
தியானம், உளக்குவிப்பு, செயல்முனைப்பு- பயிற்சிகள்
தில்லை செந்தில் பிரபு நடத்திவரும் தியானம்- உளக்குவிப்பு- செயல்முனைப்புப் பயிற்சிகள் அவற்றின் எளிமை காரணமாகவும், நடைமுறைப் பயன் காரணமாகவும் புகழ்பெற்றவை. தொடர்ச்சியாக இப்பயிற்சியில் பலர் கலந்துகொண்டே இருக்கிறார்கள். இப்பயிற்சிகள் அடிப்படை தியானம், அடிப்படை யோகம், அடிப்படை மூச்சுப்பயிற்சிகள் ஆகியவை இணைந்தவை. இவற்றுடன் மனம் சார்ந்த அன்றாட நிகழ்வுகளை தொகுத்துக்கொள்ளும் பயிற்சியும்கூட.
இந்த வகையான பயிற்சிகள் இன்றைய நடைமுறைவாழ்க்கையில் மிக அவசியமானவை. அவற்றின் பயனை நாம் உண்மையில் இன்னும் உணரத்தொடங்கவில்லை. ஏனென்றால் நாம் எந்தச் சிக்கலில் இருக்கிறோம் என்பதையே நாம் உணர்ந்திருப்பதில்லை.
- நாம் எந்தச் செயலையும் முழுமையாகச் செய்யாமல் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றால்,
- ஒரு செயலில் கவனம் குவியாமல் அதற்குள்ளேயே சிறு சிறு கவனச்சிதறல்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றால்,
- நமக்கு மிக முக்கியமானவையும் நாம் மிக விரும்புபவையுமான செயல்களைக்கூட நாம் தொடங்காமல் ஒத்திப்போட்டுக்கொண்டே இருக்கிறோம் என்றால்,
- காலை எழுந்ததுமே நமக்கு உகந்த, நமக்கு அவசியமான செயல்களத்திற்குள் நுழையாமல் இருக்கிறோம் என்றால்,
- இரவுகளில் நம் மனம் இயல்பாக அடங்கி தானாகவே சரியான நேரத்துக்கு தூக்கத்திற்குள் செல்லவில்லை என்றால்,
நாம் உண்மையில் சிக்கலில் இருக்கிறோம். நம் உள்ளம் குவியவில்லை. நம் அக ஓட்டமும் புறச்செயலும் ஒத்திசையவில்லை. நம் அகம் ஓடை போல தொடர்ச்சியாக முன்னால் ஓடவில்லை, அது சிதறிச் சிதறிப் பரவிக்கொண்டிருக்கிறது.
அது ஒரு வகையான நோய்நிலை. எந்த நோய்க்கும் அதற்கான மருத்துவம் தேவை. இந்த வகையான அகப்பயிற்சிகள் அதற்கான மருத்துவங்கள்தான். இவை உடலை இலகுவாக ஆக்க, செயல்திறமைகொள்ளச் செய்ய உதவுகின்றன. மனதைக் குவிக்கவும் செயலுடன் இணைக்கவும் கற்பிக்கின்றன. முறையான ஆசிரியர் இவற்றைக் கற்பிக்கவேண்டியிருக்கிறது.
தில்லை செந்தில்பிரபு இந்த பயிற்சியில் முப்பதாண்டுக்கால அனுபவம் கொண்டவர். பல்லாயிரம்பேரை பயிற்றுவித்தவர். அவர்களால் ஆசிரியராக வணங்கப்படுபவர். ஓர் யோக- தியான ஆசிரியர் அதற்கு மட்டும் ஆசிரியர் அல்ல, முழு வாழ்க்கைக்கும் ஆசிரியர் அவர்.
புகழ்பெற்ற இப்பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன.
நாள் – 26, 27, 28.
தொடர்புக்கு [email protected]
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் – இடமிருப்பவை
இந்திய தத்துவம் நான்காம் நிலை
இந்திய தத்துவப் பயிற்சிகளின் நான்காம் நிலையில் இன்னும் சிலர் மட்டுமே எஞ்சியிருப்பதாகச் சொன்னார்கள். அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் 19, 20 மற்றும் 21 அன்று நிகழும்.
நாள் ஜூன் 19 20 மற்றும் 21
தொடர்புக்கு [email protected]
அறிவிக்கப்பட்ட பயிற்சிகள். இடமிருப்பவை
விபாசனா பயிற்சி- ஐந்து நாட்கள்.
வி.அமலன் ஸ்டேன்லி அவர்களால் மூன்று முறை பௌத்த தியானம்- விபாசனை அறிமுகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த முதல் அமர்வில் கலந்துகொண்டவர்கள் மட்டும் அடுத்த நிலைக்கான விபாசனைப் பயிற்சியில் கலந்துகொள்ளலாம். இது ஐந்து நாட்கள் நீடிக்கும் பயிற்சி. ஜூன் 12 , 13, 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் இது நிகழும்.
விபாசனா பயிற்சி என்ற வகையிலான பயிற்சிகள் இன்று பரவலாக நடத்தப்படுகின்றன. பலர் அவற்றில் பங்கேற்றதையும் குறிப்பிடுகிறார்கள். விபாசனா பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய சில உண்டு.
- விபாசனா பயிற்சி முறையான ஆசிரியரின் நேரடி வழிநடத்தல் இன்றி இயற்றப்படக்கூடாது. நீங்கள் விபாசனை செய்யலாமா கூடாதா என்று ஆசிரியர் முடிவெடுக்கவேண்டும். நீங்கள் விபாசனையில் இருக்கையில் அவர் உங்களை கண்காணிக்கவேண்டும். உங்களுக்கு உருவாகும் சிக்கல்கள், குழப்பங்களை அவர் விளக்கவேண்டும்.
- விபாசனை என்பது இந்திய மரபில் வேதாந்தம், பௌத்தம் என்னும் இரு மரபுகளுக்கு உரியது. இரண்டுமே இறைவழிபாடு சார்ந்தவை அல்ல. இறைவழிபாட்டை அதனுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது.
விபாசனா பயிற்சியின் நோக்கம் என்ன? பயன் என்ன?
இயல்பான ஒரு வினாவாக அதை எழுப்பிக்கொள்ளலாம். நம்மால் ஏன் பத்து நிமிடம்கூட ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கமுடிவதில்லை? ஏன் அப்போது எதையாவது செல்பேசியில் பார்க்கிறோம்? இதழ்களை வாசித்தோ பக்கத்தில் இருப்பவரிடம் பேசியோ அல்லது எதையாவது செய்தோ அந்த நேரத்தை ஏன் போக்குகிறோம்? ஏனென்றால் நம்மால் நம் உள்ளத்தை நேருக்குநேர் பார்க்கமுடிவதில்லை. நம் உள்ளத்தை கையாள நம்மால் முடிவதில்லை. அது கட்டற்று பரவுகிறது. திரும்பத் திரும்ப பொருளின்றி சுழல்கிறது. ஆகவே நாம் அதை நம்மிடமிருந்து மறைக்க எதையாவது செய்கிறோம்.
ஒருவர் தன் உள்ளத்துடன் தனித்திருக்கும்போது , அதாவது ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறாரா அல்லது துயரமாகவோ பதற்றமாகவோ எரிச்சலுடனோ இருக்கிறாரா என்பது அடிப்படையான கேள்வி. அதைக்கொண்டே அவருடைய வாழ்க்கை சரியாக உள்ளதா இல்லையா என்று சொல்லமுடியும். தான் மட்டுமே இருக்கையில் மகிழ்வுடன் இருக்கும் ஒருவர் வாழ்க்கையை மெய்யாக வாழ்பவர். அவருடைய உள்ளத்தின் இயல்பான நிலை மகிழ்ச்சி. உயிரின் இயல்பான நிலை ஆனந்தம் என வேதாந்த நூல்கள் சொல்கின்றன. மகிழ்ச்சியாக இல்லை என்றால் அவர் திரிபடைந்த மனம் கொண்டிருக்கிறார் என்று பொருள்.
அந்த திரிபு என்ன என்று அறியவேண்டுமென்றால் மனதுடன் தனித்திருக்கவேண்டும். மனதை அறியவேண்டும். அதன்பின்னர் மனதைக் கையாள பயிலவேண்டும். அதுவே மெய்யான மகிழ்ச்சிக்கான வழியாக இருக்கமுடியும். உண்மையில் நாம் நம் மனதுடன் தனித்திருந்து, அதை கொஞ்சம் அவதானித்தால் நாம் அர்த்தமே இல்லாத எரிச்சல், பதற்றம், கவலை ஆகியவற்றால் அலைக்கழிகிறோம் என்பது நமக்கே தெரியும். அதை எப்படி கையாள்வதென நாமே கற்றுக்கொள்வோம்.
ஆனால் ஒருவர் தன் உள்ளத்துடன் தனித்திருப்பது எளிதல்ல. அதற்கு முறையான பயிற்சியும் ஆசிரிய வழிகாட்டலும் தேவை. அதையே முதல் வகுப்பில் அமலன் ஸ்டேன்லி அளித்தார். இது அப்பயிற்சியைப் பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட பயிற்சி. இதுவே மெய்யான விபாசனைக்குள் நுழைவது.
இதன் பயன் என்ன? பண்டைக்காலத்தில் பிக்ஷுக்கள் துறவு மனநிலையை அடைய இது உதவியது. இன்றைய வாழ்க்கையில் நம் உள்ளம் செயலில் குவியாமல் சிதறிக்கொண்டே இருப்பதை தடுத்து கூர்ந்து செயல்பட இது உதவுகிறது. அர்த்தமில்லாத அலைக்கழிப்புகளை உள்ளத்தில் இருந்து அகற்றி நிலையான தன்மையை அளிக்கிறது. அதன் விளைவான நிதானம் நம் உறவுகளை மேம்படுத்துகிறது.
ஆர்வமுடையவர்கள் தொடர்புகொள்ளலாம்.
நாள் ஜூன் 12 , 13, 14, 15 மற்றும் 16 (ஐந்து நாட்கள்)
தொடர்புக்கு [email protected]
வரவிருக்கும் நிகழ்வுகள்

நிஷா மன்ஸூர்
கவிஞரும், எழுத்தாளரும், பேச்சாளருமான நிஷா மன்ஸூர் சூஃபி இஸ்லாமிய மரபைச் சேர்ந்தவர். குரு நித்ய சைதன்ய யதிக்கும் அணுக்கமானவராக இருந்தார்.
முழுமை அறிவின் சார்பில் தொடர்ச்சியாக நிஷா மன்ஸூர் நடத்தும் இஸ்லாமிய மெய்ஞான அறிமுக வகுப்புகளை ஒருங்கிணைத்து வருகிறோம். இந்த வகுப்புகளின் தேவை, பயன் என்ன என்பதை பல கோணங்களில் விளக்கியும் இருக்கிறோம்.
ஐந்துகாரணங்களுக்காக இவை நமக்கு தேவைப்படுகின்றன.
- தமிழ் பண்பாடு என்பது நீண்ட சூஃபி பாரம்பரியம் கொண்டது. நாம் வாழும் இடத்திலிருந்து அதை அதிகபட்சம் பத்து கிலோமீட்டருக்குள் ஒரு முக்கியமான சூபி தர்கா இருக்கும். நம் இலக்கியங்களில் சூஃபி கவிஞர் பலர் உள்ளனர். நம் அருகே இருக்கும் இந்த மாபெரும் பண்பாட்டை அறியாமல் நாம் தமிழ் பண்பாட்டை அறிந்தோம் என்று சொல்வது ஒரு மாயையே. இலக்கியம், பண்பாடு சார்ந்த ஆர்வமுடைய எவருக்கும் சூஃபி மரபை அறிவதென்பது ஓர் அடிப்படைத்தேவை.
- சூஃபி மரபு என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியதல்ல. எந்த சூஃபி ஞானியும் இஸ்லாமியர்களுக்காக மட்டும் பேசியவரும் அல்ல. சூஃபி தர்காக்களில் இன்று வணங்குபவர்களின் பாதிவரை பிற மதத்தினரே. அந்த மரபை அறியாமலேயே வெறும் வழிபாட்டிடமாக அவற்றை கருதுகிறோம். அம்மரபை அறிமுகம் செய்வது இதன் நோக்கம்.
- இஸ்லாமியர்களிலேயேகூட பெரும்பாலும் சூஃபி மெய்ஞான மரபு பற்றிய அறியாமையே உள்ளது. அண்மைக் காலத்திலே மையப்போக்கு இஸ்லாமிய நம்பிக்கையாளர் சூஃபி மரபை வெறும் கல்லறை வணக்கம் என்றும், தனிமனித வணக்கம் என்றும் நிராகரிக்கும் சூழல் உள்ளது. சூஃபி மரபு என்பது மனிதர்களையோ அல்லது மனிதர்கள் சார்ந்த இடங்களையோ இறை என வழிபடுவது அல்ல. இறையருளை அறிந்து அதற்கென்று மட்டுமே வாழ்ந்த மனிதர்களை அறிவதும், அதன் வழியாக இறையுணர்வை அடைய முயல்வதும்தான். ஆகவே இஸ்லாமியர் உட்பட அனைவருக்கும் சூஃபி மரபு அறியப்பட வேண்டிய ஒன்று.
- இந்து மெய்ஞான மரபிலேயே சென்று 400 ஆண்டுகளில் உருவான எல்லா மெய்யியல்களிலும் சூஃபி மரபின் நேரடியான செல்வாக்கு உண்டு. யோக -சித்த மரபுகளையும் சூஃபி அடிப்படைகள் உள்ளன. சூஃபி மரபை முற்றும் அறியாத ஒருவர் யோக -சித்த மரபுகளை சரியாக அறிந்திருப்பார் என்று சொல்ல முடியாது. அந்த மரபை முறையாக அனைவருக்கும் அறிமுகம் செய்யும் வகுப்புகள் அனேகமாக தமிழில் இங்கன்றி வேறெங்கும் நிகழவில்லை.
- கலை இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்கள் இந்திய இசையை, இந்தியக் கலையை, இந்திய கவிதைமரபைப் புரிந்து கொள்வதற்கு சூஃபி மரபின் மீதான அறிமுகம் அவசியமானது. சூஃபி இசையே இந்தியாவில் கஸல் என்றும் வெவ்வேறு பெயர்களிலும் உள்ளது. அந்த இசை மரபின் கருத்தியல் உள்ளடக்கம் அதன் கலைப் பார்வை ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கும் இந்த வகுப்புகள் மிக உதவியானவை
நாள் ஜூலை 3 4 மற்றும் 5
தொடர்புக்கு [email protected]










