கண்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொளிகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் காணொளிகளில் ஒன்றில், நீங்கள் கலைத்திரைப்படங்களின் வரலாற்றைப் பற்றி பேசிருந்ததைப் பார்த்தேன். இரண்டு காணொளிகளென்று நினைக்கிறேன். அவை அதிகமான பேரால் பார்க்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
பொதுவாக, காணொளிகளைப் பார்ப்பவரின் மனநிலை என்பது ஏதோ ஒருவகையில் ஏற்கனவே அவர்களுக்கு தெரிந்ததையோ, அல்லது அவர்களுடைய பிரச்சனையாக எதை நினைக்கிறார்கள் என்பதையோ, சொல்லும் கட்டுரைகளுக்கும் காணொளிகளுக்கும்தான் அவருடைய ஆர்வம் செல்கிறதே ஒழிய, ஒரு புதிய கருத்தை அல்லது புதிய வரலாற்றை, அல்லது புதிய ஒரு செய்தியை தெரிந்துக்கொள்ளும் எண்ணமிருப்பதில்லை என்று நான் கண்டிருக்கிறேன்.
யூடியூப் என்பதே பெரும்பாலானவர்கள், அவர்களுக்கு உடன்பாடானவற்றை தேடிப் பார்ப்பதுதான். யூடியூபே, அவர்களுக்கு ஏது உடன்பாடு, எது பிடிக்கும் அதைத்தான் திரும்பத் திரும்பக் காட்டுகிறது. ஆகவே, அவர்களுக்கு அப்பாலுள்ள ஒரு விஷயத்தை யூடியூப் வழியாக தெரிந்துக்கொள்ளவே முடியாது. ஒருவர் வேண்டுமென்று திட்டமிட்டு தன்னுடைய கருத்துக்கு மாறான கருத்து என்ன, தன்னுடைய அறிவு வட்டத்திற்கு வெளியே என்ன இருக்கிறது, என்று யூடியூபில் தேடிக் கண்டுபிடித்தால் ஒழிய, யூடியூப் வழியாக ஒருவர் புதிய விஷயங்களுக்கு போக முடியவே முடியாது.
நான் தனிப்பட்ட முறையில் ஆன்மீகமான விஷயங்களில் ஈடுபாடு கொண்டவந். ஓஷோ வழியாக உங்களை வந்தடைந்தேன். ஜெயமோகன் என்ற பெயர் வழியாகத்தான் எனக்கு யூடியூப் உங்களை அறிமுகம் செய்தது. யூடியூப்லே உங்களுடைய உரைகளைப் பார்த்த பிறகுதான் நான் தொடர்ந்து வேறு உரைகளை தேடி கண்டுபிடித்து, இந்த தளத்திற்கு வந்து சேர்ந்தேன். உங்களுடைய இணையப்பக்கத்தைத்தான் இப்போது அதிகமாக படித்துக் கொண்டிருக்கிறேன். வேலைக்குப் போகும்போது, பெருந்தில், உங்களுடைய உரைகளை காதில் கேட்டுக் கொண்டுச் செல்வேன்.
தொடர்ச்சியாக என்னை, எளிமையான சள்ளைச் சச்சரவுகளை விட்டு, ஆழமான சிந்தனைகளை நோக்கிக் கொண்டு செல்வதும், ஒரு நாள் முழுக்க என்னை ஒரு தீவிர மனநிலையில் கொண்டு வைக்கவும் இந்த உரைகளால் முடிகிறது. இவை எனக்கு அளிக்கும் அகவிடுதலை என்பது மிக முக்கியமானது. எந்தவகையான உலவியல் ஆலோசனைகளையும் விட, இந்த அகவிடுதல் மிகவும் முக்கியமானது.
திரும்பத் திரும்ப, ஆக்கப்பூர்வமான செயல்வழியாக ஒரு நிறைவு, அதிலிருந்து கிடைக்கும் விடுதலையான வெற்றியைப் பற்றித்தான் உங்களுடைய எல்லா காணொளிகளும் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்று தோன்றுகிறது.
என்னுடைய அந்தரங்க கனவு என்பது, ஒரு நாள் ஒரு நல்ல திரைப்படத்தை தயாரித்திட வேண்டும் என்பதுதான். ஒரு இயக்குனராக, அல்லது திரைக்கதையாசிரியராக, திரைக்கதை உருவாக்குவதில் பங்கு கொள்வவராக, நான் என்னை கற்பனை செய்துக் கொள்கிறேன். உங்கள் கலைப்படம் பற்றிய உரையைப் பார்க்கும்போது, எனக்கு, என்றோ ஒரு நாள் மிகக் குறைந்த செலவில் என்னாலும் ஒரு படம் எடுத்துவிட முடியும் என்ற கனவு அமைகிறது.
இன்று, இந்த கலைப்பட இயக்கம் என்பது சற்று பலவீனமான நிலையில் இருக்கலாம். ஆனால், இந்த வினியோக முறைகள் இன்னும் கொஞ்சம் உலகளாவாக மாறியுள்ளன. இன்று, நூற்றுக்கணக்கான திரைப்பட விழாக்களுக்கு, அதிக செலவின்றியே இந்த பிரதிகளை நம்மால் அனுப்பிவிட முடியும். ஒரு ஐம்பது லட்சம் ரூபாயை ஒருவர் திரட்டிவிட்டாரென்றால், எப்படியானாலும் ஒரு நல்ல படத்தை எடுத்துவிட முடியும்.
இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. எதிர்காலத்தில், ஒரு நல்ல படத்தை நானும் எடுத்துவிடுவேன் என்ற கனவை நான் நினைக்கிறேன். அந்த கனவை உருவாக்கிய அந்த இரண்டு காணொளிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஜெயராஜ் தங்கபாண்டி












