அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் புத்தகங்களில் கதைகளைத்தான் நான் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் புனைகதைகளை சரியாகப் புரிந்து கொள்வதற்கு உங்களுடைய கட்டுரைகள் மேலும் உதவியானவை என்பதை கொஞ்சம் பிந்தித்தான் கண்டு கொண்டேன்.
விஷ்ணுபுரம் நாவலைப் படிப்பதற்கு இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் மிக உதவியாந புத்தகம். இந்துஞான மரபில் ஆறுதரிசனங்கள் நூலை படிப்பதற்கு உங்கள் தத்துவ வகுப்புக்கு வருவது அவசியம் என்று தோன்றுகிறது.
காடு நாவலை அல்லது கடல் நாவலை படிப்பதற்கு கிறிஸ்தவ மெய்ய்யியலில் ஒரு அறிமுகம் இருப்பது மிக அவசியம். இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் மரீஃபா நாவலை படிப்பதற்கு இஸ்லாமிய சூபி மெய்யியல அறிமுகம் இருப்பது அவசியம்.மேலைநாட்டு தத்துவ சிந்தனையில் ஒரு அறிமுகம் இருக்கும் என்றால் பின் தொடரும் நிழலின் குரல் இன்னும் தெளிவாக புரியும் என்று தோன்றுகிறது.
அப்படி பார்த்தால் இந்த பயிற்சி வகுப்புகள் எல்லாமே உங்கள் படைப்புகளை நோக்கி வருவதற்கான சிறந்த வழிகளாக அமைந்திருக்கின்றன. விஷ்ணுபுரம் வாசிக்கும் போது எனக்கு இருந்த குழப்பங்கள் ஆலய் வகுப்புக்கு வந்த பிறகு அகன்று அந்நாவல மேலும் துல்லியமாகியமாக மாறியது. விஷ்ணுபுரம் முன்வைக்கும் சிற்பம் சார்ந்த நுட்பங்கள் மட்டுமல்ல அவற்றை அது உருவகமாக எப்படி எல்லாம் பயன்படுத்துவது என்பதற்கும் ஆலய பயிற்சி வகுப்புதான் மிக சரியான ஒரு வழிகாட்டலாக அமைந்தது.
புத்தகங்கள் பயிற்சி வகுப்புகள் உரைகள் என ஒட்டுமொத்தமான ஒரு அறிவுச்செயல்பாடாகவே உங்கள் பணி இருப்பதை புரிந்து கொள்கிறேன்.
செந்தில்












