அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொளிகளில் வெளிவரும் கருத்துக்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். இருபது இருபத்தைந்து நிமிடங்களில் யூடியூப் காணொளிகலில் மிக விரிவான சில விஷயங்களை சொல்கிறீர்கள். அதையே ஐந்து நிமிடங்களில் திரும்ப முகநூலில் சொல்கிறீர்கள். இந்த கருத்துக்களில் நீங்கள் எந்த அளவுக்கு தெளிவாக இருக்கிறீர்கள் என்பதை அது காட்டுகிறது.
இந்த கருத்துக்கள எத்தனை பேருக்கு சென்று சேரும் என்று தெரியவில்லை. ஆனால் ஓரளவுக்காவது இந்த கருத்துக்கள் இங்கே ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக அரசியலுக்கு அப்பால் இங்கே நிறைய விஷயங்கள் உள்ளன என்றும், திரைப்படங்களுக்கு அப்பால் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன என்றும் எவரேனும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
தமிழ்ச் சூழலில் பொதுவாக கருத்துக்களை பேசுபவர்கள் மிகவும் குறைவு. இரண்டு வகையான விஷயங்கள் இங்கே கருத்துக்களாக கருதப்படுகின்றன. ஒன்று, எளிமையான தகவல்கள் .அவை எல்லாம் இன்று விக்கிபீடியாவில் கிடைக்கும். இரண்டு, பிரச்சாரக் கருத்துக்கள். ஏதேனும் ஒரு அரசியல் அல்லது ஏதேனும் ஒரு தரப்பை வலியுறுத்தும் கருத்துக்கள் அவை.
இந்த இரண்டுக்கு அப்பால் சிந்திப்பதற்கும், சுயமாக பயணத்தை செய்வதற்குமான ஒரு தொடக்கத்தை அளிக்கும் கருத்துக்களை பேசுபவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். நீங்கள் ஒவ்வொரு சிந்தனைகளை பற்றியும் வெவ்வேறு மரபுகளை பற்றியும் இதேபோன்று சிறு சிறு காணொளிகளை வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.
முகநூல் காணொளி வழியாக வரும் ஒருவர் உங்கள் யூடியூப் சேனலுக்கு வரமுடியும். அங்கிருந்து உங்கள் தளத்திற்கு வர முடியும். அவர் வாசிக்கும் பழக்கத்திற்கும் வரமுடியும் என்று நினைக்கிறேன். உங்கள் நூல்களை நோக்கி வாசல்களை கொண்டு செல்வதற்கு இந்த படிகள் மிக அவசியமானது.
சமகாலத்தில் இவ்வாறு தமிழ் சமூகத்துடன் இடைவெளி இல்லாமல் பேசிக் கொண்டிருப்பவர் குறைவு. அரசியல் நோக்கமும் அதிகார நோக்கமும் இல்லாமல் இவ்வளவு தீவிரமான பணியை ஒருவர் ஆற்றுவது என்பது மிக அரிதான ஒரு விஷயம். சென்ற நூற்றாண்டு தமிழறிஞர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் இருந்த அந்த வேகத்தை இப்போது உங்களிடம் பார்க்கிறேன்.
ஆ.நமச்சிவாயம்











