நவீன மருத்துவ அறிமுகம் ஏன் தேவை?

அன்புள்ள ஜெயமோகன்,

ஏற்கனவே ஒரு கேள்விக்கான உங்கள் பதிலில், நவீன மருத்துவம் ஏன் இந்திய இளைஞர்களுக்கும், அறிவுத்தேடல் கொண்டவர்களுக்கும் அடிப்படையான கல்வியாக இருக்க வேண்டும் என்று பேசியிருந்தீர்கள். அந்த எண்ணம் எனக்கும் நீண்ட நாட்களாக உண்டு.

நானும் நீண்ட காலம் மருத்துவம் என்பது நோய்வந்த பிறகு மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதற்கான துறை மட்டுமே என்று நினைத்திருந்தேன். ஆனால் பின்னர் ஒரு விஷயம் தெளிவானது. ஒருவர் தன் உடல் எப்படி செயல்படுகிறது, அதன் அடிப்படை அமைப்பு என்ன, நோய்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை அறிந்திருக்கவில்லை என்றால், நோயைத் தவிர்ப்பது மிகவும் கடினம். பெரும்பாலானவர்கள் நோய் வந்த பிறகுதான் மருத்துவரை அணுகுகிறார்கள். அதன் பிறகு செய்யக்கூடியது நோயைக் கட்டுப்படுத்துவதுதான்; நோயே வராத வாழ்க்கையை உருவாக்குவது அல்ல.

உண்மையில், நோயற்ற நிலையை அடைவதற்கான ஒரே வழி, நோய் வராதபடி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதுதான். அதற்கு நம் உடலைப் பற்றிய அடிப்படை அறிவு அவசியம்.

உதாரணமாக, இந்தியாவில் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானது என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. வயிறு நிறைய, சுவையாகச் சாப்பிட்டால் நல்ல உணவு உண்டுவிட்டோம் என்று நினைக்கிறோம். ஆனால் மனித உடலுக்குத் தேவையானது சுவை மட்டுமல்ல; புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் சரியான அளவிலும் விகிதத்திலும் கிடைக்க வேண்டும். ஏன் அவை தேவைப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளும் ஒருவருக்குத்தான் தன் உணவைப் பற்றிய உண்மையான விழிப்புணர்வு உருவாகும்.

நாம் அன்றாடம் உண்ணும் பல இந்திய உணவுகளில் பெரும்பகுதி மாவுச்சத்தையே பல்வேறு வடிவங்களிலும் சுவைகளிலும் மாற்றிச் சாப்பிடுகிறோம். ஆனால் அதையே பாரம்பரியமான, முழுமையான உணவு என்று கருதுகிறோம். நம் உணவில் புரதம் மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக சைவ உணவை மட்டுமே உட்கொள்பவர்களில் பலருக்கு புரதக் குறைபாடு இருப்பது ஒரு பொதுவான பிரச்சினை. அதே நேரத்தில் தேவைக்கு அதிகமான எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்கிறோம்.

உணவைப் பற்றிய இந்த அடிப்படைப் புரிதல் வந்தாலே வாழ்க்கை முறையில் ஒரு ஒழுக்கமும் எச்சரிக்கையும் உருவாகும். அதன் விளைவாக உடல்நலமும் செயல்திறனும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும். உதாரணமாக, இன்சுலின் உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது மட்டுமே கூட, நம் அன்றாட உணவுப் பழக்கத்தையும் வாழ்க்கை முறையையும் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் அமைத்துக்கொள்ள உதவும்.

உடலைப் பற்றி அறிந்துகொள்வது என்பது, இந்தப் பிரபஞ்சத்தையோ இயற்கையையோ அறிந்துகொள்வதைப் போலவே ஆழமான, சுவாரஸ்யமான ஒரு கல்வி என்று நான் நினைக்கிறேன்.

நான் ஐரோப்பாவில் இருந்தபோது, ஒரு பொது நூலகத்தில் நடத்தப்பட்ட அடிப்படை மருத்துவப் பயிற்சியில் கலந்து கொண்டேன். அது பன்னிரண்டு நாட்கள் நடைபெற்ற ஒரு குறுகிய பயிற்சி. தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே. ஆனால் அந்தப் பயிற்சி என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Dr Mariraj

கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக என் உடல்நலத்தைப் பேணிக்கொண்டு, செயல்திறனை வளர்த்துக்கொண்டு இருக்கிறேன் என்றால், அதற்கு முக்கியமான காரணம் அந்தப் பயிற்சிதான். அதுபோன்ற அடிப்படை மருத்துவக் கல்வியை நமது மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு யாரும் வழங்குவதில்லை. மருத்துவர்களுக்கு அதற்கான நேரமும் வாய்ப்பும் இருப்பதில்லை. மறுபுறம், இதுபோன்ற வழிகாட்டல்கள் பெரும்பாலும் அதிகச் செலவுடைய தனியார் நலவாழ்வு மையங்களிலோ, பணக்காரர்களுக்கான கிளப்புகளிலோதான் கிடைக்கின்றன.

ஆனால் குறைந்த செலவில், பொதுமக்கள் எளிதில் பங்கேற்கக்கூடிய வகையில் இப்படிப்பட்ட பயிற்சிகளை வழங்குவது ஒரு மிக முக்கியமான சமூகப் பணி என்று நான் கருதுகிறேன். இதன் அவசியத்தை எத்தனை பேர் உணர்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இது மேலும் பலரிடம் சென்று சேர வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன்.

நன்றி.

ஆ.திருநாவுக்கரசு

முந்தைய கட்டுரைநவீன மருத்துவ அறிமுகம்