்தனால்தான்.அத்தகைய பெரிய அமைப்பு எங்களிடம் இல்லை. நாங்கள் சிற்றிதழ் ர்ந்த ஒரு மனநிலையை தக்க வைத்துக்கொள்ள விரும்புவதனால் சிறிய அளவிலேயே திட்டமிட்டு சிறிய அளவிலேயே  நிகழ்த்துகிறோம்.

நியூயார்க் விழாவிலேயே இலக்கிய வாசகர்கள் என்று எங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த 300 பேரை மட்டுமே அனுமதித்தோம்.எங்களுடைய செயல்பாடுகள் எல்லாமே இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்களை மட்டுமே கொண்டு நிகழ்த்தப்படுகின்றன. நாங்கள் தீவிர இலக்கியத்தை அதன் தீவிரம் குறையாமல் மட்டுமே நடத்துகிறோம்

இவற்றின் பயன் என்ன? அது வரலாற்றைச் சார்ந்தது. பல்லாயிரம் பேரை பலி கொடுத்து, பல போர்களை நிகழ்த்தி நடந்த பெரும் இயக்கங்கள் கூட எந்த பலனும் உருவாக்காமல் வெறும் கனவாகிப்போனதை எல்லாம் நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் .ஆகவே நம்பிக்கையுடன், இழப்புகளை தவிர்த்து, ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்து கொண்டிருப்பது மட்டும்தான் நான் செய்யக் கூடியது. விளைவை வரலாறு மற்றும் பண்பாட்டின் தன்னிச்சையான பெருக்கு  நிகழ்த்திக் கொள்ளட்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅன்றாட அரசியலும் நாமும்
அடுத்த கட்டுரைஇசை அறிமுகம் எப்படி நிகழ்கிறது?